Last Updated : 10 Jul, 2017 11:16 AM

 

Published : 10 Jul 2017 11:16 AM
Last Updated : 10 Jul 2017 11:16 AM

மாற்று எரிசக்தியில் வல்லரசாகும் இந்தியா!

''தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வெப்பநிலை அதிகரிப்பு தாங்காமல் பலர் இறந்துள்ளனர். பருவ நிலை மாற்றத்தால் விவசாய உற்பத்தியிலும் மிகப் பெரிய தேக்கம் , கடல் மட்டம் உயர்ந்து வருவதால் ஏற்படும் கடலரிப்புகளால் அப்பகுதி சார் மக்களுக்கும் இழப்புகள். சூழலியல் சார்ந்து சமீப காலங்களில் இந்தியாவின் சித்திரம் இது. சூழலியல் பாதிப்புகளால் இந்தியாவின் வளர்ச்சி பல வகைகளிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இது எதிர்காலத்தில் மிக மோசமாக இருக்கும் என்று சொல்ல முடியாது என்றாலும், சமகாலத்தில் இந்தியாவுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகள் மிக அதிகம். ஆனால் இந்தியாவின் மாற்று எரிசக்தி துறையின் வளர்ச்சியோ இதற்கு நேர் எதிராக இருக்கிறது. சுற்றுச் சூழல் பாதிப்பு இல்லாத மாற்று எரிசக்தி துறையின் வளர்ச்சியில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக உலகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது. ’’ இப்படி கூறியுள்ளவர் சர்வதேச சுற்றுசூழல் பத்திரிகையாளரான ஸ்டீபன் லேஹி (Stephen Leahy)

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் குறித்து நேஷனல் ஜியாகிரபி பத்திரிகையில் ஆய்வை இவர் வெளியிட்டிருக்கிறார். மேலும் 2015-ம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடைபெற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாட்டில் இந்தியா அளித்த வாக்குறுதிகளை யாரும் எதிர்பாராத வகையில் வேகமாக நிறைவேற்றி வருகிறது என்கிறார். குறிப்பாக இந்தியாவில் மின் விநியோகக் கட்டமைப்பில் மாற்று எரிசக்தி துறை மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது. மாற்று எரிசக்தியால் பெருவாரியான கிராமப்புறங்களுக்கு மின் விநியோகம் சென்றுள்ளது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தவிர இந்தியா மாற்று எரிசக்தி துறையில் உலக அளவில் தற்போது அமெரிக்கா, சீனாவுடன் போட்டி போட்டு வருகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவில் மாற்று எரிசக்தி துறையின் பங்களிப்பு 100 ஜிகாவாட்டை எட்டியுள்ளது. இதற்கான கட்டமைப்பை உருவாக்க அதற்கு பல ஆண்டுகள் பிடித்தது. ஆனால் இந்தியாவின் மாற்று எரிசக்தி உற்பத்தி இலக்கு 175ஜிகாவாட். 2022-ம் ஆண்டுக்குள் சூரிய மின்னுற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி துறையில் 175 ஜிகா வாட் இலக்கை எட்டுவது என்பது இந்தியாவின் இலக்காகும்.

இந்த 175 ஜிகா வாட் மாற்று எரிசக்தி உற்பத்திக்கான இலக்கில் 100 ஜிகாவாட் சூரிய மின்னுற்பத்தி மூலமும், 60 ஜிகாவாட் காற்றாலை மூலமும் 15 ஜிகாவாட் இதர மாற்று எரிசக்தி மூலம் பெறுவதற்கான திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது. தற்போதுவரை காற்றாலை திறன் 32.2ஜிகா வாட், சூரிய மின்னுற்பத்தி 12.2 ஜிகாவாட் திறனாக உள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கான பயணத்துக்கு ஏற்ப இந்த துறையில் பல பெரிய நிறுவனங்கள் புதிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. அந்நிய முதலீட்டுக்கும் அரசு 100 சதவீத அனுமதி அளித்துள்ளது. இதனால் உற்பத்தி செலவும் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடனுதவியில் முன்னுரிமை அளிக்கின்றன. தொழில்நுட்பங்கள் பரவலாக அதன் விலையும் குறையத் தொடங்குவதைபோல சூரிய மின்னாற்றல் தொழில்நுட்பம் அதிக மக்களை சென்றடைவதால் விலையும் குறைந்து வருகிறது. அப்படியான ஒரு நிலை உருவாகிக் கொண்டிருப்பதால் இந்தியா உலக நாடுகளுக்கான முன்னுதாரமாக உருவாகி வருகிறது. இந்த மிகை மின் உற்பத்தி, பேரளவு முதலீடுகள் தாண்டியும் பல சாதகமான பலன்களும் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

