Published : 25 Sep 2016 11:46 AM
Last Updated : 25 Sep 2016 11:46 AM

திரைக்குப் பின்னால்: வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது!

எப்போதுமே எவ்வளவு பெரிய சாதனை செய்திருந்தாலும், இதனை நான் செய்தேன் என்று வெளியேச் சொல்லி பெருமை தேடிக் கொள்ளாதவர்கள் பெண்கள். அந்த பெண்கள் வரிசையில் லாவண்யாவுக்கு முக்கியமான இடம் தரலாம். 'Pirates of the Carriabean 4', 'Mission Impossible 4', 'Transformers 3', 'Avengers', 'Battle Ship', 'Star trek 2' என ஹாலிவுட் படங்களில் பணியாற்றிவிட்டு, தற்போது 'பாகுபலி 2'வில் திட்டப்பணி ஒருங்கிணைப்பாளராக (Project Co-ordinator) பணியாற்றிவருகிறார். அவர் அளித்திருக்கும் முதல் பேட்டியும் இதுதான்!

திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் பணியை பற்றிச் சொல்லுங்கள்...

ஒரு படத்தின் கிராபிக்ஸ் பணிகள் உள்ளே வரும் போது, படக்குழு அளிக்கும் நேரத்துக்குள் அவர்கள் எதிர்பார்க்கும் தரத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும். உள்ளே வரும் கிராபிக்ஸ் பணியில் எவ்வளவு வேலை அடங்கியிருக்கிறது, அதற்கு எவ்வளவு பெரிய குழு வேண்டும் உள்ளிட்டவை அனைத்தையும் முடிவு செய்து அப்பணியை உள்ளே எடுத்து, தரத்துடன் முடித்து கொடுக்க வேண்டும். குறித்த தேதிக்கு முன்பு முடித்து காண்பிக்க வேண்டும். எனது அணியில் இருக்கும் கலைஞர்கள் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் இருவருக்கு இடையில் ஒரு பாலமாக இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக நேர விரயமில்லாமல் சரியாக திட்டமிட்டு செய்வது தான் திட்டப்பணி ஒருங்கிணைப்பாளரின் பணி.

இதுவரை எவ்வளவு தமிழ் படங்களில் பணியாற்றி உள்ளீர்கள்...

ஒரு கிராபிக்ஸ் தொழில்நுட்ப பணியாளராக 50க்கும் மேற்பட்ட இந்திய மொழி படங்களில் பணியாற்றியுள்ளேன். திட்டப்பணி மேலாளராக 'கத்தி', 'டிமான்ட்டி காலனி', 'புலி' இப்போது 'பாகுபலி 2' ஆகியவற்றில் பணியாற்றி இருக்கிறேன். 'பாகுபலி 2'வில் நிறைய நிறுவனங்கள் பணியாற்றி வருகிறது. அதில் என்னுடைய நிறுவனமான 'UNIFI MEDIA'வுக்கு வரும் பணிகளுக்கு நான் திட்டப்பணி மேலாளராக மட்டுமன்றி ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறேன்.

கிராபிக்ஸ் துறையில் ஆர்வம் வந்தது எப்படி? உங்களுடைய வளர்ச்சிக்கு திருமணம் ஒரு தடையாக இருந்ததா...

கல்லூரியில் கணக்கு பாடம் படிக்க வேண்டும் என நினைத்தேன். அப்போது எனக்கு என்னவாகப் போகிறோம் என்ற எந்தவொரு திட்டமிடலும் இல்லை. பி.காம் படித்தபின் கமலக்கண்ணன் சார் வழிக்காட்டுதலின்படி 'இந்தியன் ஆர்டிஸ்ட்' நிறுவனத்தில் 3டி ஆர்டிஸ்ட்டாக பணிபுரிய தொடங்கினேன். அங்கு எனது பணியைப் பார்த்து அடுத்தகட்ட பணிக்கான பயிற்சியளிக்கத் தொடங்கினார்கள். அப்படித்தான் ஆர்வத்தால் நிறைய கற்று இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.

