

இயற்கைச் சீற்றங்களான சுனாமி, பூகம்பம் முதல் அணு உலை விபத்துவரை பல பேரழிவுகளைத் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் நாடான ஜப்பானைத் தூக்கிநிறுத்தும் கொள்கைகளில் ஒன்று 5-எஸ். ‘செய்ரி’ (பிரிப்பது), ‘செய்டன்’ (முறையாக அடுக்குவது), ‘செய்சோ’ (பளிச்சிட வைப்பது), ‘செய்கேட்சு’ (விதிமுறைகளை உருவாக்குவது), ‘ஷிட்ஷுகே’ (கடைப்பிடிப்பது) ஆகிய ஐந்து ஜப்பானிய வார்த்தைகளைக் குறிப்பதுதான் 5-எஸ். ஏதோ பொருட்களைக் கவனமாக அடுக்கும் முறைதானே இது என்றால் இல்லை அதற்கும் மேல் இதில் பல சூட்சுமங்கள் உள்ளன என்கிறது, வேதா T. ஸ்ரீதரனின் ‘வீடுகளிலும் பள்ளிகளிலும் 5-எஸ்’ புத்தகம்.
வீட்டில், பள்ளிகளில், பணியிடத்தில், கணினிப் பயன்பாட்டில், மொபைலில், பிற நவீன உபகரணங்களில் எனப் பல சூழல்களிலும் பலதரப்பட்ட விஷயங்களிலும் 5-எஸ் அணுகுமுறையைக் கையாண்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்கிறது இப்புத்தகம். இதன் அத்தியாயங்களில் ஒன்றான ‘ஜப்பானிடம் கற்றுக்கொள்வோம்’ என்கிற பகுதி கவனத்தை ஈர்க்கிறது. கழிப்பறையைச் சுத்தமாகப் பராமரிப்பது சுகாதாரத்துக்கு அவசியம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதையும் தாண்டி தூய்மை, அழகு இரண்டையும் ஒன்றாக ஜப்பான் கருதுகிறது.
வருடப் பிறப்பின்போது ‘கவாயா காமி’ என்னும் கழிப்பறை தெய்வத்தை வணங்கிச் சுத்தம் செய்யப்பட்ட கழிவறையில் அமர்ந்து தேநீர் அருந்தும் வழக்கம் அங்கு உள்ளது. இதுபோன்ற சில சுவாரசியமான தகவல்களின் தொகுப்பு இந்நூல். மிக எளிமையானதாகத் தோன்றும் இந்தப் படிநிலைகளைப் பின்பற்றுவது அவ்வளவு சுலபமானதல்ல. அதேபோல் கண்மூடித்தனமாக இதைப் பின்பற்றவும் வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.