Last Updated : 29 Jun, 2016 12:02 PM

 

Published : 29 Jun 2016 12:02 PM
Last Updated : 29 Jun 2016 12:02 PM

நம்ப முடிகிறதா?- ஆயிரம் ஆண்டு சுற்றும் தண்ணீர்!

பூமிப் பந்தின் மேற்பரப்பில் 70 சதவீதம் பெருங்கடல்களால் சூழப்பட்டிருக்கிறது.

பெருங்கடல்களில் ஓரிடத்தில் புறப்படும் தண்ணீர் உலகெங்கும் சுற்றி மீண்டும் அதே இடத்தை வந்தடைய 1000 ஆண்டுகள் ஆகும் என்று கணித்திருக்கிறார்கள்.

பூமியில் உள்ள ஐந்து பெருங்கடல்களில் மிகப் பெரியது பசிஃபிக். பூமியின் மேற்பரப்பில் 30 சதவீதத்துக்கு இது சூழ்ந்திருக்கிறது.

பசிபிக் கடலைக் கடக்கும்போது மெகல்லன் ‘Mar Pacifico’ என்று அழைத்தார். போர்த்துக்கீசிய மொழியில் ‘அமைதியான கடல்’ என்று அர்த்தம். இதிலிருந்து உருவானதுதான் ‘பசிஃபிக்’ என்ற பெயர்.

பல்வேறு சுற்றுச்சூழல் மாற்றங்கள் காரணமாக அட்லாண்டிக் பெருங்கடல் பெரிதாகிறது, பசிஃபிக் பெருங்கடலோ இப்போது சுருங்கி வருகிறது.

பெருங்கடல்களின் ஆழமான பகுதி ‘மரியானா டிரெஞ்ச்’. அதன் ஆழம் 11 கி.மீ.. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8.6 கி.மீ.. அப்படிப் பார்த்தால் பூமியின் உயரமான புள்ளியைவிட, ஆழமான புள்ளி பெரியது.

உலகின் மிக நீண்ட மலைத்தொடர் தரைப் பகுதியில் இல்லை. கடலுக்கு அடியில்தான் இருக்கிறது. பூமிப் பந்தின் மத்தியில் கடலுக்குக் கீழே உள்ள மிட் ஒசியானிக் ரிட்ஜில் 56,000 கி.மீ. நீளம் கொண்ட இந்த மலைத்தொடர் உள்ளது.

பெருங்கடல்களில் தனித்துவிடப்பட்ட தீவுப் புள்ளி பாயிண்ட் நீமோ. தென்னமெரிக்காவுக்கும் ஜப்பானியத் தீவுகளுக்கு இடையே, பக்கத்தில் தரைத் தொடர்பே இல்லாமல் இது அமைந்திருக்கிறது.

நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் பாதிக்கும் மேல் பெருங்கடல்கள்தான் உற்பத்தி செய்கின்றன.

வளிமண்டலத்தைவிட 50 மடங்கு அதிகமான கார்பனைக் கடல்கள் கிரகித்துக்கொள்கின்றன.

உலகின் மிகப் பெரிய உயிருள்ள கட்டமைப்பு கடலுக்கு அடியில்தான் உள்ளது. ஆஸ்திரேலியக் கடற்பகுதியில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப், என்ற பெருந்தடுப்பு பவளத்திட்டுகள்தான் அது. 2,600 கி.மீ. நீளமுள்ள இந்தப் பவளத்திட்டை நிலவிலிருந்துகூடப் பார்க்க முடியும்.

பெருங்கடல்கள் உயிருள்ள அருங்காட்சியகமாகக் கருதப்படுகின்றன. உலகின் அனைத்து அருங்காட்சியகங்களில் உள்ள காட்சிப் பொருள்களைவிட மிக அதிகமான காட்சிப் பொருட்களும் வரலாறும் பெருங்கடல்களின் அடியில் உறைந்து கிடக்கின்றன. சிறந்த எடுத்துக்காட்டு: டைட்டானிக் கப்பல்.

உலகின் மிகப் பெரிய குப்பைத் தொட்டியாக இருப்பதும் கடல்தான். சாதாரண பிளாஸ்டிக் குப்பை முதல் அணுக்கழிவுவரை கொட்டப்படும் இடமாகப் பெருங்கடல்கள் இருக்கின்றன.

உலகப் பெருங்கடல்களில் ஐந்து சதவீதப் பகுதியில் மட்டுமே இதுவரை ஆராய்ச்சி நடந்திருக்கிறது. எஞ்சிய 95 சதவீதப் பகுதியில் பெரிய ஆராய்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.

பெருங்கடல்களில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினங்கள் 25 சதவீதம் மட்டுமே. இன்னும் அடையாளம் காணப்படாத 75 சதவீத உயிரினங்கள் இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x