வேலைவாய்ப்புகள்

குறிப்பாக 2020-ம் ஆண்டுக்குள் 3லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் இந்த துறையில் உருவாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக 21,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. வரும் ஆண்டில் 25,000 புதிய வேலை வாய்ப்புகளையும் இந்த துறை உருவாக்க உள்ளது. குறிப்பாக பல பெரு நிறுவனங்கள் முதலீடுகளை குவித்துள்ளதால், சூரிய மின்னுற்பத்தி பூங்கா உருவாக்கம், பராமரிப்பது, பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து என பல நிலைகளில் இந்த வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளன என்று புதுடெல்லியைச் சேர்ந்த எனர்ஜி, என்விராமெண்ட் அண்ட் வாட்டர் கவுன்சில் (CEEW) அமைப்பின் கிரீன் இந்தியா வேலைவாய்ப்பு என்கிற அறிக்கையில் குறிப்பிடுகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் காற்றாலையில் 34,600 வேலை வாய்ப்பும், சூரிய மின்னுற்பத்தியில் 58,600 வேலை வாய்ப்பும், கூரை தகடுகள் அமைப்பில் 2,38,000 வேலைகளும் உருவாகும் என்றும் கூறியுள்ளது. இதில் காற்றாலை மின்சார உற்பத்திக்கு சாதகமாக உள்ள மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், தமிழ்நாடு மாநிலங்களில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த வேலை வாய்ப்புகளில் சுமார் 80 சதவீதம் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது. இந்த வேலைவாய்ப்புகளை சரியாக பயன்படுத்த மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். முக்கியமாக புதிய வேலை வாய்ப்புக்கு ஏற்ப தொழிலாளர்களை உருவாக்கும் திறம் மேம்பாட்டு மையங்களுக்கான தேவை உருவாகியுள்ளது என்றும் கூறுகிறது.

பயன்பாடுகள்

மாற்று எரிசக்தியின் முக்கிய சிறப்பு அம்சமே அது குறைவான விலையில் கிடைக்கிறது என்பதுதான். இதனால் இப்போது பரவலாகவும், எளிதாகவும் மக்கள் மத்தியில் ஊடுருவி வருகிறது. மின்சார விநியோக கட்டமைப்பு இல்லாத உள்ளடங்கிய கிராமங்களுக்குகூட இதன் மூலம் மின்சாரம் கிடைக்கிறது. சிறிய சூரிய மின்னுற்பத்தி பேனல் அல்லது சிறிய காற்றாலை ஏற்படுத்திக் கொள்வது மலைப்பகுதி மக்களுக்கு இலகுவானதாகவும் இருக்கிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மற்றொரு முக்கிய அம்சம், இதனால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லை. அனல் மின்சாரத்தைபோல நிலக்கரியை வெட்டியெடுப்பதற்கான மிகப் பெரிய கட்டமைப்புகள் தேவையில்லை. நிலக்கரி மூலம் மின்சர உற்பத்திக்கு தண்ணீரையும் அதிகமாக செலவிட வேண்டும். அல்லது நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியம் இல்லாத இடங்களிலும் இந்த மாற்று எரிசக்தி திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்பதும் இதன் சாதகமான அம்சம்.

ஆனால் மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு தனியார் முதலீடுகளை அரசு ஊக்குவிக்கும் அதே வேளையில் அரசு இதற்கென ஒதுக்கிய தொகையை மாற்று திட்டங்களுக்கு திருப்பி விடவும் செய்துள்ளது. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி திட்டங்களுக்கு என மத்திய நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தபோது 2011-ம் ஆண்டில் இதற்கென தனியாக தேசிய பசுமை எரிசக்தி நிதியத்தை உருவாக்கினார். இதற்கு இந்தியாவில் வெட்டி எடுக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு டன் நிலக்கரிக்கும் ரூ.50 ஒதுக்கப்பட்டது.

இந்த தொகை 2014-ம் ஆண்டில் ரூ.100 ஆகவும், 2015-ம் ஆண்டு ரூ.200 ஆகவும் 2016-ம் ஆண்டில் ரூ.400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டிலிருந்து இந்த தொகை ரூ.54,336 கோடி திரட்டப்பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டில் திரட்டிய தொகையில் 32 சதவீதம் மட்டுமே இந்த நிதியத்துக்கு சென்றுள்ளது. இதற்கான நிதியின் ஒரு பகுதி தூய்மை கங்கை திட்டத்துக்கு திருப்பிவிடப்படுவதாகவும் பொருளாதார ஆய்வுகள் கூறுகின்றன.

இது வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல, மின்சாரத் தொடர்பு என்பது மக்களின் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கக் கூடியது. அரசு இதனை உணர்ந்து முழுமையாக ஊக்குவிக்க வேண்டும். இதனால் இந்திய மனித வளத்தின் திறன் மேம்படும். இந்த மின்சாரம் சீரானது என்பதால் மக்கள் இதனை நம்புகின்றனர். கிராமப்புறங்களில் சிறிய தொழில் செய்யும் தச்சர்கள், தையல் தொழில் செய்பவர்கள், சுய உதவி தொழில்களுக்கு வேலைகள் தடைபடாத வகையில் மின்சாரம் கிடைக்கும்.

விவசாயப் பொருட்கள் வீணாகாமல் இருப்பதற்கான உலர் அல்லது குளிர்பதன சேமிப்புக் கிடங்குகளை அமைக்க முடியும். இதன் மூலம் விவசாயிகளுக்கு சிறப்பான சந்தை விலை கிடைக்கும். கிராமப்புற பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு தடையில்லாத மின்சாரம் கிடைப்பதன் மூலம் மாணவர்களின் ஆற்றலில் பெரும் மாற்றம் நிகழும் என்பதையும் மறுக்கமுடியாது. மாற்று எரிசக்து துறையில் இந்தியாவின் வளர்ச்சி உலகத்துக்கே முன்னுதாரணமாக அமையட்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x