Published : 28 Jul 2017 10:17 AM
Last Updated : 28 Jul 2017 10:17 AM

சுற்றுலா விசாவில் அமெரிக்காவில் படிக்கலாமா?

அமெரிக்க விசா நடைமுறைகளில் மாறுதல்களுக்குப் பிறகு அது தொடர்பான சந்தேகங்களும் அதிகரித்துள்ளன. அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புவோர் விசா தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டியவை என்ன? உங்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார்கள் சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரக அதிகாரிகள்.

நான் செப்டம்பர் 2023 வரை செல்லத்தக்க ‘டி’ வகை பி1/பி2 விசா வைத்திருக்கிறேன் (பத்தாண்டுகள் பலமுறை சென்றுவரக்கூடியது). இந்த விசா ஒட்டப்பட்ட பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதால் புதிய பாஸ்போர்ட் பெற்றிருக்கிறேன். இப்போது நான் அமெரிக்கா செல்ல வேண்டுமெனில், புதிய பாஸ்போர்ட்டில் அமெரிக்க விசாவை மாற்ற வேண்டுமா அல்லது பழைய, புதிய பாஸ்போர்ட்டுகளுடன் பயணிக்கலாமா?

- ஆர்.செல்வம், கரூர்.

பழைய பாஸ்போர்ட்டில் செல்லத்தக்க அமெரிக்க விசா இருக்கும்பட்சத்தில், பழைய, புதிய பாஸ்போர்ட்டுகளுடன் ஒருவர் அமெரிக்காவுக்குப் பயணிக்கலாம். பாஸ்போர்ட் வகை மாறாமலிருக்க வேண்டும். நீங்கள் தூதரகப் பணி சார்ந்த விசா வைத்திருப்பதால் (டி வகை), உங்கள் புதிய பாஸ்போர்ட்டும் அதே வகையாக இருத்தல் வேண்டும். அவ்வாறே இருக்கும்பட்சத்தில், உங்கள் புதிய பாஸ்போர்ட்டில் இடம்பெறும் வகையில் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.

சுற்றுலா விசாவில் ஆறு மாதம்வரை அமெரிக்காவில் தங்கலாம் என்று அறிகிறேன். அந்த ஆறு மாதத்தில் அங்கு நான் ஏதேனும் படிப்புகளைப் படிக்கவோ பகுதி/முழு நேரமாகப் பணியாற்றவோ முடியுமா?

- ஷிவானி, கொடைக்கானல்.

நீங்கள் அமெரிக்காவில் நுழைவதற்குப் பயன்படுத்தும் விசாவின் தன்மையை ஒட்டியே உங்கள் பயணமும் அமைதல் வேண்டும். பி1/பி2 விசா வைத்திருந்தால், வணிகம் அல்லது சுற்றுலா நிமித்தம் குறுகிய காலம் அமெரிக்காவுக்குச் சென்று தாயகம் திரும்ப வேண்டும். சுற்றுலா விசாவில் சென்று வேலை பார்க்க அனுமதியில்லை. குறுகிய கால பொழுதுபோக்கு சார்ந்த படிப்புகளை மேற்கொள்ளலாம். ஆனால், முறையான நீண்டகாலப் படிப்புகளை மேற்கொள்ள அனுமதியில்லை. சுற்றுலா விசாவில் ஒரு பயணிக்கு உரிய வாய்ப்புகள் பற்றி அறிய, http://travel.state.gov/content/visas/en/visit/visitor.html

அமெரிக்கச் சுற்றுலாவின்போது, எதிர்பாராத விதமாக, நம்முடைய விசா தொலைந்துவிட்டால் என்ன செய்வது? எங்கு புகார் அளிப்பது? நம்முடைய பாஸ்போர்ட்டைக் காண்பித்து, மாற்று விசா பெற முடியுமா?

- நெல்சன், மேட்டுப்பாளையம்.

