Last Updated : 24 Jul, 2017 10:45 AM

 

Published : 24 Jul 2017 10:45 AM
Last Updated : 24 Jul 2017 10:45 AM

பத்துக்கு 6 பழுதுதான்!

`வாகன உலகம்’ பகுதியில் இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் பகீர் என்றிருக்கும். தயாராகும் வாகனங்களில் 10-ல் 6 வாகனங்கள் பழுதானவையா என நினைக்கத் தோன்றும். இதுதான் இயல்பு. ஆனால் இங்கே குறிப்பிடப் போவதோ அதைவிட அபாயகரமான விஷயம்.

நாட்டில் வாகன லைசென்ஸ் பெறுபவர்களில் 10 பேரில் 6 பேரிடம் வாகனம் ஓட்டிக் காட்டச் சொல்வதேயில்லையாம். அதாவது 4 பேர் மட்டுமே நேர்மையாக வாகனத்தை ஓட்டிக் காட்டி லைசென்ஸ் பெறுகின்றனர். மற்றவர்கள் அவர்களுக்கு `தெரிந்த’ வழியில் வாகனத்தை ஓட்டாமலேயே லைசென்ஸ் பெற்றுச் செல்கின்றனர்.

இது நாட்டின் ஒரு பகுதியில் மட்டும் நிகழவில்லை. லைசென்ஸ் எவ்விதம் வழங்கப்படுகின்றன என்பது தொடர்பாக ஒரு தன்னார்வ அறக்கட்டளை அமைப்பு 5 பெரு நகரங்கள் உள்பட 10 நகரங்களில் மேற்கொண்ட ஆய்வு முடிவில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த நகரங்கள் அனைத்துமே அதிக வாகன நெரிசல் கொண்டவை என்பதுதான் மேலும் அதிர்ச்சியான விஷயமாகும்.

ஆக்ரா நகரில் 12 சதவீத வாகன ஓட்டிகள் நேர்மையாக வாகனங்களை ஓட்டிக் காட்டி லைசென்ஸ் பெற்றுள்ளனர். 88 சதவீதம் பேர் ஸ்டீரிங் வீலை பிடிக்காமலேயே லைசென்ஸ் பெற்றதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இதே போல 72 சதவீதம் பேர் ஜெய்ப்பூரிலும், 64 சதவீதம் பேர் கௌஹாத்தியிலும் வாகனத்தை ஓட்டிக்காண்பிக்காமலேயே லைசென்ஸ் பெற்றுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் 54 சதவீதம் பேர் வாகனத்தை ஓட்டிக் காட்டவில்லை. மும்பையில் 50 சதவீதம் பேர் இதேபோல லைசென்ஸ் பெற்றுள்ளனர்.

சாலை பாதுகாப்பு குறித்த `சேவ் லைஃப் அறக்கட்டளை’ (SaveLife Foundation) இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இந்த அறக்கட்டளைதான் சாலை பாதுகாப்பு தொடர்பாக மாநிலங்களவை குழுவுக்கு ஆலோசனைகள் வழங்குகிறது. இக்குழுவின் பரிந்துரைகளின் பேரில்தான் மோட்டார் வாகன சட்டம் இயற்றப்படுகிறது.

இந்த அறக்கட்டளை சமீபத்தில் அளித்த பரிந்துரையின்படி தொழில்நுட்ப அடிப்படையில் வாகனம் ஓட்டிக் காண்பிக்கப்பட வேண்டும். அதில் தேர்வு பெற்றால் மட்டுமே லைசென்ஸ் என்ற முறையை பரிந்துரைத்தது. இதுதான் சமீபத்தில் மத்திய தரைவழி அமைச்சகம் சட்டமாகக் கொண்டுவந்தது.

தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்துவதன் மூலம் லைசென்ஸ் வழங்குவதில் உள்ள முறைகேடுகள் தடுக்கப்படும் என்றும் போலி லைசென்ஸ் வைத்திருப்போருக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் வாகனங்களை சரி வர ஓட்டிக் காண்பித்து லைசென்ஸ் பெறுவதற்கான வழி வகைகள் குறைவாக உள்ளன. இதற்கான அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. மேலும் திறமையற்ற நிர்வாகம், லைசென்ஸ் வழங்குவதில் நிலவும் ஊழல் ஆகியன இதுபோன்ற முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 997 மண்டல போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) உள்ளன. இவை ஆண்டுதோறும் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட லைசென்ஸாக 1.15 கோடி வழங்குகிறது. சராசரியாக நாளொன்றுக்கு ஒரு ஆர்டிஓ அலுவலகம் தனது வேலை நாளில் 40 லைசென்ஸ்கள் வழங்குகிறது. இதுவே தலைநகர் டெல்லியில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 130 லைசென்ஸ் வரை வழங்கப்படுகிறது. பெரும்பாலும் ஆர்டிஓ அலுவலகங்களில் தரகர்களின் ஆதிக்கம்தான் நிலவுவதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. லைசென்ஸ் வழங்கும் அதிகாரி நாளொன்றுக்கு அதிகபட்சம் 20 பேருக்கு லைசென்ஸ் வழங்கலாம். 150 பேருக்கு ஒருவர் லைசென்ஸ் வழங்குவது என்பது சாத்தியமற்றது என்று குறிப்பிட்டிருந்தது.

வாகனம் ஓட்டி காண்பிப்பது அவசியம்

இது தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில் நிதின் கட்கரி பேசுகையில், பொதுமக்கள் மட்டும் வாகனம் ஓட்டிக் காண்பிக்காமல் தப்பிக்கவில்லை. மக்களவை உறுப்பினர்களில் எத்தனை பேர் வாகனங்களை ஓட்டிக் காண்பித்து லைசென்ஸ் பெற்றிருப்பார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவ்வளவு பேர் ஆர்டிஓ அலுவலகம் சென்று வாகனம் ஓட்டிக் காண்பித்து அதன் பிறகு லைசென்ஸ் பெற்றிருப்பர். இத்தகைய சூழலில் வாகனம் ஓட்டிக் காண்பிப்பதை கட்டாயமாக்க வேண்டியது அவசர அவசியமாகிறது என்று கட்கரி கூறினார்.

வாகனம் ஓட்டுவதில் மிக முக்கியமான விஷயங்களை வாகன ஓட்டிகளுக்கு பல சமயங்களில் சொல்லித் தருவதில்லை. குறிப்பாக பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது எப்படி, எந்தெந்த சமயங்களில், எந்தெந்த நிகழ்வுகள் கண்ணுக்குத் தட்டுப்படாமல் போகலாம் என்பன சொல்லித் தரப்படுவதில்லை. வாகனத்துக்கு இடையிலான தூரம் எவ்வளவு இருக்க வேண்டும், பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு சொல்லித் தரப்படுவதில்லை என்று அறக்கட்டளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் ஓட்டுவது ஆபத்தானதுதான் என்று சாலையைப் பயன்படுத்துவோரில் 82% பேர் கருதுகின்றனர். பாதசாரிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதுதான் 80 சதவீதம் பேரின் கருத்தாக உள்ளது. ஆய்வு செய்யப்பட்டவர்களில் பாதிப்பேர் தாங்கள் சாலை விபத்துகள் மற்றும் மரணங்களை கவனித்ததாக தெரிவித்துள்ளனர். 31% பேர் தங்களது குடும்ப உறுப்பினர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததாக தெரிவித்தனர். 16 சதவீதம் பேர் தங்களது நெருங்கிய உறவினர், குடும்ப உறுப்பினர்களை சாலைவிபத்தில் பறி கொடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

கடுமையான சட்டங்களால் மட்டுமே சாலை விபத்துகளைக் குறைக்க முடியும் என்று 91 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கடுமையான அபராதம் மட்டுமே சாலை விபத்துகளைக் குறைக்க உதவும் என்று 81 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அரசு கொண்டு வரும் கடுமையான சட்டங்கள் மட்டுமே சாலை விபத்துகளை குறைக்க உதவும் என்று பெரும்பாலானோர் தெரிவித்ததாக அறக்கட்டளை நிறுவனர் பியுஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

போர், உயிர்கொல்லி நோய் மற்றும் இயற்கை சீற்றங்களிலோ உயிரிழப்போர் எண்ணிக்கையை விட சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம்.

10 பேரில் 6 பேர் வாகனத்தை ஓட்டிக்காண்பிக்காமல் லைசென்ஸ் பெற்றிருந்தால் சாலை விபத்துகள் குறையுமா?

- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x