

தகவல்தொடர்பு சேவை: இந்தியா முன்னேற்றம்
ஐ.நா., சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய ஆசிய நாடுகளில் தகவல்தொடர்பு தொழில்நுட்பச் சேவைகள் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிப்பதாகத் தெரிவித்திருக்கிறது. உலக அறிவுசார் சொத்து நிறுவனம் (WIPO) உலகளாவிய புதுமை அட்டவணையின் (Global Innovation Index) பத்தாவது பதிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த அட்டவணையில் சிறந்த புதுமையான நாடுகள் பட்டியலில் 130 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில், இந்தியா 60-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. உலக அறிவுசார் சொத்து நிறுவனம், கார்னெல் பல்கலைக்கழகம், இன்செட் உள்ளிட்டவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு 66-வது இடத்திலிருந்த இந்தியா, இந்த ஆண்டு ஆறு இடங்கள் முன்னேறி 60-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் மத்திய, தெற்கு ஆசிய நாடுகளில் முதல் இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. அத்துடன், இந்தியா, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இந்த வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றன.
இந்தியா தகவல்தொடர்பு தொழில்நுட்பச் சேவைகளில் முதல் இடத்திலும், அறிவியல், பொறியியல் பட்டதாரிகள் பிரிவில் பத்தாவது இடத்திலும், இணைய பங்களிப்பில் 27- வது இடத்திலும், சர்வதேச ஆராய்ச்சி, வளர்ச்சி நிறுவனங்கள் பிரிவில் 14-வது இடத்திலும் உள்ளது. புதிய கண்டுபிடிப்பு தரத்தில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அரசியல் நிலைத்தன்மை, பாதுகாப்பில் 106-வது இடத்திலும், கல்வியில் 114-வது இடத்திலும், ஆசிரியர்-மாணவர் விகிதத்தில் 104-வது இடத்திலும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
89 புதிய கலை, அறிவியல் படிப்புகள்
கலை, அறிவியல் படிப்புகளில் இளங்கலை, முதுகலைப் பிரிவுகளில் புதிய படிப்புகளுக்கான கோரிக்கைகள் அதிகரித்துவருகின்றன. இதனால், தமிழ்நாடு உயர்கல்வித் துறை 89 புதிய படிப்புகளை (42 இளங்கலை, 47 முதுகலை) அறிவித்திருக்கிறது. மாநிலப் பல்கலைக்கழகங்களின் கீழ்வரும் 24 கல்லூரிகளில் இந்தப் படிப்புகளை உயர்கல்வித் துறை அறிமுகப்படுத்தியிருக்கிறது . உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இந்த அறிவிப்பை சட்டமன்றத்தில் ஜூன் 15 அன்று அறிவித்தார்.
இதற்காக ரூ. 2.82 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் புதிய படிப்புகளில் காட்டும் ஆர்வத்தைப் பொருத்து மற்ற அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் இந்தப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். தற்போது கலை, அறிவியல் படிப்புகளின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் அதிகமாகிவருவதாகத் தெரிவித்திருக்கிறார் அன்பழகன். 2015-16 கல்வி ஆண்டில், 24 கல்லூரிகளில் 9, 714 மாணவர்கள் கலை, அறிவியல் படிப்புகளைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
அதுவே, 2016-17 கல்வி ஆண்டில் 13,274 என அதிகரித்திருக்கிறது. இது இந்தக் கல்வி ஆண்டில் மேலும் அதிகரிக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், பொறியியலிலும் முதுகலையில் ஆராய்ச்சிப் படிப்புகளை ஊக்கப்படுத்தும்விதமாக, ஆறு அரசுப் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முதுகலை உதவித்தொகையாக ரூ. 6,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிவேகமாக 8,000 ரன்கள்: கோலி சாதனை
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 8 ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறார். சாம்பியன்ஸ் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் கோலி ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் எடுத்து இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார். கோலி தனது 175-வது இன்னிங்ஸில் 8 ஆயிரம் ரன்களைக் கடந்து, தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் டி வில்லியர்ஸின் சாதனையை இதன் மூலம் முறியடித்திருக்கிறார். அவர் 182 இன்னிங்சில் 8,000 ரன்களைக் கடந்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. இந்தியாவில் சவுரவ் கங்குலி 200 இன்னிங்ஸிலும், சச்சின் 210 இன்னிங்ஸிலும் இந்தப் பட்டியலில் மூன்றாவது, நான்காவது இடத்தில் இருக்கின்றனர்.
அத்துடன், இந்தியாவின் ஷிகர் தவன் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராகப் புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். கடந்த 2 சாம்பியன்ஸ் கோப்பைப் பதிப்புகளில் 9 போட்டிகளில் விளையாடிய அவர் 680 ரன்கள் குவித்து இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார். இதனால், சவுரவ் கங்குலியின் 665 ரன்கள் சாதனையை முறியடித்திருக்கிறார். இந்தச் சாதனையில் மூன்றாவது இடத்தில் ராகுல் டிராவிட்டும் (627), நான்காவது இடத்தில் சச்சினும் (441) இருக்கின்றனர்.
