Published : 04 Jul 2017 10:44 AM
Last Updated : 04 Jul 2017 10:44 AM

சேதி தெரியுமா? - விண்ணில் பாய்ந்த ஜிசாட்-17

விண்ணில் பாய்ந்த ஜிசாட்-17

இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-17 ஜூன் 29 அன்று, பிரெஞ்சு கயானாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின் 18-வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் இது. ஐரோப்பிய விண்வெளித் தளத்தில் ஏரியன்-5 ரக ஏவுகணை மூலம் இது விண்ணில் செலுத்தப்பட்டது. 3,477 கிலோகிராம் எடையுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த விண்கலத்தை அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப வசதி இஸ்ரோ ஏவுதளத்தில் இன்னும் கொண்டுவரப்படவில்லை. அதனால், இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது. ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு, வி-சாட் சேவைகளை மேம்படுத்துவதற்கு இந்தச் செயற்கைக்கோள் உதவும். அத்துடன், வானிலைக் கண்காணிப்பு, அவசரகாலத் தேடல், மீட்பு நடவடிக்கைகளிலும் இது உதவும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. 1,013 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தச் செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்.

வெளிநாடுகளில் குடியுரிமை: இந்தியர்கள் முதலிடம்

வெளிநாடுகளில் குடியுரிமை பெறுபவர்களின் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தில் இருக்கின்றனர். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (OECD), பாரிஸ் நகரில் ‘சர்வதேசக் குடிபெயர்வு பார்வை’ என்ற ஆய்வறிக்கையை ஜூன் 29 அன்று வெளியிட்டது. இந்த ஆய்வறிக்கையின்படி, 2015-ம் ஆண்டில் மட்டும் இந்தியர்கள் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றிருக்கின்றனர். 2014-ம் ஆண்டைவிட இது 3 சதவீதம் அதிகம். வேலை, கல்வி போன்ற காரணங்களுக்காக இந்தியர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்கின்றனர் என்று இதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து 1 லட்சத்து 21 ஆயிரம் பேர் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்துள்ள மெக்ஸிக்கோ இந்தப் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. 94 ஆயிரம் பேர் குடிபெயர்ந்துள்ள பிலிப்பைன்ஸ் 3-ம் இடத்திலும் 78 ஆயிரம் பேர் குடிபெயர்ந்துள்ள சீனா 5-ம் இடத்திலும் இருக்கிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் குடியுரிமை பெற்றுள்ளனர். இந்தப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பானது ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டது.

பி.காம். பாடத் திட்டத்தில் ‘ஜி.எஸ்.டி.’

பொருட்கள், சேவைகள் வரியை (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு ஜூலை 1 அன்று அமலுக்குக் கொண்டுவந்திருக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவின் பெலகவி மாவட்டத்தில் இயங்கும் ராணி சென்னம்மா பல்கலைக்கழகம் ‘ஜி.எஸ்.டி.’-யை அறிமுகப்படுத்தும் பாடத்தை பி.காம். பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கல்வியாண்டிலிருந்து 3-ம் ஆண்டு பி.காம் மாணவர்கள்,5-வது, 6-வது செமஸ்டரில் ‘ஜி.எஸ்.டி.1’, ‘ஜி.எஸ்.டி.2’என்று இரண்டு பிரிவுகளில் கட்டாயப் பாடமாகப் படிப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். ஏற்கெனவே, பி.காம். மாணவர்கள் மறைமுக வரி, நேரடி வரி அமைப்பைப் பற்றிப் படித்துவருகின்றனர். இப்போது “ஒரு தேசம், ஒரு வரி, சட்டத்தைப் பற்றி மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படும். இது வருங்காலத்தில் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறது ராணி சென்னம்மா பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் 300 கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் 15 ஆயிரம் மாணவர்கள் பி. காம். படிக்கின்றனர்.

