Published : 19 Mar 2017 10:40 AM
Last Updated : 19 Mar 2017 10:40 AM

சென்னை மகளிர் திருவிழா: வலித்தால் சொல்லுங்கள்!

“பெண் சுதந்திரம், பெண் முன்னேற்றம் குறித்த கவனம் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் மட்டுமின்றி தி இந்து நாளிதழ் முழுவதிலும் உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் எங்கு நிகழ்ந்தாலும் அதைக் கடுமையாக எதிர்த்து எங்களுடைய எழுத்துகளைப் பதிவுசெய்கிறோம். ‘பெண் இன்று’ இணைப்பிதழில் மட்டுமல்லாமல் சினிமா செய்திகளைத் தாங்கிவரும் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில்கூடப் பெண்ணைக் கவர்ச்சிகரமான பண்டமாக ஒருபோதும் காட்டியதில்லை.

ஒரு பெண்ணைத் தரக்குறைவாகவோ, மோசமாகவோ சித்தரித்தால் அது எவ்வளவு நல்ல திரைப்படமாக இருந்தாலும் கண்டித்திருக்கிறோம். உங்களுடைய கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக இயங்கக் காத்திருக்கிறோம்” என்கிற வரவேற்புரையோடு சென்னையில் நடந்த பெண் இன்று மகளிர் திருவிழாவைத் தொடங்கிவைத்தார் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியர் அசோகன்.

பெண்ணியம் என்பது

இன்று கல்வித் துறை, காவல் துறை, சட்டத் துறை இப்படிப் பல்வேறு துறைகளில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து பணிபுரிகின்றனர். இதில் துறைசார்ந்த சவால்களை மட்டுமே ஆண்கள் எதிர்கொள்கிறார்கள். ஆனால், பணி தொடர்பான சிக்கல்கள் மட்டுமல்லாமல் பாலியல் பிரச்சினைகளையும் சேர்த்துப் பெண்கள் சந்திக்க வேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டித் தன்னுடைய அபாரமான உரை வீச்சைத் தொடங்கினார் பேராசிரியரும் பிரபலப் பேச்சாளருமான பர்வீன் சுல்தானா.

“வலி ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?” என்கிற கேள்வியை நிகழ்ச்சியில் பங்கேற்ற வாசகிகளிடம் எழுப்பினார். அதற்கு ‘அழுவேன்’, ‘பொறுத்துக்கொள்வேன்’, ‘கோபப்படுவேன்’ என்று பலவிதமான பதில்கள் வந்தன. “வலி வந்தால் முதலில் கத்துங்கள்; எனக்கு வலிக்கிறது என்று சொல்லுங்கள். எல்லாவற்றையும் தாங்கிக்கொள்பவளே, வலியை மறைத்துக்கொள்பவளே, பொறுமை காப்பவளே பெண் என்கிற பிம்பத்தை ஏற்கத் தேவையில்லை.

நமது வாழ்க்கையில் நமக்கு எதிராகப் பின்னப்படும் அரசியலைக் கூர்மையாகக் கவனித்துப் புரிந்துகொள்ளுங்கள்” என்றார். பெண்ணியம் என்பது ஆணுக்கு எதிரானதா என்கிற கேள்வியை எழுப்பியவர், “ஆண் சிந்தனையில் சிந்திக்கும் பெண்களும் பெண்களுக்கு எதிரிகள்தான். மறுபுறம் பெண் சிந்தனையில் செயல்படும் ஆண்கள் பெண்களுக்குத் தோழர்களே என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவதே பெண்ணியம்” என்றார்.

எது பாலியல் குற்றம்?

ஆண்மை, பெண்மை என்கிற பாலினப் பாகுபாட்டுக்கும் உடல்ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலின வித்தியாசத்துக்கும் என்ன வேறுபாடு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தைத் தன்னுடைய உரையின் மையமாக முன்வைத்தார் வழக்கறிஞர் அஜிதா.