மும்பைத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு
மும்பைத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அபு சலீம் உள்ளிட்ட ஆறு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1993-ம் ஆண்டு, மார்ச் 12 அன்று, மும்பையில் 12 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் காயமடைந்தனர். 27 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்தன. 24 ஆண்டுகள் கழித்து, மும்பை தடா (TADA) நீதிமன்றம் இந்த வழக்கில், அபு சலீம், உமர் முஸ்தபா தோசா, பிரோஸ்கான், ரியாஸ் சித்திகி, கரிமுல்லா ஷாயிக், முகமது தாகிர் மெர்ச்சன்ட் என்ற தாகிர் தக்லியா கான் உள்ளிட்டவர்களுக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருக்கிறது.
இந்தியத் தண்டனைச் சட்டத்தில் ஆயுதச் சட்டம், வெடிமருந்துகள் சட்டத்தின் கீழ் இவர்கள் ஆறு பேருக்கும் தண்டனை வழங்கியிருக்கிறது தடா நீதிமன்றம். ஆனால், அப்துல் கரீம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்திருக்கிறது நீதிமன்றம். ஜூன் 16 அன்று, சிறப்பு நீதிபதி ஜி.ஏ. சனாப் இந்தத் தீர்ப்பை வழங்கினார். அபு சலீம் உள்ளிட்ட ஐவரும் தீவிரவாதச் செயல்களுக்காகவும், அனுமதி இன்றி ஆயுதங்கள் வைத்திருந்ததற்காகவும், குற்றவியல் சதி செயல்களுக்காகவும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
‘செவ்வாய் கிரகத்தில் நகரத்தை உருவாக்க முடியும்’
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ வசதியாகக் குடியிருப்புப் பகுதிகளைக் கூடிய விரைவில் உருவாக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதைத் தெரிவித்தவர், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செயல் இயக்குநர் எலன் மஸ்க். இந்த ஆய்வில், விண்வெளி-தாங்கும் நாகரிகம் (space bearing civilization) எனப்படும் மனித நாகரிகத்தை உருவாக்குவதற்கான சாத்தியங்களைச் செவ்வாய் கிரகம் கொண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில், மனிதர்களையும் பொருட்களையும் செவ்வாய் கிரகத்துக்கு எடுத்துச் செல்வதற்குத் தேவைப்படும் திறன்வாய்ந்த விண்கலத்தைப் பற்றிய கட்டமைப்பை விளக்கினார் எலன் மஸ்க். செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் ஒரு டன் பொருட்களின் போக்குவரத்துச் செலவை 50 லட்சம் சதவீதம் அளவுக்குக் குறைப்பதுதான் பொறியாளர்கள் விஞ்ஞானிகள் முன்னுள்ள சவால்.
“செவ்வாய் கிரகப் பயணத்தை நம்முடைய வாழ்நாட்களிலேயே சாத்தியப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன். செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல ஆசைப்படுபவர்கள் யார் வேண்டுமானாலும் அங்கே செல்வதற்கு வழி இருக்கிறது. வரலாறு இரண்டு திசைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பாதையில், நாம் எப்போதும் பூமியில் தங்கியிருக்கிறோம். இன்னொரு பாதையில், சில இறுதியான அழிவு நிகழ்வுகள் இருக்கலாம். அதனால், விண்வெளி தாங்கும் நாகரிகத்தின் மூலம் மாற்று வழிகளை உருவாக்குவதே சிறந்த வழி” என்றார் மஸ்க்.
பத்தாவது பிரெஞ்சு ஓபன் பட்டம்
பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் ஜூன் 11 அன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், ஸ்பெயினின் ரஃபேல் நடால், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை எதிர்த்து விளையாடி 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றிபெற்றார். இதன் மூலம் பத்தாவது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கிறார். அத்துடன், இது அவருக்குப் பதினைந்தாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகவும் அமைந்திருக்கிறது.
ஒரு செட்டைக்கூட இழக்காமல் பிரெஞ்சு ஓபனில் மூன்றாவது முறையாகப் பட்டம் வென்றிருக்கிறார் நடால். இந்த வெற்றியால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் நடால். பிரெஞ்சு ஓபன் போட்டிகளில், இதுவரை 81-ல் 79 ஆட்டங்களில் அவர் வெற்றிபெற்றுள்ளார். இது களிமண் தரையில் அவர் வென்றுள்ள 53-வது பட்டம். “இது உண்மையில் நம்ப முடியாதது. ‘லா டெசிமா’வை வெல்வது மிகவும் சிறப்பானது. நான் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறேன். இந்த உணர்வை விவரிக்க முடியாது. இதை மற்ற போட்டிகளுடன் ஒப்பிட முடியாது” என்றார் நடால்.