Published : 11 Jan 2014 12:00 AM
Last Updated : 11 Jan 2014 12:00 AM

2,342 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு ஜூனில் தேர்வு - ஆண்டு தேர்வுப் பட்டியலை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.

தமிழகத்தில் குரூப்-2 பணிகளில் 1,181 காலியிடங்களை நிரப்பிட மே மாதமும் 2,342 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கு ஜூன் மாதமும் போட்டித் தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி. நடத்த உள்ளது.

ஓராண்டில் அரசுத் துறைகளில் என்னென்ன பதவிகளுக்கு எப்போது தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்கள் அடங்கிய தேர்வுப் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. அதன்படி 2014-15ம் ஆண்டுக்கான தேர்வுப் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதை டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

ஜூனில் வி.ஏ.ஓ. தேர்வு

இந்தப் பட்டியலின்படி, நடப்பு ஆண்டில் மொத்தம் 23 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. குரூப்-2 பதவிகளில் (நேர்காணல் அல்லாதது) 1,181 காலியிடங்களை நிரப்புவதற்கு மே மாதமும், வி.ஏ.ஓ. பதவியில் 2,342 காலியிடங்களை நிரப்ப ஜூன் மாதமும் போட்டித் தேர்வு நடக்க இருக்கிறது.

நேர்காணல் கொண்ட குரூப்-2

தேர்வு ஜூலையிலும், குரூப்-4 தேர்வு அக்டோபர் மாதத்திலும் நடத்தப்படஉள்ளன. எனினும் இந்தத் தேர்வுகளில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

தகுதிதான் முக்கியம்

ஆண்டு தேர்வுப் பட்டியலை வெளியிட்ட பின்னர் நிருபர்களிடம் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:

போட்டித் தேர்வுக்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் தங்களை முன்கூட்டியே தயார்படுத்திக்கொள்வதற்கு இந்த தேர்வுப் பட்டியல் மிகவும் உதவியாக இருக்கும். தேர்வுப் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பார்க்கலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் தோராயமானவைதான். இது பின்னர் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற வேண்டுமானால் அதற்கு ஒரே வழி தகுதிதான். முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் நடக்கிறது. இதில் எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லை. லட்சக்கணக்கானவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். எனவே, தேர்வில் வெற்றிபெற வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும்.

குரூப்-4 முடிவு எப்போது?

5,566 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் குரூப்-4 தேர்வை நடத்தினோம். 13.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். மதிப்பீட்டுப் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துவிட்டன. இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்வு முடிவை வெளியிட்டு விடுவோம்.

இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x