Last Updated : 23 May, 2017 10:51 AM

 

Published : 23 May 2017 10:51 AM
Last Updated : 23 May 2017 10:51 AM

சேதி தெரியுமா? - சிகரம் தொட்ட இந்தியப் பெண்

எவரெஸ்ட் சிகரத்தை நான்கு முறை தொட்ட பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார் அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்ஷு ஜாம்சென்பா (Anshu Jamsenpa). இதற்கு முன்பு 2011-ல் இரு முறையும், 2013-ல் ஒரு முறையும், எவரெஸ்ட் சிகரத்தை தொட்டிருக்கிறார். இந்த முறை மே 12 அன்று எவரெஸ்ட்டை அடைந்தார். இதன் மூலம் அதிக முறை எவரெஸ்ட்டை தொட்ட பெண் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். எவரெஸ்ட் ஏறுவதற்கு முன்பு கடந்த ஏப்ரல் 2 அன்று திபெத் மத குரு தலாய் லாமாவிடம் ஆசி பெற்றார். ஐந்தாவது முறையாக எவரெஸ்ட் ஏறவுள்ளதாகவும் அன்ஷு தெரிவித்துள்ளார். 38 வயதான இவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாய். ஜப்பானைச் சேர்ந்த ஜுன்கோ டபெய் (Junko Tabei) எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்.



சிங்கப்பூர் - இந்தியா கூட்டுப் பயிற்சி

சிங்கப்பூர் மற்றும் இந்தியக் கப்பற்படை இணைந்து முதன் முதலாக 1994-ல் பயிற்சியில் ஈடுபட்டன. அதன் பிறகு 24 முறை பயிற்சியில் ஈடுபட்டடுள்ளன. தற்போது நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டறிவது குறித்தும் அவற்றைத் தாக்கி அழிப்பதைக் குறித்தும் இணைந்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளன. இந்தப் பயிற்சியில் இந்தியாவின் சார்பில் நான்கு போர்க் கப்பல்கள் பங்குபெறவுள்ளன. போர்ப் பயிற்சி விமானமும் பங்குபெறவுள்ளது. இவை அல்லாது சிங்கப்பூர் போர்க் கப்பல்களும் இந்தப் பயிற்சியில் பங்குபெறும். சீனா தொடர்ந்து உரிமை பாராட்டிவரும் தென் சீனக் கடற்பரப்பில்தான் இந்தப் பயிற்சி நடக்கவுள்ளது.



ஸ்குவாஷில் காலிறுதிக்கு முன்னேற்றம்

சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அபய் சிங், அகாங்ஷா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். பிலிப்பைன்ஸ் ஸ்குவாஷ் அகாடமி நடத்திவரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி பிலிப்பைன்ஸின் மகாட்டி நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் முதல் சுற்றில் ரவி தீக்ஷித்துடன் மோதினார்.

இதில், அபய் சிங் 11-5, 11-8, 11-8 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அகாங்ஷா மலேசியாவின் நஜியா ஹனிஸுடன் மோதினார். இதில், அகாங்ஷா 3-11, 11-9, 13-11, 7-11, 11-9 என்ற செட் கணக்கில் நஜியா ஹனிஸைத் தோற்கடித்தார். அகாங்ஷாவுடன் அபய்சிங்கும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.



மரண தண்டனைக்குத் தடை

இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ரோன்னி ஆப்ரஹாம் தலைமையிலான நீதிமன்ற அமர்வு இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை பாகிஸ்தான் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

2016 மார்ச் 3-ம் தேதி அவரை ஈரானில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், மாஸ்கெல் பகுதியில் பாகிஸ்தான் உளவுத் துறையினர் கைதுசெய்தனர். கராச்சி குண்டுவெடிப்பில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த ராணுவ நீதிபதிகள், குல்பூஷண் ஜாதவுக்கு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தனர். இதைத் தொடர்ந்து குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை எதிர்த்துச் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தரப்பில் முறையிடப்பட்டது.



அமெரிக்க அதிபருக்கு எதிராக விசாரணை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ரஷ்யத் தலையீடு குறித்து விசாரிக்க அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அட்டர்னி ஜெனரல் ரோசன்ஸ்டைன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். சமீபத்தில் அமெரிக்கா வந்த ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு குறித்த தகவல்களை ட்ரம்ப் வழங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது மட்டுமல்லாது அமெரிக்க நாடாளுமன்றக் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபைத் தலைவர் கெவின் மெக்கார்த்தி, ரஷ்ய அதிபர் புதின் ட்ரம்புக்குப் பணம் வழங்கியுள்ளார் என்று கூறியுள்ளது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரஷ்யத் தலையீடு குறித்து விசாரிக்க முடிவானது.



உலகக் கோப்பை வில்வித்தையில் தங்கம்

சீனாவில் நடந்த உலக கோப்பை வில்வித்தை தொடரின் காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது. சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2017-க்கான முதல் உலக கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்றது. ஆண்கள் அணிகளுக்கான காம்பவுண்ட் பிரிவில் அபிஷேக் வர்மா, சின்ன ராஜு, அமன்ஜீத் சிங் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. இந்திய அணி முதல் சுற்றில் வியட்நாம், காலிறுதியில் ஈரான் அணிகளை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

அரையிறுதிப் போட்டியில் மிகவும் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய இந்திய அணி 232 230 என்ற கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த ரியோ வைல்டு, ஸ்டீவ் ஆன்டர்சன், பிராடன் ஜெலந்தியன் ஆகியோர் கொண்ட அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் இந்திய அணி, கொலம்பியாவுடன் மோதியது. மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் கார்டோனா, ஆஸ்பினா, டேனியல் ஆகிய வீரர்களை இந்திய அணி 226 221 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. இதன் மூலம், இத்தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x