Published : 07 Mar 2017 10:35 AM
Last Updated : 07 Mar 2017 10:35 AM

திரை விமர்சனம்: முப்பரிமாணம்

சாதி, மதம், அந்தஸ்து போன்ற வற்றால் காதல் தோல்வி யைச் சந்திப்பது உண்டு. இந்தப் படத்தில் அந்தக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒரு பரிமாணம் என்று சொல்லும் இயக்குநர், அந்தப் பரிமாணத்தையே ‘முப்பரிமாண’த்தின் ஆதாரமாக்கியிருக்கிறார்.

கல்யாண மண்டபத்தில் மணப் பெண்ணைக் கடத்துவதில் இருந்து தொடங்கும் படம், கடத்தலின் பின்னணியைச் சொல்ல, பழைய நிகழ்வுகளை அசைபோடத் தொடங்கு கிறது.

கதிரும் அனுஷாவும் அக்கம்பக் கத்து வீட்டுச் சிறார்கள். பிள்ளைக் காதலுடன் பிரிந்துபோகும் இவர்கள், பெரியவர்கள் ஆனதும் (சாந்தனு - சிருஷ்டி) மீண்டும் சந்திக்கிறார்கள். அப்போதும் அவர்களது காதல் பத்திரமாக இருக்கிறது. ஆனால் இரு குடும்பங்களுக்கு இடையிலான பகை, அவர்களது காதலுக்கு முட்டுக்கட்டையாகிறது. தடைகளை மீறித் திருமணம் செய்துகொள்ளும் முயற்சி தோற்றுப்போகிறது. இதற்குக் காரணமாக அமைந்த கண்ணுக் குத் தெரியாத அந்தப் பரிமாணம் என்ன?

அதிரடிக் கடத்தலுக்குப் பிறகு உற்சாகமான காதலைக் காட்டிவிட்டு நிகழ்காலத்துக்கு வரும் படம், பார்வையாளர்களுக்குச் சில அதிர்ச்சி களை வைத்திருக்கிறது. காதலியைக் கடத்திக்கொண்டு வரும் காதலனின் நடத்தையில் தெரியும் மாற்றம் முற்றி லும் புதிய கதையைச் சொல்கிறது. காதல் முறிவின் பின்னணியில் ஒளிந் திருக்கும் உண்மையான காரணம், பகை மட்டுமே அல்ல என்னும் கோணம் நிமிர்ந்து உட்கார வைக் கிறது. உண்மையும் பொய்யும் எப்போதும் கலந்தே இருப்பதை இயக்குநர் உணர்த்த விரும்புவதாகத் தெரிகிறது.

நாயகனின் கோணத்திலேயே காட்சிகள் சித்தரிக்கப்படுவதால் நாய கனின் கண்ணுக்குத் தெரியாத அந்தப் பரிமாணம் பார்வையாளர்களுக்கும் தெரியாமல் இருப்பது இயல்பாகவே இருக்கிறது. படத்தில் இந்த அம்சம் கவனமாகக் கையாளப்பட்டுள்ளது. ஆனால், கடத்தலுக்குப் பிந்தைய காட்சிகளைச் சித்தரித்த விதத்தில் நம்பகத்தன்மை கூடவில்லை. கதா நாயகியின் கதாபாத்திரத்தில் வித் தியாசம் காட்டியிருக்கும் இயக்குநர், நாயகன் கதாபாத்திரத்தில் சறுக்கி யிருக்கிறார். திடீரென்று போதை அடிமையாக மாறுவது, உண்மை தெரிந்ததும் அடுத்த கணமே அதில் இருந்து மீண்டு சீறிப் பாய்வது, கச்சிதமாகத் திட்டமிட்டுக் கடத்துவது ஆகியவை நம்பகமான முறையில் காட்சிப்படுத்தப்படவில்லை.

முதல் பாதியில் வரும் ஆணவக் கொலை சித்தரிப்பு பலவீனமானது. அதைத் தொடந்து வரும் எந்தக் காட்சியிலும் பெரிதாக எதுவும் நிகழவில்லை. ஈர்க்கக்கூடிய காட்சி களும் இல்லை. கதாநாயகியின் அண்ணன் 10 ஆண்டுகள் சிறை யில் இருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வரும்போதும் அப்படியே இருக்கிறார். இவர் மட்டுமல்ல; நாயகன், நாயகி தவிர வேறு யாருக்குமே படத்தில் வயது ஏற வில்லை. காலஓட்டத்துக்கு ஏற்ற குறைந்தபட்ச தோற்ற மாற்றத்தில்கூட இயக்குநர் கவனம் செலுத்தாததால், காட்சிகள் நகர்ந்தாலும் திரைக் கதையில் காலம் அப்படியே தேங்கி நிற்பதுபோன்ற எண்ணம் ஏற்படுகிறது. இது கதையோடு ஒன்றவிடாமல் செய்கிறது.

தலைப்பின் மூலம் கவனம் ஈர்க்கும் இயக்குநர் அதைப் பொருத்தமாகப் பயன்படுத்தவில்லை. ஒளிப்படங்கள், ஓவியங்களில் மூன்றாவது பரிமாணத் தைக் காண முடியாது. ஆனால், நிஜ உலகில் அது எல்லோர் கண்ணுக்கும் தெரியக்கூடியதுதான். எனவே, கண்ணுக்குத் தெரியாத ஒரு அம்சத்தைச் சுட்ட மூன்றாவது பரிமாணம் என்னும் படிமத்தை இயக்குநர் தேர்ந்தெடுத்தது பொருத்த மற்றது.

காட்சிகளையும் நடிப்பையும் தூக்கிப் பிடித்திருக்க வேண்டிய பின்னணி இசை, அதற்கு நேர்மாறாக ஒலித்து காட்சிகளின் தாக்கத்தைக் குறைக்கிறது. புத்தாண்டு பார்ட்டி பாடலைத் தவிர வேறு எந்தப் பாடலும் தேறவில்லை. இசை ஜி.வி.பிரகாஷ் என்பதை நம்ப முடியவில்லை. படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் முடிந்தவரை போராடியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ராசாமதியும் கடுமையாக உழைத்திருக்கிறார்.

தோற்றத்தை மாற்றி, நடிப்பில் கணிசமான முன்னேற்றம் காட்டியிருக் கிறார் சாந்தனு. அப்பாவிக் காதலன் பழிவாங்கும் ஆவேசம் கொண்டவ னாக மாறுவதை நன்கு சித்தரித்திருக் கிறார். சிருஷ்டி டாங்கேவுக்குக் கனமான கதாபாத்திரம். அதை ஓரளவு சமாளித்துக் கரையேறுகிறார். கதிரின் அப்பாவாக நடித்தவர், தம்பி ராமையா, அப்புக்குட்டி ஆகியோர் வீணடிக்கப்பட்டுள்ளனர்.

சாந்தனு, சிருஷ்டியின் நடிப்பு, இரண்டாம் பாதியின் திருப்பம் ஆகியவை கவனிக்கவைக்கின்றன. நம்பகத்தன்மையும் சுவாரஸ்யமும் அற்ற காட்சிகளால் தொய்வடையும் திரைக்கதையைக் காப்பாற்ற இவை மட்டும் போதாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x