

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனத்தில் இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் (Junior Telecom Officer-JTO) பதவியில் 2,510 காலியிடங்கள் ‘கேட் நுழைவுத்தேர்வு-2017’ (GATE) மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
தேவையான தகுதி
விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ‘கேட்’ நுழைவுத்தேர்வை எழுதியிருக்க வேண்டும். டெலிகாம், எலெக்ட்ரானிக்ஸ், ரேடியோ, கம்ப்யூட்டர், எலெக்ட்ரிகல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பாடப் பிரிவுகளில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.எஸ்சி. (எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்) பட்டதாரியாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு
பொதுப் பிரிவினருக்கு 30 ஆக நிரணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
பணிநியமன விதிகள்
உரிய தகுதியுடைய பொறியியல் பட்டதாரிகள் >www.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ‘கேட்’ நுழைவுத்தேர்வு பதிவு எண் மூலம் ஏப்ரல் 6-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். ரூர்க்கி ஐ.ஐ.டி. நிறுவனம் பிப்ரவரி மாதம் நடத்திய நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் பணி நியமனம் நடைபெறும். இதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியாக இன்னொரு எழுத்துத் தேர்வையோ நேர்முகத் தேர்வையோ நடத்தாது. மேலும், விவரங்கள் அறிய மேற்குறிப்பிட்ட இணையதளத்தைப் பார்க்கலாம்.