Published : 12 Feb 2017 12:17 PM
Last Updated : 12 Feb 2017 12:17 PM

முகம் நூறு: உரத்து ஒலிக்கும் பெண்களின் குரல்

பூமியையே அதிர வைக்கும் ஆர்ப் பாட்டமான பறை இசையும் நடுநடுவே சிணுங்கும் சலங்கை ஒலியும் எல்லோரையும் உற்சாகக் கடலில் மூழ்கடித்து, உத்வேகம் அளிக்கக்கூடியவை. பறை என்பது நம் மண்ணின் கலை. உணர்வுகளை மீட்டு, உத்வேகம் தரும் பாரம்பரிய கலை. சமீபகாலமாக நாட்டுப்புறக் கலைகளை நோக்கி அதிக அளவில் இளைஞர்களும் பெண்களும் ஆர்வத்துடன் வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கோடாங்கி கலைக் குழுவில் முழுக்க முழுக்கப் பெண் கலைஞர்களே இருக்கின்றனர். சென்னையில் இவர்கள் நிகழ்த்திய பறையாட்டம், ஒயிலாட்டம், அரிவாள் ஆட்டம், அறுவடை ஒயில் போன்ற பல்வேறு நாட்டுப்புற நடனங்களைப் பார்த்த யாரும் தாளம் போடத் தவறவில்லை. ஆடாத கால்களைக்கூட ஆட்டுவித்த கெட்டிக்காரர்கள் கோடாங்கி குழுவினர்.

ஆவேசத்துடன் அரிவாள் ஆட்டத்தை ஆடிவிட்டு வந்த ஒருங்கிணைப்பாளர் உமா ராணி, “கலையைப் பொறுத்தவரை ஆண், பெண் பேதம் இருக்கக் கூடாது. பெண்கள் அதிகம் பங்கேற்காத பறை இசையில், பெண்களை மட்டும் வைத்து ‘கோடாங்கி குழு’வை உருவாக்கினேன். பதினான்கு ஆண்டுகளாக எங்கள் குழு வெற்றிகரமாக நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது. தற்போது எங்கள் குழுவில் எட்டுப் பெண்கள் உட்பட இரண்டு திருநங்கைகளும் உள்ளனர்” என்றார்.

நாட்டுப்புறக் கலைஞராவதற்கு முன்பு மத்திய அரசின் அறிவொளி இயக்கத்திலும், நூலக உதவிப் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் உமா ராணி. நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவத்தையும் தற்போதைய அவசியத்தையும் அறிந்து, வேலு ஆசானிடம் பறை பயிற்சி பெற்றார்.

“இசைக்கு மொழி, இனம், மதம், சாதி வேறுபாடுகள் இருக்கக் கூடாது. தமிழ்நாட்டில் இசையிலும் சாதியைச் சுமத்தி ஒதுக்கிவைத்திருந்தனர். தற்போது நாட்டுப்புறக் கலைகள் குறித்துப் பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது. நாட்டுப்புறக் கலைகளைக் காப்பாற்றுவதற்குப் பலரும் ஆர்வம் காட்டிவருவது ஆரோக்கியமான விஷயம். மாதவிடாய் காலத்தில் பெண்கள் பறை, தவில் போன்ற வாத்தியங்களைத் தொட்டால் உடைந்துவிடும் என்பது போன்ற மூட நம்பிக்கைகள் பரவலாக உள்ளன. இதுபோன்ற அறியாமை கருத்துகளை அடித்து நொறுக்கவே உருவான எங்கள் கலைக் குழுவுக்கு, ‘கோடாங்கி கலைக் குழு’ என்று பெயர் வைத்திருக்கிறேன்” என்கிறார் உமா ராணி.

தன்னம்பிக்கை தரும் பறை

கோடாங்கி கலைக் குழுவில் உள்ள அனைத்துப் பெண் கலைஞர்களும் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் கலை வளர்மணி விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். டாக்டர் ராமசாமி தோல் இசைச் சங்கம் சார்பிலும் கிராமியப் பறை இசை முரசு விருதும் இந்தக் கலைக் குழுவினருக்குக் கிடைத்திருக்கிறது.

“கல்யாணத்துக்குப் பிறகு தெருவுல இறங்கி, பறையடிப்பதை என் கணவர் விரும்பவில்லை. குடும்பப் பிரச்சினைகள் காரணமாகத் தற்போது பெற்றோருடன் இருக்கிறேன். ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் போதே மேடைகளில் பறையடித்து நடனமாடியிருக்கிறேன். பிரசவக் காலம் நெருங்கும்போது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், மற்றவர்களுக்குப் பயிற்சியளித்து வந்தேன். ஆரம்பத்தில் பெற்றோருக்கும் நான் பறையடிப்பது பிடிக்கவில்லை. ஆனால் இன்று அந்தப் பறைதான் எங்களின் வறுமையை விரட்ட உதவியாக உள்ளது. காலில் சலங்கையும் கையில் பறையும் இருந்துவிட்டால் எவ்வளவு பெரிய கவலையும் மறைந்துவிடும். பறை இசை எனக்குள் அசாத்தியமான தன்னம்பிக்கையை வளர்த்துள்ளது” என்கிறார் சரண்யா தேவி.

மலர்விழி, “ என்னுடைய உயிர் உள்ளவரை என் கையில் பறையும் காலில் சலங்கையும் இருக்கும். ஏராளமான நாட்டுப்புறக் கலைகள் அழிந்துவிட்டன. ஆனால் நாங்கள் கற்றுக்கொண்ட இந்தக் கலைகளை அழியாமல் பாதுகாக்க எங்களின் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்போம். அவர்கள் அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல நாங்கள் அடித்தளமாக இருப்போம்” என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார்.

தொடரும் துயரம்

அரசு நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள், தொண்டு நிறுவனங்கள், கலை இரவுகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் இவர்கள் பங்கேற்றுவருகின்றனர். நிகழ்ச்சிகள் இல்லாத காலத்தில் சிறு சிறு கூலி வேலைகளை தேடும் கட்டாயம் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இருக்கிறது. வேறு வேலைகளில் சேர்ந்துவிடுகிற கலைஞர்கள், மீண்டும் நாட்டுப்புறக் கலையைத் தொடர முடியாத சூழ்நிலையும் நிலவிவருவது வருத்தத்துக்குரியது.

“நாட்டுப்புறக் கலைஞர்களுக்கென்று மாவட்டத்துக்கு ஒரு அரசுப் பயிற்சி மையம்கூட கிடையாது. கோயில்கள், மடங்கள், பூங்காக்கள், சாலையோர மர நிழல்களில்தான் பயிற்சியை மேற்கொண்டுவருகிறோம். கோயில்களில் பறை பயிற்சி மேற்கொள்ளச் சிலர் அனுமதிப்பதில்லை. எங்கள் குழுவுக்குப் பயிற்சி மையம் அமைக்க முயற்சி செய்துவருகிறோம். அரசும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்குப் பயிற்சி மையம் அமைத்துத்தர முன்வர வேண்டும்” என்று சொல்லும் உமாராணி, பறையை ஓங்கி அடிக்கிறார். அந்தக் கம்பீரமான பறை இசையில் விடுதலையின் வேட்கை எதிரொலிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x