எனக்கு திருமணம் ஒரு தடையாக இருக்கும் என நினைத்ததில்லை. அதற்கு என் பெற்றோரின் வளர்ப்பு தான் காரணம். சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் போதும் ஒடத் தொடங்கினால் போது, யாருடைய வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது. ஆண்களால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதெல்லாம் பொய்.

உங்களுடைய துறையில் பெண்கள் அதிகமளவில் இல்லையே. என்ன காரணம்?

இங்கு எண்ணிப் பார்க்கும் அளவுக்குத் தான் பெண்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் வேலை எப்போது முடியும் என்பது தெரியாது. மற்ற வேலை போன்று குறித்த நேரத்துக்கு முடிந்து விடும் என சொல்ல முடியாது. கண்டிப்பாக கிராபிக்ஸ் துறைக்கு பெண்கள் அதிகளவில் வரலாம். ஏனென்றால் வழக்கமாகவே பெண்களுக்கு கலைத்திறன் மிகவும் அதிகம். இத்துறைக்குள் வந்தால் அவர்களுடைய கலைத்திறன் எளிதாக வெளியே கொண்டு வரமுடியும்.

ஹாலிவுட் இயக்குநர்கள் - இந்திய இயக்குநர்கள் இருவரின் திட்டமிடல் எப்படி இருக்கிறது? ஹாலிவுட் அளவுக்கு இங்கு கிராபிக்ஸுக்கு பணம் செலவழிக்கிறீர்களா?

வித்தியாசம் இருக்கிறது. முதலில் ஹாலிவுட் படங்களின் சந்தை பெரியது. அதனால் அதன் பொருட்செலவும் அதிகம், எனவே அவர்கள் தரத்தை மட்டுமே முன்னுறுத்தி அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்டு ஒரு படத்தை தயாரிப்பார்கள். படப்பிடிப்பின் முன்பு அதிக நேரம் செலவழித்து எப்படி படப்பிடிப்பு நடத்த வேண்டும், என்ன தேவை என்பதை கலந்து ஆலோசித்த பின்பு தான் அடுத்த கட்டத்திற்குச் செல்வார்கள். அதனால் திட்டமிடலுக்கும், படப்பிடிப்புக்கும் அதிக வேறுபாடு இருக்காது.

ஆனால், நமது சினிமா சந்தை சிறியது. இங்கு ஹாலிவுட் படங்களுக்கு நிகரான பொருட்செலவு பொதுவாக இருப்பதில்லை. அதிலும், கிராபிக்ஸ் பணிக்கு படத்தின் பொருட்செலவில் மிகக் குறைவான அளவே ஒதுக்குவார்கள். கால அவகாசம், ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாக இருக்கும். வெகுசில இயக்குநர்கள் தவிர, சி.ஜியில் எந்த தவறையும் திருத்திக் கொள்ளலாம் என்று எண்ணுவதாலும், தரமான கிராபிக்ஸ் பணி செய்து முடிக்க எவ்வளவு திட்டமிடல் மற்றும் கால அவகாசம் தேவை என்பதன் விழிப்புணர்வு அதிகம் இல்லாததாலும் நமது திரைப்படங்களில் பணியாற்றுவது சற்று சவாலான விஷயமாக தான் இருக்கிறது. ஆனால், சமீப காலமாக நமது இயக்குநர்கள் கிராபிக்ஸ் பற்றிய ஆர்வம் மற்றும் விழிப்புணர்வு வளர்ந்து கொண்டிருப்பது ஆறுதலான விஷயம். முன்பை விட இப்போது கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் வர ஆரம்பித்திருக்கின்றன.

உங்களுடைய வளர்ச்சியைப் பார்த்து கணவர் என்ன சொல்கிறார்?

என் கணவரின் பெயர் மொஹிந்தர்(Mohinder). அவரும் இதே துறையைச் சார்ந்தவர் தான். 'பாகுபலி 2' கிராபிக்ஸ் பணிகளில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். நாங்கள் இருவருமே கிராபிக்ஸ் துறையில் இருப்பது தான் ப்ளஸும் மைனஸும். அவருடைய பணிக்கு எவ்வளவு நேரமாகும், என்பதை நான் உணர்ந்துக் கொள்வேன். ஒரே பணியில் இருப்பதால் பணிச் சார்ந்த சிறு சிறு கருத்து வேறுபாடு எங்களுக்குள் வரும். அவை எல்லாம் 10 நிமிடத்தில் மறந்துவிடுவோம். இருவரின் வளர்ச்சியிலும் இருவருக்குமே சந்தோஷம் தான்.

