காத்திருக்கும் பசுமைப் பணிகள்

காத்திருக்கும் பசுமைப் பணிகள்
Updated on
2 min read

கனிம எரிபொருட்கள் பூமி முழுவதும் குறைந்துவருகின்றன. அதுமட்டுமல்லாமல் கனிம எரிபொருட்களால் புவி வெப்பமடைந்து, பருவநிலைகளைப் பாதித்துவருகிறது. இந்நிலையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியே நிலைத்த எதிர்காலமாக இருக்கப்போகிறது. சிக்கனமான விலையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்களை உருவாக்க அனைத்து நாடுகளும் முயன்று வருகின்றன. இந்தப் புதிய தொழில்நுட்பத் திட்டங்கள் புதிய பொருளாதாரத்தையும் உருவாக்கவுள்ளன.

காற்று மற்றும் சூரிய ஆற்றல் உற்பத்தி துறையில் மூன்று லட்சத்துக்கும் மேல் நேரடி வேலைவாய்ப்புகளும் 10 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளும் வரும் ஐந்தாண்டுகளில் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் கழகமான சி.இ.இ.டபிள்யு. (Council on Energy, Environment and Water) மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு சபையான என்.ஆர்.டி.சி. (Natural Resources Defense Council) ஆகிய அமைப்புகளின் ஆய்வறிக்கைகள் இத்தகவலைத் தெரிவித்துள்ளன.

2022-க்குள் 175 கிகா வாட்ஸ் அளவில் புதுப்பித்தக்க எரிபொருளிலிருந்து மின்சார ஆற்றலை உருவாக்க வேண்டுமென்பதே இந்தியாவின் தற்போதைய இலக்கு. 2016 மற்றும் 2017-ல் மட்டும் சூரிய, காற்று, மின்சார உற்பத்தித் துறையில் இதுவரை 21 ஆயிரம் பேர் புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.

புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பத்தில் இன்றைய நிலை

அதிலும் சூரிய ஒளித் தகடுகள் உற்பத்தித் தொழில்துறையானது கூரையில் பொருத்தும் தகடுகள் பிரிவில் மட்டுமே அதிகப்படியான வேலைவாய்ப்பை தர இருக்கிறது. அதாவது இந்தப் பிரிவு மட்டுமே புதிய வேலை கிடைக்கப்போகும் 100-ல் 70 பேருக்கு வேலை அளிக்கப்போவதாக சி.இ.டபிள்யூ. மற்றும் என்.ஆர்.டி.சி.யின் ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது. பெரிய அளவிலான சூரிய ஆற்றல் மின்சாரத் திட்டங்கள் நடக்கும் இடங்களைவிடக் கூரையில் பொருத்தும் சூரிய ஆற்றல் தகடுகள் உற்பத்தித் தொழிலில்தான் கூடுதலாக ஏழு மடங்கு பேருக்கு வாய்ப்புகள் உள்ளன.

சூரிய ஒளித்தகடுகளை நிர்மாணிப்பவர்கள், பராமரிப்புப் பணியாளர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் செயல்திறன் கண்காணிப்பாளர்கள் எனப் பலவிதமான பணிகள் இத்துறையில் உருவாக உள்ளன.

தற்போதைக்கு இந்தியா, காற்று மின்சார உற்பத்திக்காக 32.2 கிகாவாட் திறனுள்ள காற்றாலைகளையும், 12.2 கிகாவாட் திறனை உற்பத்தி செய்யும் சூரிய மின்சார உற்பத்தி நிலையங்களையும் கொண்டுள்ளது.

எட்டுக் காற்று மாநிலங்கள்

மகாராஷ்டிராவிலும், உத்தரப்பிரதேசத்திலும் சூரிய மின் ஆற்றல் தொழில்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன. காற்று மின்சார உற்பத்திக்குச் சாதகமான மாநிலங்களில் அது சார்ந்த வேலைவாய்ப்புகள் கூடும். இந்தியாவில் காற்று மின்சார ஆற்றல் உற்பத்திக்கு அதிக வாய்ப்புள்ள மாநிலங்களாக ஆந்திரப் பிரதேசம், குஜராத், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய எட்டு மாநிலங்கள் திகழ்கின்றன. இந்த மாநிலங்களில் காற்று மின்சார ஆற்றல் உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பாகப் பயிற்சிக் கூடங்களை மாநில அரசுகள் உருவாக்குவதற்கும் இந்த ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் சூரிய ஆற்றல் தொழில்நுட்பக் கூடங்களின் முதல்கட்டக் கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் 80 சதவீதம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். “கூரை சூரிய மின் ஆற்றல் போட்டோ வோல்டாயிக் ஒளித்தகடுகள் உற்பத்திக்கு மத்திய, மாநில அரசுகள் கொள்கை அளவில் ஆதரவு அளித்தால் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்று சி.இ.இ.டபிள்யு .அமைப்பின் புரோகிராம் அசோசியேட்டான நீரஜ் குல்தீப் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத ஆற்றல் உற்பத்தித் தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்புகளும் பசுமையான சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கனிந்து வருவதை இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in