“குடும்பம், காவல்துறை, நீதிமன்றம் போன்ற பல நிறுவனங்கள் நம்முடைய சமூகத்தில் உள்ளன. இவற்றில், வன்முறையாளனாக இருப்பதற்கான அங்கீகாரத்தை ஆணுக்கு நம்முடைய குடும்பங்களே வழங்குகின்றன. சிறு வயதிலிருந்தே அவர்களைச் சமையலறைக்குள் நம் வீடுகள் அனுமதிப்பதில்லை. தாயின், சகோதரியின் உடல் உபாதைகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதில்லை. இதனால் மூளை மழுங்கியவர்களாகவே அவர்கள் வளர்ந்துவருகிறார்கள். ஆண்களைச் சாதாரண மனிதர்களாக வளர்ப்போம். அவர்களுக்கும் சமையல் சொல்லித்தருவோம், நம்முடைய மாதவிடாய் சிக்கல்கள் குறித்து எளிமையாகச் சொல்லி புரியவைப்போம்” என்றார் அஜிதா.

தொடர்ந்து பெண்களின் உரிமைகளைத் தூக்கி நிறுத்தும் சட்டங்களையும் விளக்கினார். “எது பாலியல் குற்றம்?” என்கிற கேள்விக்கு, “தன் உடலை எப்படி மற்றவர்கள் பார்க்கலாம், அணுகலாம், தொடலாம் என்பதைப் பாதிக்கப்பட்ட பெண்ணே தீர்மானிக்கிறார். ஆக, பாதிக்கப்பட்ட பெண் எது தவறு என நினைக்கிறாரோ அதுவே குற்றம் என்கிற அளவுக்குச் சட்டம் இன்று வெகுவாக மாறியுள்ளது. வன்முறையற்ற வாழ்க்கை பெண்ணின் உரிமை. எனவே வீடு, சமூகம் இப்படி எல்லாத் தளங்களிலும் வன்முறையற்ற வாழ்க்கை பெண்களுக்கு வேண்டும் என்பதை உணர்ந்து உரக்கச் சொல்லுங்கள்; அதை நோக்கிச் செல்லுங்கள்” என்றார்.

ஆண் இன்று

ஞாயிற்றுக்கிழமையில் ஓர் அரங்கத்தில் இத்தனை பெண்கள் குழுமியிருப்பதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது என உற்சாகமாகவும் அனைவரையும் உற்சாகப்படுத்தும்விதமாகவும் பேசத் தொடங்கினார் தமிழகத்தின் முன்னாள் டிஜிபி திலகவதி.


முதல் பரிசு பெற்ற ரங்கோலி

“பெண்களுக்குக் கல்வி வேண்டும் என நெடுங்காலம் போராடியதன் விளைவாக இப்போது கல்வி பரவலாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பெண்களுக்குச் சொத்துரிமை கோரிப் போராடி, சட்டரீதியாகப் பெற்றிருக்கிறோம். ஆனால் கல்வியும் சட்டமும் மட்டும் பெண்ணுக்கு முழு சுதந்திரம் பெற்றுத்தந்துவிட்டதா என்றால் இல்லை. காரணம் படிப்பு தன்முனைப்பு தந்திருக்கிறதே தவிர சக மனிதனை மதிக்கக் கற்றுத் தரவில்லை” என்றார். தொடர்ந்து வித்தியாசமான கோரிக்கை ஒன்றை தி இந்துவுக்கு முன்வைத்தார்.

“உண்மையில் பெண்ணின் சிறப்பை, திறன்களைப் புரிந்துகொள்ள வேண்டியவர்கள் ஆண்களே. ஆகையால் ‘ஆண் இன்று’ என்கிற சிறப்பிதழைத் தொடங்கி அதன் வழியாக அடிப்படை வீட்டுப் பராமரிப்பு தொடங்கி பெண் உலகை ஆண்கள் புரிந்துகொள்வதற்கான தளத்தை உண்டாக்குங்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x