Published : 05 Jan 2014 12:00 AM
Last Updated : 05 Jan 2014 12:00 AM

விண்ணைத் தாண்டிய பெண்கள்

விண்வெளியில் தொடக்கக் காலச் சாதனை புரிந்த ரஷ்யாவின் வாலென்டினா தெரஸ்கோவாவின் காலம் முதல் விண்வெளி ஆராய்ச்சிகளில் பெண்களின் பங்கு குறைத்து மதிப்பிட முடியாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிகளில் ரஷ்யாவின் பங்கு குறைந்துவிட்ட நிலையில், அதில் தீவிரக் கவனம் செலுத்தி வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசாவின் ஆராய்ச்சிகளில் இதைத் தெளிவாகக் காணலாம்.

தெரஸ்கோவாதான் விண்வெளியில் பறந்த முதல் வீராங்கனை. அவருடைய அப்பா ஒரு டிராக்டர் டிரைவர், அம்மா ஜவுளி தொழிற்சாலைப் பணியாளர். அம்மாவைப் போல அவரும் ஜவுளி தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டே படித்தார். பாராசூட்டில் பறப்பதில் தெரஸ்கோவாவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. விண்வெளி வீராங்கனையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட அதுவும் முக்கியக் காரணமாக இருந்தது. 1963இல் வாஸ்டாக் 6 விண்கலத்தில் அவர் பயணம் செய்தார். கிட்டத்தட்ட 3 நாட்கள் விண்வெளியில் செலவிட்ட அவர், 48 முறை உலகை வலம் வந்தார்.

நாசாவில்...

அமெரிக்காவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த ஷன்னான் லூசிட், அவரது வயதை ஒத்த இளம்பெண்கள் சமைத்துக் கொண்டிருந்தபோது, வாயுக்களைக் கலந்து தண்ணீரை உருவாக்கலாம் என்பதைக் கண்டுபிடித்தார். 1960களில் பெண்கள் சந்தித்துவந்த பல்வேறு தடைகளை மீறி, விண்வெளிக்குச் செல்வதில் லூசிட் ஆர்வம் கொண்டிருந்தார். விண்வெளி வீரர்/வீராங்கனை ஆவதற்கான பயிற்சி என்பது ராணுவ வீரர்/வீராங்கனை ஆவதற்கான பயிற்சியைவிட மிகக் கடுமையானது.

1983ஆம் ஆண்டில் சால்லி ரைட் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனையாக விண்ணுக்குச் சென்றார். 1984இல் கேதரின் சல்லிவன் விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கப் பெண் ஆனார்.

1996ஆம் ஆண்டில் ரஷ்ய விண்வெளி நிலையமான மிர்ரில் 188 நாட்களை லூசிட் செலவிட்டார். பின்னாளில் சுனிதா வில்லியம்ஸ் இந்தச் சாதனையைத் தகர்த்தார்.

விண்ணை ஆள்வோம்

ஆனால், லூசிட் வளர்ந்த போராட்டமான காலம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. நாசா ஊழியர்களில், 33 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள் தற்போது உள்ளனர். 1981ம் ஆண்டுக்குப் பிந்தைய 18 ஆண்டுகளில் நாசா 94 விண்கலங்களைச் செலுத்தி உள்ளது. இதில் 57 முறை பெண்கள் பயணித்துள்ளனர். 1997க்குப் பிறகு எல்லா விண்கலங்களிலும் குறைந்தது ஒரு விண்வெளி வீராங்கனையாவது இடம்பெற்று வந்துள்ளனர்.

உயிரியல்-பொருள் அறிவியல்-எலும்பு செல் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபடும் நோக்கத்துடன் 1992இல் எண்டவர் விண்கலத்தில் மருத்துவரான மே ஜெமிசன் சென்றார். விண்வெளி சென்ற முதல் கறுப்பினப் பெண் அவர்.

அமெரிக்க விமானப் படையில் பணியாற்றிய லெப்டினன்ட் கர்னல் எலீன் காலின்ஸ், 1995இல் நாசா விண்கல விமானிகளில் ஒருவராக மாறினார். அவரே முதல் பெண் விண்கல விமானி. 1999ஆம் ஆண்டில் விண்கலத்தைச் செலுத்தும் முதன்மை விமானியாகவும் ஆனார்.

1998ஆம் ஆண்டில் வரலாற்றிலேயே முதன்முறையாக விண்கலத்தைச் செலுத்துவதற்கான பொறுப்பாளர், அவரது உதவியாளர், விண்கல இயக்குநர், விண்கலம் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையிலான தொடர்பாளர் ஆகிய அனைவரும் பெண்களாக நியமிக்கப்பட்டனர்.

சோகங்கள்

விண்வெளிப் பயணம் மிகப் பெரிய சாகசமாகக் கருதப்பட்டாலும், விண்வெளிக்குச் சென்ற பெண்கள் சார்ந்து சில சோகங்களும் நிகழாமல் இல்லை. 1986ஆம் ஆண்டில் சாலெஞ்சர் விண்கலம் புறப்பட்டுச் சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறியதில் வீராங்கனை ஜூடி ரெஸனிக், பள்ளி ஆசிரியை கிறிஸ்டா மெக்ஆலிப் ஆகிய இருவரும் இறந்தனர்.

2003 பிப்ரவரி 1ஆம் தேதி கொலம்பியா விண்கலம் ஆராய்ச்சிகளை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியபோது, வளிமண்டலத்தில் உராய்வு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா, லாரல் பிளேர் சால்டன்கிளார்க் ஆகிய இரண்டு வீராங்கனைகள் உட்பட 7 பேர் பலியாகினர். நாசாவின் முயற்சிகளில் பெரும் பின்னடைவு ஏற்படக் காரணமாக இருந்த சம்பவம் இது.

இந்திய வம்சாவளியினர்

கல்பனா சாவ்லாதான், விண்வெளியில் பறந்த முதல் இந்திய வம்சாவளி பெண். 1988ஆம் ஆண்டு விண்வெளி பொறியியலில் முனைவர் ஆராய்ச்சி பட்டம் பெற்ற அவர், தொடர்ந்து நாசாவின் ஏம்ஸ் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிய ஆரம்பித்தார். 1994ஆம் ஆண்டில் விண்வெளியில் 32 நாட்களுக்கு அவர் இருந்துள்ளார்.

அவருக்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விண்ணுக்குச் சென்றுள்ளார். அமெரிக்கக் கடற்படை அதிகாரியான சுனிதா, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நாசா அனுப்பிய 14வது, 15வது பயணங்களில் உறுப்பினராகவும், 32வது பயணத்தில் விமானப் பொறியாளராகவும், 33வது பயணத்துக்குக் கமாண்டராகவும் செயல்பட்டிருக்கிறார். ஒரே தடவையில் நீண்ட காலம் விண்வெளியில் கழித்த பெண் (195 நாட்கள்), விண்வெளியில் அதிக முறை நடந்த பெண் (7 முறை), விண்வெளியில் மிக அதிக நேரம் நடந்த பெண் (50 மணி, 40 நிமிடங்கள்) ஆகிய சாதனைகளை அவர் புரிந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x