Published : 30 Nov 2014 03:19 PM
Last Updated : 30 Nov 2014 03:19 PM

என் பாதையில்: வேலைக்குப் போகும் பெற்றோருக்கு

இன்று பொருளாதாரச் சிக்கலைச் சமாளிப்பதற்காகப் பெரும்பாலான வீடுகளில் அம்மா, அப்பா இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கிறவர்களில் பலர் தங்கள் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டுச் செல்கின்றனர். வசதிபடைத்தவர்கள் தங்கள் வீடுகளிலேயே பேபி சிட்டர் என்று அழைக்கப்படுகிற, குழந்தைகளைக் கவனித்துக்கொள்கிறவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். பள்ளிக்குச் செல்லும் அந்தக் குழந்தைகளிடம் பணத்தையும் கொடுத்துவிடுகிறார்கள். அவர்களும் தங்களுக்கு விருப்பமான நொறுக்குத் தீனிகளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, மொபைல் போனிலோ வீடியோ கேம்ஸிலோ விளையாடுவார்கள்.

இந்த மாதிரி பெற்றோர்கள் கவனிப்பு இல்லாமல் இருக்கும் நிறைய குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். நான் சந்திக்கும் இளைய தலைமுறை பெற்றோரிடம் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி ஏதாவது பேசிவிட்டால் போதும், ‘ஆன்ட்டி, நாங்க வீட்ல கேமரா பொருத்தியிருக்கோம். எங்க வீட்ல இருக்கற பேபி சிட்டர் எங்க குழந்தையை எப்படிக் கவனிச்சுக்குவாங்கன்னு அந்த வீடியோவைப் பார்த்துத் தெரிஞ்சுக்குவோம். அந்த மாதிரி பார்த்து மூணு பேபி சிட்டர் மாத்திட்டோம்’ என்கிறார்கள். இப்படி அவஸ்தைப்படுவதற்குப் பதில் வீட்டுப் பெரிய வர்களைத் தங்கவைத்துக் கொள்ளலாமே என்றால் அதற்கும் அவர்களிடம் பதில் இருக்கிறது. ‘இல்ல ஆன்ட்டி, எங்களுக்கு அவங்க செட்டாக மாட்டாங்க’.

பாசப் பராமரிப்பு

உங்களை இத்தனை வயது வரை பார்த்துப் பார்த்து வளர்த்தவர்களுக்கு உங்கள் குழந்தைகளை வளர்க்கத் தெரியாதா? பெற்றவர்களை வீட்டில் வைத்துக்கொள்ளத் தயங்குகிறவர்கள், முன் பின் அறிமுகமில்லாதவர்களிடம் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பைத் தருகிறார்கள். பச்சிளம் குழந்தையையும் பள்ளிக்குச் சென்று திரும்புகிற குழந்தைகளையும் பசியறிந்து, உள்ளன் போடு பாதுகாத்து வளர்க்க தாத்தா, பாட்டிகளின் துணை அவசியம்.

நான் பார்க்கிற பேபி சிட்டர்களில் பலர் பூங்காக்களில் குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு, யாருடனாவது அரட்டை அடித்துக்கொண்டி ருப்பார்கள். தனியாக விளையாடிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தைகளிடம் சிலர் தவறான முறையில் நடந்து கொள்வதைப் பார்த்து நான் கண்டித்தும் இருக்கிறேன். பேபி சிட்டரிடம் சொன்னால் என்னிடம் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள்.

வீட்டில் பாட்டி, தாத்தா இருந்தால் குழந்தைகளுக்கு அந்நிய மனிதர்களால் ஏற்படும் எந்தப் பிரச்சினையும் வராது. குழந்தைகளும் பள்ளிவிட்டு வந்தவுடன் பள்ளியில் நடந்த எல்லா விஷயங்களையும் தாத்தா, பாட்டியுடன் பகிர்ந்துகொள்வார்கள். குழந்தைகளுக்கு நல்ல தோழனாகவும் ஆசானாகவும் பாதுகாப்பு தரும் அரணாகவும் அவர்களால் இருக்க முடியும். இளைய தலைமுறை பெற்றோர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.

- நான்ஸி ராணி, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x