பட்டுப் பாதையின் எழுச்சியும் வீழ்ச்சியும்

பட்டுப் பாதையின் எழுச்சியும் வீழ்ச்சியும்
Updated on
1 min read

மார்கோ போலோவும் அவருடைய அப்பா, சித்தப்பாவும் நீண்ட காலம் சீனாவில் இருந்துவிட்டுக் கடல் வழியாக வெனிஸ் நகரம் திரும்பினார்கள். புகழ்பெற்ற ‘பட்டுப் பாதை' வழியாகச் சீனாவை அடைந்த அவர்கள், திரும்பும்போது கடல் வழியையே தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவர்களுக்குப் பிந்தைய காலத்தில் ‘பட்டுப் பாதை' என்ற தரைவழிப் பாதையைத் தவிர்த்துவிட்டு, பாதுகாப்பான கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் ஐரோப்பியர்கள் தீவிரம் காட்டினர்.

கண்டங்கள் இணைப்பு

சீனாவில் இருந்து பெரும் வருவாயைத் தரும் பட்டைப் பெற முடிந்ததால், மத்தியத் தரைக் கடல் நாடுகள் வழியாகச் சீனாவைச் சென்றடையும் பாதை ‘பட்டுப் பாதை' என்றழைக்கப்பட்டது. பல கண்டங்களை இணைக்கும் வணிகப் பாதையாக அது திகழ்ந்தது.

கிழக்கு நாடுகளையும் மேற்கு நாடுகளையும் இணைக்கும் பழம் பெரும் பாதை இது. கி.மு. 500-ல் இருந்து கி.பி. 1650 வரை இதுதான் முக்கியப் பாதையாக இருந்தது. இப்படி நீண்ட காலத்துக்குப் பயன்பட்ட இந்தப் பாதை வரலாற்றிலும், இலக்கியத்திலும் போற்றப்பட்டுள்ளது.

வணிக வளம்

இந்தப் பாதையின் பெரும் பகுதி பாலைவனம்தான். இந்தப் பாதையில் பாலைவனங்களின் விளிம்புகளில் இருந்த பாலைவனச் சோலைகள்தான் யாத்ரீகர்களுக்கு ஓய்வு அளிப்பதாக இருந்தன.

அந்தக் காலத்தில் சீனா பெற்றிருந்த வளமும், புகழும் பட்டுப் பாதை வழியாகவே ஐரோப்பாவைச் சென்றடைந்தன. சீனாவில் பட்டுடன் கிடைத்துக் கொண்டிருந்த மற்றொரு முக்கியமான விஷயம் சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட பீங்கான் பொருட்கள். இந்த இரண்டு பொருட்களையும் வியாபாரம் செய்யும் வணிகர்கள்தான், இந்தப் பாதையைப் பெருமளவு பயன்படுத்தினார்கள்.

புதிய பாதை

ஐரோப்பா - ஆசியாவை இணைத்த பட்டுப் பாதை கி.பி. 1453-ல் முற்றிலுமாக அடைக்கப்பட்டது. ஒட்டோமான் பேரரசு கான்ஸ்டான்டிநோபிள் நகரத்தைப் பிடித்ததன் காரணமாக, இந்தத் தடை ஏற்பட்டது. இந்த ஊர் பட்டுப் பாதையின் முக்கிய மையமாக இருந்தது.

அந்த ஊரே ஆசியாவுக்கான நுழைவாயில் என்று சொல்ல வேண்டும். அது அடைக்கப்பட்டதால், அதைத் தவிர்த்த புதிய வழியை ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு சென்று கண்டுபிடிக்க வேண்டுமென போர்த்துகீசியர்கள் நினைத்தனர். அதன் மூலம் சீனா, இந்தியாவிலுள்ள வளத்தை அடையலாம் என்று அவர்கள் நம்பினார்கள். சீனா-இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் ஐரோப்பியர்களை ஈர்த்ததற்குக் காரணம் பட்டு, பீங்கான் போன்றவற்றுடன் மாணிக்கக் கற்கள், மிளகு, இஞ்சி போன்ற நறுமணப் பொருட்கள் கிடைத்ததுதான்.

15-ம் நூற்றாண்டில் சீனா, ஜப்பான், இந்தியா போன்ற தூரக் கிழக்கு நாடுகளுக்குப் புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் ஐரோப்பிய நாடுகள் தீவிர ஆர்வம் கொண்டன. அதற்குக் காரணம், இயற்கை வளங்களைப் பெறுவது மட்டுமில்லாமல், அந்நாடுகளில் வணிகம் செய்து பொருள் ஈட்டலாம் என்ற எண்ணமும்தான். பட்டுப் பாதையை நம்பி இருப்பதால் தரைவழியில் சில நாடுகளில் ஏற்படும் தொந்தரவு, தடையைத் தவிர்க்க கடல் வழிவகுக்கும் என்று அவர்கள் நம்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in