Last Updated : 19 Jul, 2017 04:34 PM

 

Published : 19 Jul 2017 04:34 PM
Last Updated : 19 Jul 2017 04:34 PM

விக்கிபீடியா விளையாட்டும் சாகசமும்!

பணி நிமித்தமாகத் தகவல்களைத் தேட இணையத்தைப் பயன்படுத்துவதை நீங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கலாம். இணைய ஆய்வில் களைப்பு ஏற்பட்டால் அல்லது பணிக்கு நடுவே ஒரு மாறுதலுக்காக இணையத்தில் விளையாட்டாகப் பொழுதைக் கழித்து இளைப்பாறுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கலாம். அது யூடியூப்பில் நகைச்சுவை வீடியோவாக இருக்கலாம் அல்லது பிரவுசரில் விளையாடும் விளையாட்டாகவும் இருக்கலாம். எல்லாம் சரி, எப்போதாவது நீங்கள் விளையாட்டாகத் தகவல்களைத் தேடியது உண்டா?

அதாவது குறிப்பிட்ட தகவலை தேடாமல், அறிதல் நோக்கில் எதையாவது தேடிய அனுபவம் உண்டா? இத்தகைய அனுபவம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, விக்கிபீடியா கட்டுரைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டு உங்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும். ஏனெனில், ‘விக்கிபீடியா; தி டெக்ஸ்ட் அட்வெஞ்சர்’ எனும் இந்த விளையாட்டு, விக்கிபீடியா கட்டுரைகளை விளையாட்டு வடிவில் படிக்கவைக்கிறது.

குறிப்பிட்ட தலைப்பில் தகவல் தேவையெனில் நேராக விக்கிபீடியாவில் தேடிப் பார்க்கலாம். மேலும், பல நேரங்களில் கூகுளில் தகவல்களைத் தேடும்போதும் பெரும்பாலும் தேடப்படும் பதம் தொடர்பான விக்கிபீடியா பக்கம் முன்வந்து நிற்பதைப் பார்த்திருக்கலாம்.

புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள், விக்கிபீடியாவுக்குள் நுழைந்து எந்தவித இலக்கும் இல்லாமல் ஏதாவது ஒரு கட்டுரையிலிருந்து தொடங்கி, தொடர்ந்து வெவ்வேறு கட்டுரைகளாகப் படிக்கும் வழக்கமும் கொண்டிருக்கலாம். ஆங்கில விக்கிபீடியாவில் மட்டும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றிருப்பதால், இப்படி மனம்போன போக்கில் கட்டுரைகளைப் பின்தொடர்ந்து செல்வது புதிய சுவாரசியமான தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவும். விக்கிபீடியாவில் சுவாரசியமான மற்றும் விநோதமான கட்டுரைகளுக்குக் குறைவில்லை என்பதால் இந்தத் தேடல் பயணம் சாகசம் மிக்கதாகவே இருக்கும்.

ஆனால், எல்லோருக்கும் இந்தப் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. அதனால் என்ன, இந்தச் சாகசத்தை எல்லோருக்கும் சாத்தியமாக்குவதற்காகத்தான் விக்கிபீடியா கட்டுரைகள் சார்ந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த கேவன் டேவிஸ், இதை உருவாக்கியுள்ளார்.

விக்கிடெக்ஸ்ட் விளையாட்டுக்கான தளத்தில் (http://kevan.org/wikitext/) நுழைந்ததுமே, கட்டுரைத் தேடலைத் தொடங்குவதற்கான குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்தக் குறிப்புகள் ஒவ்வொன்றும் ஒரு இடத்தைக் குறிக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்தால், அந்த இடம் தொடர்பான விக்கிபீடியா கட்டுரையின் சுருக்கம் மற்றும் தொடர்புடைய ஒளிப்படம் இடம்பெறும். அந்தத் தகவல்களைப் படித்து முடித்தால், கீழே அடுத்த கட்டுரைக்கான இணைப்பு இடம்பெற்றிருக்கும். அந்த இணைப்பு இன்னொரு இடத்துக்கு அழைத்துச்செல்லும். பட்டியலில் உள்ள இடங்களைத் தவிர, பயனாளிகள் தங்கள் மனதில் உள்ள ஏதேனும் இடத்தை டைப் செய்தும் தேடலாம்.

