Last Updated : 13 Jul, 2017 05:27 PM

 

Published : 13 Jul 2017 05:27 PM
Last Updated : 13 Jul 2017 05:27 PM

திரைவிழா: இசையை வாங்கிய விஷால்!

விஜய் ஆண்டனி இசையில் கடந்த 2008-ல் வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் இடம்பெற்ற துள்ளலான பாடல் ‘நாக்க முக்க’. ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்ற இப்பாடலை எழுதியவர் படத்தின் இயக்குநர் பி.வி.பிரசாத். 2011-ல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் விளம்பரப் பாடலாக கவுரவம் பெற்றது. அதே படத்தில் இடம்பெற்ற ‘தோழியாய், என் காதலியாய்...’ எனும் மென்மையான பாடலையும் அவரே எழுதியிருந்தார்.

தற்போது இயக்குநர், பாடலாசிரியர் எனும் தடத்திலிருந்து கதாநாயகன், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பி.வி.பிரசாத் களமிறங்கும் புதிய படம் ‘சகுந்தலாவின் காதலன்.’

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. நடிகர் சங்கச் செயலாளர் , தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, இயக்குநர்கள் மற்றும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் விக்கிரமன், பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், கருணாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய விஷால், “ இந்தப் படத்தின் இசை உரிமையை நான் வாங்கி இருக்கிறேன். ஏன் என்றால் நிறைய பேர் படத்தின் இசை உரிமையை வாங்குகிறார்கள். ஆனால் தயாரிப்பாளருக்கு முழுமையான தொகை வந்து சேருவதில்லை, குறைவான விலைக்கு வாங்கி அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். சமீபத்தில் ஒரு படத்தின் இசை உரிமையை வாங்க நான் அந்தத் தயாரிப்பாளரிடம் கேட்டேன், உடனே வேறு ஒரு நிறுவனம் அதைவிட அதிக விலைக்குக் கேட்டார்கள்.

இன்னொரு பெரிய நிறுவனம் அதைவிடப் பெரிய விலைக்கு வாங்கியது.” என்றார். விஷால் பேசியதன் மூலம் இசை உரிமையில் அதை வாங்கும் நிறுவனங்கள் நிறைய லாபம் ஈட்டுவது தெரிகிறது என்றார்கள் விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x