Last Updated : 06 Aug, 2016 01:35 PM

 

Published : 06 Aug 2016 01:35 PM
Last Updated : 06 Aug 2016 01:35 PM

வாழ்வென்பது வெறும் காற்று?

இப்படி ஒரு சூழ்நிலையை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்...

அன்பான, செல்வச் செழிப்புள்ள‌ குடும்பம் ஒன்றில் பிறந்து, படித்து, வேலைக்குச் சேர்கிறீர்கள். மனதுக்குப் பிடித்த வேலை. கை நிறைய சம்பளம். நாடே உங்களைத் திரும்பிப் பார்க்கும்படியான சாதனைகளைச் செய்கிறீர்கள். உங்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. நல்ல நண்பர்கள். அழகான, அன்பான, உங்களைப் புரிந்துகொண்ட காதலி. இன்னும் சில மாதங்களில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு அவரை கரம் பிடிக்க இருக்கிறீர்கள். வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிட்டதாக, உலகத்திலேயே ‘மனம் போல வாழ்வு' என்பது, உங்களுக்கு மட்டும்தான் கிடைத்திருக்கிறது என்று உங்கள் நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு செய்தி வருகிறது... உங்களுக்குப் புற்றுநோய்! அதுவும் குணப்படுத்தவே முடியாத நுரையீரல் புற்றுநோய்!

நீங்கள் என்ன செய்வீர்கள்...?

அப்படி ஒரு நிலை உங்களுக்கு ஏற்பட்டால் அதை எப்படி அணுக வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிற புத்தகம்தான், ‘வென் ப்ரெத் பிகம்ஸ் ஏர்' எனும் புத்தகம். அமெரிக்காவில் மிக இளம் வயதிலேயே நரம்பியல் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்து, நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு இறந்துபோன மருத்துவர் பால் கலாநிதிதான், இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். அவர் இறந்தபோது அவருக்கு வயது 36 தான்!

இலக்கியத்திலிருந்து மருத்துவம்

பால் கலாநிதியின் பூர்வீகம் தமிழ்நாடு. அவரின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா சென்று மருத்துவராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். முதுநிலை ஆங்கில இலக்கியம் கற்றும், தன் அறிவுப் பசியால் தந்தையின் வழியைப் பின்பற்றி மருத்துவத் துறையிலே கால்பதித்தார் பால் கலாநிதி. எவ்வளவுதான் விஷய ஞானம், அனுபவம் உள்ளவராக இருந்தாலும் பல நேரங்களில் சறுக்கிவிட வைக்கிற நரம்பியல் துறையில், தன் சேவையை அவர் தொடங்கினார். பணியைத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே செய்த சாதனைகளுக்காகவும், நரம்பியல் துறையில் மேற்கொண்ட ஆய்வுகளுக்காகவும் ‘அமெரிக்கன் அகாடமி ஆஃப் நியூரலாஜிக்கல் சர்ஜரி'யின் உயரிய விருதைப் பெற்றார்.

இன்னும் சில மாதங்களில் தன் காதலியும் மருத்துவருமான லூசியைக் கைப்பிடிக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் காரணமில்லாமல் ஏற்பட்ட முதுகு வலிக்காக சிகிச்சைக்குச் செல்ல, அப்போது எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே மூலம் தெரியவந்தது... நுரையீரல் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று!

மரணத்திலிருந்து கற்றுக்கொள்ளல்

தனக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பற்றி லூசியிடமும், தன் குடும்பத்தினரிடமும் அவர் பகிர்ந்துகொள்கிற விதம், அதை அவர்கள் ஏற்றுக்கொள்கிற விதம், கடுமையான முதுகுவலி, தலைசுற்றல், சோர்வு ஆகியவை தன்னை ஆட்கொண்டபோதும் தொடர்ந்து 36 மணி நேரத்துக்கு நோயாளிகளிடம் மேற்கொண்ட அறுவைசிகிச்சைகள், மரணத்துக்கு ரொம்பவும் பக்கத்தில் வந்துவிட்டோம் என்று தெரிந்தவுடன் எவ்வாறு வாழ்க்கையையும் மரணத்தையும் அவர் பார்த்தார் எனப் பல விஷயங்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் அவர் பதிவு செய்திருக்கிறார்.