விசா பாஸ்போர்ட்டில் ஒட்டப்பட்டிருப்பதால், நீங்கள் பாஸ்போர்ட்டைப் பத்திரமாக வைத்திருக்கும் பட்சத்தில், விசா மட்டும் தொலைவது அரிதானது. விசா, பாஸ்போர்ட் இரண்டும் தொலைந்துவிட்டால், உள்ளூர் காவல்துறையினரிடம் புகார் பதிவு செய்துவிட்டு, புதிய பாஸ்போர்ட்டைப் பெற இந்தியத் தூதரகத்தை அணுக வேண்டும். மேலும், தொலைந்துவிட்ட உங்கள் விசா பற்றி அதை வழங்கிய அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திடம் தெரிவிக்க வேண்டும்.

அப்படியெனில், உங்கள் விசாவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காலம்வரை, நீங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கலாம். www.cbp.gov/I94 என்ற இணையத் தொடர்பு வழியாக உங்களுக்கான I-94 எண்ணைக் (விமான நிலையத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியின் பதிவு) கண்டறிந்து அதன் மூலம் நீங்கள் எவ்வளவு காலம் அமெரிக்காவில் தங்கியிருக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அமெரிக்காவில் உங்களுக்கான விசா வழங்கப்படாது.

நீங்கள் இந்தியா திரும்பிய பிறகு, புதிய விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய, travel.state.gov/content/visas/en/general/lost-or-stolen-travel-documents.html

என்னுடைய உறவினர் உடல்நலமில்லாதவர். அவர் அடுத்த இரண்டு மாதங்களில் அமெரிக்காவுக்கு முதன்முறையாகச் சுற்றுலா செல்லவிருக்கிறார். அங்கு அவருக்கு எதிர்பாராத விதமாக உடல் நலமில்லாமல் போனால் என்ன செய்ய வேண்டும்? யாரை அணுக வேண்டும்? அமெரிக்க மக்களுக்கு அந்த மருத்துவமனைகளில் உள்ள அதே சலுகைகள் இவருக்கும் கிடைக்குமா?

- ஞானசம்பந்தன், தஞ்சாவூர்.

ஒரு பயணி, அமெரிக்காவில் இருக்கும்போது சுகவீனம் அடைந்தால், அங்குள்ள மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். வெளிநாட்டுப் பயணி என்பதற்காக மருத்துவமனைகள் சேவையை மறுப்பதில்லை. அமெரிக்க மருத்துவமனைகளில் சிகிச்சை செலவு மிக அதிகம் என்பதைக் கவனத்தில் கொண்டு, அனைத்துப் பயணிகளும் பயண அல்லது மருத்துவக் காப்பீட்டை வாங்குவது உகந்தது. அமெரிக்காவில் பயணம் செய்யும்போது, உங்களுக்கு ஏற்படும் அவசர கால உதவிகளுக்கு அருகிலுள்ள இந்தியத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தை அணுகலாம்.

சுற்றுலா விசா பெறுவதற்கு ‘இன்விடேஷன் லெட்டர்’ என்ற ஒன்றைப் பெற வேண்டுமாமே..? அப்படியென்றால் என்ன? யாரிடம் பெறுவது?

- சுகன்யா, கருமத்தம்பட்டி.

அழைப்புக் கடிதங்கள், உங்களை அமெரிக்காவுக்கு அழைக்கும் தனிநபர்களாலோ நிறுவனங்களாலோ அளிக்கப்படுவதுண்டு. உங்கள் அமெரிக்கப் பயணத்துக்கான பிரத்யேக சூழ்நிலையை விளக்க அக்கடிதங்கள் உதவலாம். ஆனால், சுற்றுலா விசாவைப் பெறுவதற்கு அவை தேவையல்ல. அத்தகைய கடிதங்கள் ஏதுமின்றி, பலருக்குச் சுற்றுலா விசா அளிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலா விசாவுக்குத் தேவையான ஆவணங்கள் குறித்து மேலும் அறிய,: ustraveldocs.com/in

நன்றி: அமெரிக்கத் துணைத் தூதரகம், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x