ஐ.நா.வுக்கு இந்தியா நிதி

வளரும் நாடுகளின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக ஐ.நா. வரி நிதிக்கு இந்தியா தன்னார்வப் பங்களிப்பாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கியிருக்கிறது. இந்திய பண மதிப்பின்படி இது 6 கோடியே 46 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய். ஜூன் 27 அன்று, ஐ.நா.வுக்கான இந்தியாவின் முதல் செயலாளர் ஆஷிஷ் சின்ஹா இந்த நிதியை ஐ.நா.வின் பொருளாதார, சமூக விவகாரங்கள் துறையின் கொள்கை வளர்ச்சி, பகுப்பாய்வு பிரிவுத் தலைவர் ஷரி ஸ்பிகலிடம் வழங்கினார். “தன்னார்வத்தோடு இந்தியா செய்திருக்கும் இந்தப் பங்களிப்பு ஐ.நா.வின் வரிக் குழு நடத்தும் துணைக்குழுக் கூட்டங்களில் வளரும் நாடுகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு உதவும்” என்று தெரிவித்திருக்கிறது ஐ.நா.

வளர்ச்சிக்கான நிதியளித்தல் தொடர்பான 3-வது சர்வதேச மாநாடு 2015 டிசம்பரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிலையான வளர்ச்சிக்காக ‘அடிஸ் அபாபா செயல் திட்டம்’ உருவாக்கப்பட்டது. இந்தச் செயல்திட்டத்தைப் பின்பற்றி நிதியளித்திருக்கும் முதல் நாடு இந்தியா.

தேனீக்களை அழிக்கும் பூச்சிக்கொல்லிகள்

தேனீக்கள், காட்டுத் தேனீக்களின் அழிவுக்குப் பூச்சிக்கொல்லிகள் காரணமாக இருப்பதை உலக அளவில் நடத்தப்பட்ட கள ஆய்வு ஒன்று கண்டறிந்திருக்கிறது. பெரும்பாலான நிலப் பகுதிகள் அசுத்தமடைந்ததும், பலவிதமான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடும்தான் தேனீக்களின் அழிவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து, உலக நாடுகளில் பயன்படுத்தப்படும் நியோநிகோடினாய்ட்ஸ் என்ற பூச்சிக்கொல்லிக்குத் தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் நடக்கவிருக்கும் இலையுதிர் காலக் கூட்டத்தொடரில் இந்த நியோநிகோடினாய்ட்ஸுக்கு தடைவிதிக்கப்பட இருக்கிறது. தேனீக்களும் மற்ற மகரந்தக் கடத்திகளும் உணவு உற்பத்தியில் பெரிய பங்கு வகிக்கின்றன. ஆனால், அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்படுவதாலும் நோய்க் கிருமிகள் அவற்றைத் தாக்குவதாலும் தேனீ இனம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துவருகிறது. அறிவியல் ஆய்வுக்கான பிரபலப் பத்திரிகை ‘சயின்ஸ்’ இந்த ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறது.

1,700 வயது ‘மம்மி’

சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் 1,700 ஆண்டுகள் பழமைவாய்ந்த மனிதனின் சடலம் பாதுகாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த உடல் 5.3 அடி மீட்டர் நீளம் இருக்கிறது. தோல், தலைமுடி போன்ற எச்சங்கள் அதில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மக்களால் அதிகம் பயன்படுத்தப்படாத பகுதியான கிங்ஹாய்-திபெத் பீடபூமியின் பண்டைய பட்டுப் பாதையில் இந்தப் பழமையான ‘மம்மி’ கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஹாய்ஸி இனப் பண்பாட்டியல் அருங்காட்சியகத்துக்கு இந்த ‘மம்மி’ எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது. “கிங்ஹாய்-திபெத் பீடபூமியில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான ‘மம்மி’ இதுதான். அது நல்ல நிலையில் இருக்கிறது. தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த உடலில் மரபணுச் சோதனை மேற்கொள்ளவிருக்கிறார்கள்” என்கிறார் அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஜின் ஃபெங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x