புத்தகத்தின் ஓரிடத்தில் அவர் இப்படிச் சொல்கிறார்: “துயரம் என்பது ஐந்து நிலைகளைக் கொண்டது. அவை மறுப்பு, கோபம், விலை பேசுதல், மன அழுத்தம் மற்றும் ஏற்றுக்கொள்ளல் என்பதாக இருக்கின்றன. தனக்குத் துயரம் ஏற்பட்டவுடன் ஒருவர் முதலில் அதை மறுப்பார். பிறகு கோபம் கொள்வார். பிறகு அதிலிருந்து விடுபட விலைபேசுவார். அது நடக்காது என்று தெரிந்ததும் தனக்கு ஏன் இப்படி நடந்தது என்று மன அழுத்தம் கொள்வார். இறுதியில் 'ஆனது ஆகட்டும்' என்று அதனை ஏற்றுக்கொள்வார். இப்படிப் படிப்படியாக மற்றவர்கள் துயரத்தை எதிர்கொண்டபோது, நான் அவற்றைத் தலைகீழாக அணுகினேன்”.

இள வயதில் மரணத்தைப் பற்றிச் சிந்திப்பவர்கள், அவ்வாறு மரணமடைபவர்களைப் பற்றிச் சிந்திப்பவர்கள் என எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் மருத்துவரும் எழுத்தாளருமான அதுல் கவாண்டே, ‘மரணித்துக் கொண்டிருப்பவர்கள்தான் நமக்கு அதிகமாகக் கற்றுத் தருகிறார்கள்' என்கிறார். இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் அது உண்மை என்பது நமக்குத் தெரிய வருகிறது.

நீக்கமற நிறைந்தவர்கள்

இன்னும் ஓர் இடத்தில் இப்படி எழுதியுள்ளார்:

"என்னுடைய நோயாளிகளுக்கு நான் முழுவதுமாகப் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாமல் போனதற்குப் புற்றுநோயை ஒரு காரணமாகக் காட்டினேன். என்றாலும், இன்னொரு வகையில் அது நன்மை பயப்பதாகவே அமைந்தது. புற்றுநோய் தாக்கிய பிறகு, மிகவும் சீக்கிரமாகவே மருத்துவமனைக்கு வந்துவிடுகிறேன். இரவு நெடுநேரம் இங்கேயே தங்கி மருத்துவப் பணிகளை மேற்கொள்கிறேன். எனது எல்லா செயல்களிலும், எனது நோயாளிகளே நீக்கமற நிறைந்திருந்தார்கள். நோயாளிகளுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது, நான் செய்துவந்த மருத்துவப் பணிக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்தது."

நோயில் தான் வாடியபோதும், தன்னுடைய பணியை, தன்னை நம்பி வந்த நோயாளிகளைக் கைவிடாத இவரின் பாங்கு, காலா காலத்துக்கும் மருத்துவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.

இறுதி மூச்சுவரை மருத்துவச் சேவை

தனக்குப் புற்றுநோய் ஏற்பட்டதை அறிந்தவுடன் பால் கலாநிதி அதை மிகவும் 'பாஸிட்டிவ்' ஆகக் கையாண்டதை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதற்குக் கீழ்க்காணும் உதாரணங்கள் சாட்சி.

தேடிக் கண்டடைந்த புது வாழ்க்கை

புத்தகத்தின் ஓர் இடத்தில் இப்படி எழுதியுள்ளார்:

“எனக்கு நோய் இருப்பதை அறிந்தவுடன் அதை நான் இரண்டு விதமான பார்வைகளிலிருந்து அணுகத் தொடங்கினேன். ஒன்று மருத்துவராகவும், இன்னொன்று நோயாளியாகவும். ஒரு மருத்துவராக, ‘நான் இந்தப் புற்றுநோயை வென்றுவிடுவேன்!' என்று சபதம் செய்யவோ அல்லது ‘எனக்கு ஏன் இப்படி நடந்தது?' என்று சோகத்தில் உழலவோ மாட்டேன்.