உங்களுடைய பணிக்கு நேரம் தவறாமைத் தான் முக்கியம் என சொல்கிறீர்கள். அதனை கையாள்வதற்கு உங்களுடைய திட்டம்?

எங்களுடைய பணியை இத்தனை மணிக்கு முடித்துவிடுவோம் என்று சொல்ல முடியாது. என்னுடைய அணியில் பணியாற்றுபவருக்கு ஏதாவது ஒரு காரணத்தால் வர முடியாமல் போனால், அவருக்கு மாற்றாக திட்டம் வகுத்து அந்த வேலை பாதிக்காமல் நடத்தி முடிக்க வேண்டும். தயாரிப்பாளரிடம் சென்று எனது அணியில் உள்ளவருக்கு உடல்நிலை சரியில்லை, ஆகையால் தாமதமாகும் என்று சொல்ல முடியாது. என்னுடைய பணிக்கு நான் எனது பார்வையின் கீழ் நடக்கும் பணிகள் குறித்து முழுமையாக தெரிந்திருந்தால் மட்டுமே நிலைத்திருக்க முடியும். சொன்ன வாக்கையும், கொடுத்த நேரத்தையும் காப்பாற்ற வேண்டும். அது தான் என்னுடைய குறிக்கோள்.

பொதுவாகவே, படத்தின் இறுதி வேலைகள் நடக்கும் போது நேரம் பார்க்காமல், உறக்கமில்லாமல் இரவு பகலாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால், படம் திரைக்கு வந்து எங்களின் உழைப்பு பாராட்டப்படும் போது நாங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்து மறைந்துவிடும்.

நீங்கள் பணியாற்றிய படத்தின் இசை வெளியீடு, வெற்றி விழா உள்ளிட்ட விழாக்களில் உங்களை அழைக்கவே மாட்டார்கள். அதற்கான வருத்தம் இருக்கிறதா?

கண்டிப்பாக இல்லை. நான் எனக்காக பணியாற்றுகிறேன். இதில் பணியாற்றினால் பிரபலமாகிவிடலாம் என்றெல்லாம் நினைத்து நான் வரவில்லை. இன்று ஹாலிவுட் தரத்துக்கு "இது கிராபிக்ஸா" என்று சொல்லக் கூடிய அளவுக்கு துறை வளர்ந்திருக்கிறது. அந்த துறையில் நாங்களும் பணியாற்றுகிறோம் என்பதே பெருமை தான். முந்தைய படங்களுக்கும், தற்போதைய படங்களுக்கும் கிராபிக்ஸ் எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் படம் பார்க்கும் போதே தெரிந்துக் கொள்ளலாம். எங்களுடைய துறையில் பெயருக்காக யாரும் பணியாற்றுவதில்லை.

பணி தாமதமாகும் போது உங்களை தற்காத்துக் கொள்ள என்ன செய்வீர்கள்...

பெரும்பாலும் கால தாமதம் ஆனால் கணவருடன் சென்று விடுவது வழக்கம். மற்றபடி பெரிதாக எந்த தொந்தரவு இருந்ததில்லை.

சிங்கப்பூரில் பணியாற்றிவிட்டு, தமிழ்நாட்டுக் வரக் காரணம் என்ன?

சிங்கப்பூர் குடியுரிமை பெற்றிருந்தாலும், அங்கு 100 பேர் பணியாற்றும் இடத்தில் அதில் ஒருவராக பணியாற்றுவதற்கு பதிலாக, நம்ம ஊரில் வந்து சாதிக்கலாம் என்று நினைத்து வந்திருக்கிறோம். இங்கு பெயர் வாங்குவதை நான் பெரிய விஷயமாக கருதுகிறேன். இன்னும் கிராபிக்ஸ் துறையை ஹாலிவுட் தரத்துக்கு உயர்த்தியே ஆக வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. முன்பை விட கிராபிக்ஸைச் சார்ந்து வரும் படங்கள் மிக அதிகம். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x