Published : 31 Jul 2017 12:02 PM
Last Updated : 31 Jul 2017 12:02 PM

சென்னை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு

மோ

ட்டார் சைக்கிளில் செல்லும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. அது வாகனம் ஓட்டுபவருக்கும், சாலையைப் பயன்படுத்துவோருக்கும் பாதுகாப்பானதல்ல. ஆனால் மோட்டார் சைக்கிள் ஓடும்போது அதிலிருந்து வெளியாகும் மின்சாரத்தின் மூலம் மொபைலை சார்ஜ் செய்ய முடிந்தால் அது வரவேற்புக்குரிய விஷயம்தானே.

“பவர் எய்ட்’’ என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த சார்ஜர் சாதனம் உருவானதன் பின்னணியே சுவாரஸ்யமானதுதான்.

மெக்கானிக்கல் பிரிவு மாணவரான அமாம் அருணிடம் ஒரு நாள் அவரது வகுப்புத் தோழியின் பெற்றோர்கள் மொபைலில் தொடர்பு கொண்டு தங்களது மகளின் செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளனர். சிறப்பு வகுப்பு முடிந்து திரும்பிக் கொண்டிருந்த மாணவரான அருண், இது அருகிலிருந்த வகுப்புத் தோழியிடம் கேட்டபோது, அவரது மொபைலில் பேட்டரி சார்ஜ் இல்லை என்று கூறினாராம்.

``பவர் பேங்க்’’ எனப்படும் சாதனம் இருந்தாலும், இருசக்கர வாகனம் ஓட்டுபவருக்கு சார்ஜ் ஏற்ற சாதனம் உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் உருவானதாம். அதன் விளைவாக உருவானதுதான் இந்த கருவி என்கிறார் அருண். இறுதி ஆண்டில் தனது புராஜெக்டாக இதை எடுத்து அதன் அடிப்படையில் உருவாக்கிய இந்த தயாரிப்பு இன்று முழுமையானதாக காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ள தயாரிப்பாக சந்தைக்கு வந்துள்ளது.

முன்னதாக இந்த தயாரிப்பு சோதனை முயற்சியில் இருந்தபோது, இதை தனது பல நண்பர்களுக்கு சோதித்து பார்க்க அளித்தாராம். சென்னையில் கடுமையான வார்தா புயல் தாக்கிய சமயத்தில் பலரது மொபைல் போனை சார்ஜ் ஏற்ற மிகவும் உதவியாக இருந்ததாம். இது நீர்புகா தன்மையோடு (வாட்டர் புரூப்) இருந்ததால், புயல், மழைக் காலங்களிலும் வாகனம் ஓடினாலே சார்ஜ் ஏறியது இதன் சிறப்பம்சமாக இருந்தது.

பல்வேறு கட்ட சோதனைகளில் சிறப்பாக செயல்பட்ட இந்த கருவியை பெருமளவில் தயாரித்து விற்க முடிவு செய்தபோது இவருக்கு உதவிக் கரம் நீட்டியது புளூடஸ் இன்வெஸ்மென்ட் ஆலோசனை சேவை நிறுவனத்தின் கோவிந்தராஜ். வென்ச்சர் கேபிடல் முதலீடாக சிறு தொகையை முதலீடு செய்து தற்போது இந்த சார்ஜர் வெளிவர பெரிதும் உதவியாக உள்ளார்.

இதுவரை இருசக்கர வாகனங்களில் சார்ஜர் பெரும்பாலும் சீன தயாரிப்பாகத்தான் உள்ளன. இப்போதுதான் முதல் முறையாக இந்திய தயாரிப்பாக பவர் எய்ட் வந்துள்ளது.

நீர்புகா தன்மை, எளிதாக உபயோகிக்கும் வசதி, நம்பகத் தன்மை, நீண்ட காலம் உழைப்பது ஆகியன இதன் சிறப்பம்சமாகும்.

சீன தயாரிப்புகளுக்கு இவற்றில் எதுவுமே கிடையாது. இதனால் தங்களது தயாரிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கும் என்று உறுதியாக நம்புகிறார் இந்த இளம் பட்டதாரி தொழில் முனைவோர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x