கற்றறிந்த மருத்துவராகவும் விஞ்ஞானியாகவும், என்னுடைய நோய் எனக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளையும், மருத்துவத்தின் அதிகபட்ச எல்லையையும் அறிய முயற்சிப்பேன்.

இந்த நேரத்தில் எனக்கு முன்பு இருக்கும் வாய்ப்புகள் இரண்டுதான். ஒன்று, நான் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தப் பழைய வாழ்க்கையை முற்றிலும் புதிதாகக் கட்டமைக்க வேண்டும். அல்லது, புதிதாக ஒரு வாழ்க்கையை நான் தேடிக் கண்டடைய வேண்டும். இதில் எதை நான் தேர்வு செய்யப் போகிறேன்?”

துள்ளி எழச் செய்த கடமையுணர்வு

தன்னுடைய நோயை ஓரளவு மட்டுப்படுத்தி வைத்திருந்த தருணத்தில் கலாநிதி மேற்கொள்ளும் முடிவு, நோய் கண்ட எவரையும் துள்ளி எழச் செய்துவிடும்.

அது பற்றி இப்படி எழுதியுள்ளார்:

“நரம்பியல் அறுவைசிகிச்சை என்பது மிகமிகக் கடினமான ஒரு வேலை. என்னுடைய நிலையைப் புரிந்துகொண்டவர்கள் எவரும், அந்தப் பணியிலிருந்து நான் விடைபெறுவதை ஒருபோதும் தவறாகக் கருத மாட்டார்கள். (‘இந்த வேலை உங்களுக்கு ஆகச் சிறந்ததா?' என்று கேட்டால், நான் நிச்சயமாக ‘ஆம்' என்றே சொல்வேன். இதை நீங்கள் வெறும் பணம் சம்பாதிக்கும் வேலையாக மட்டுமே பார்க்க முடியாது. ஏனென்றால், அதை வெறும் வேலையாக மட்டுமே கருதினால், இருப்பதிலேயே மிகவும் மோசமான வேலை அதுதான்).

என்னுடைய பேராசிரியர்கள் சிலர், இந்த நிலைமையில் நான் மீண்டும் அறுவைசிகிச்சைப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று கருதினார்கள். எனினும், மீண்டும் அறுவைசிகிச்சைக்கான கத்தியை எடுப்பதற்கு மெல்ல மெல்ல என் கைகள் பரபரத்தன.

எனக்கிருக்கும் ‘பொறுப்புணர்வு பாரம்' என்னை உந்தித் தள்ளிக்கொண்டே இருந்தது. எது பாரமாக உள்ளதோ, அது ஈர்ப்பு விசையையும் கொண்டிருக்கும். என்னுடைய வேலையின் மீது நான் கொண்டிருந்த ‘கடமையுணர்வு பாரம்', மீண்டும் என்னை அறுவைசிகிச்சை அறைக்குள் இழுத்தது. லூசி (காதலி) எனக்கு ஆதரவாக இருந்தாள்.

ஒரு நாளைக்கு ஒரு ‘கேஸ்' மட்டும் பார்க்க ஒப்புக்கொண்டேன். மண்டை ஓட்டை அறுத்து, மூளை தொடர்பான அறுவைசிகிச்சைகளை மேற்கொள்வது எனக்கு மிகவும் பிடித்தது. அடுத்த நாள் அப்படி ஒரு ‘கேஸ்' வருவதாகச் சொல்லியிருந்தார்கள். அன்றிரவே அறுவைசிகிச்சை தொடர்பான புத்தகங்களை எடுத்து, மீண்டும் ஒரு முறை ‘ரிவைஸ்' செய்துகொண்டேன். கத்தியை முதலில் எங்கு வைக்க வேண்டும், மண்டை ஓட்டை எப்படித் திறக்க வேண்டும், எந்தக் கோணத்திலிருந்து மூளையின் இணைப்புகளை அணுக வேண்டும் என்று தூக்கமே இல்லாமல் யோசித்தேன். என்னை நானே தயார்படுத்திக் கொண்டேன்.”

இள வயதில் மரணத்தைப் பற்றிச் சிந்திப்பவர்கள், அவ்வாறு மரணமடைபவர்களைப் பற்றிச் சிந்திப்பவர்கள் என எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x