இதில் என்ன சுவாரசியம் என்றால், குறிப்பிட்ட இடத்திலிருந்து அடுத்த கட்டுரைக்கு எந்தத் திசையில் வேண்டுமானாலும் செல்லலாம். தேர்வு செய்யும் திசைக்கு ஏற்ப வெவ்வேறு இடம் தொடர்பான கட்டுரைச் சுருக்கங்களைப் படிக்கலாம். இதன் மூலம் முற்றிலும் புதிய இடங்கள் தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்தத் தேடலும் ஒரு சாகச விளையாட்டுபோல சுவாரசியமாகவே இருக்கும்.

உதாரணத்துக்கு, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை கிளிக் செய்தால், அந்த மாளிகளையில் உள்ள ஒவ்வொரு அறை தொடர்பான விக்கிபீடியா தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். அடுத்தடுத்து இடங்களுக்குச் செல்வது அலுப்பாக இருந்தால், திடீரென ஏதாவது ஒரு இடத்துக்குத் தாவிச் செல்லலாம். இதற்கு செல் (கோ) எனும் சொல்லை டைப் செய்து, தொடர்ந்து இடத்தின் பெயரை டைப் செய்தால் போதும். இன்னும் கூடுதல் தகவல்கள் தேவையெனில், ஆய்வு (எக்ஸ்) என டைப் செய்து ஏதேனும் தலைப்பை டைப் செய்தால் அது தொடர்பான தகவல்களைப் பெறலாம்.

இந்த விளையாட்டில் எதிர்கொள்ளும் தகவல் பக்கத்தைச் சமூக ஊடகம் வாயிலாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். மிகப் பெரிய சாகச விளையாட்டு என்று சொல்ல முடியாவிட்டாலும், விக்கிபீடியா கட்டுரைகளைப் படித்துப் புதிய தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கான சுவாரசியமான வழி இது. மேலும் விக்கிபீடியாவின் நீள அகலத்தையும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். வரிசையாகக் கட்டுரைகளைப் படித்துப் பார்ப்பதைவிட, இப்படித் தகவல் தேடல் விளையாட்டில் ஈடுபடுவது புதிய அனுபவமாக இருக்கும்.

மென்பொருளாளரான டேவிஸ், இது போன்ற விக்கி விளையாட்டுகளை உருவாக்குவது புதிதல்ல. இவர் ஏற்கெனவே கேட்பிஷிங் (http://kevan.org/catfishing.php) எனும் விக்கி விளையாட்டையும் உருவாக்கியிருக்கிறார். இந்த விளையாட்டில் குறிப்பிட்ட ஒரு கட்டுரை இடம்பெறும். வகைகள் அனைத்தும் வார்த்தைகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வார்த்தைகள் விவரிக்கும் கட்டுரை எது என்பதை ஊகிக்க வேண்டும். இதை தனியாகவும் விளையாடலாம், நண்பர்களுடன் இணைந்தும் விளையாடலாம்.

இதேபோல நாவல் எழுதும் மாதத்தை முன்வைத்து விக்கிபீடியா கட்டுரைகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறார் டேவிஸ். இணையதளத்தில் வகைவகையான விளையாட்டுகளை மனிதர் உருவாக்கியிருக்கிறார். எல்லாம் தனித்தனித் தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறும்பதிவு சேவையான ட்விட்டர் சார்ந்த விளையாட்டுகள் மட்டுமே பல உள்ளன. தேடியந்திரம் சார்ந்த விளையாட்டுகளும் இருக்கின்றன. இவை தவிர கலை மற்றும் சோதனை முயற்சி சார்ந்த விளையாட்டுகளும் இருக்கின்றன. வார்த்தை விளையாட்டு மற்றும் விநாடி வினா ரக விளையாட்டுகளும்கூட இருக்கின்றன.

இணையம் எத்தனை சுவாரசியமானது என்பதை டேவிஸ் இணைய பக்கத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்: http://kevan.org/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x