Last Updated : 08 Feb, 2014 12:35 PM

 

Published : 08 Feb 2014 12:35 PM
Last Updated : 08 Feb 2014 12:35 PM

சுதேசி பானத்தின் தொடரும் வெற்றி

வெளிநாட்டுக் குளிர்பானங்கள் இந்தியாவிற்குள் நுழைந்து அசுர வளர்ச்சி கண்ட பின்னும் அந்த வியாபாரச் சந்தையில் அடித்துச் செல்லப்படாமல் இன்றும் நிலையான வியாபாரத்தைக் கொண்டுள்ளது காளிமார்க் குளிர்பான நிறுவனம். காளிமார்க் இயக்குநர்களில் ஒருவரான தனுஷ்கோடி, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்...

உங்கள் நிறுவனத்தின் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

எங்கள் கொள்ளுத் தாத்தா காளியப்ப நாடாரே இதன் நிறுவனர். அவரின் வெள்ளைக்கார நண்பர் மூலமாகத்தான் வெள்ளைக்காரர்களுக்குச் சோடா தேவை என்று அறிந்தார். அவர்களிடமே இத்தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொண்டார். இந்த நேரத்தில் சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலொன்றில் சோடா பாட்டில்கள் வந்து எடுப்பதற்கு ஆளில்லாமல் கிடந்தது தெரிய வந்தது.

உடனே அவை அனைத்தையும் எங்கள் தாத்தா வாங்கிவிட்டார். பாட்டிலில் கோலி அடைக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டு, ஆரம்ப காலத்தில் இதே பாட்டில்களைச் சுழற்சி முறையில் பயன்படுத்தி வந்தார்கள். பின்னர் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்ததால் லண்டனில் இருந்து பாட்டில்கள் எளிதாகத் தருவிக்கப்பட்டன. 1948இல் இதன் முத்திரையையும் சேர்த்து காளி மார்க் நிறுவனத்தின் பெயர் பதிவுசெய்யப்பட்டது.

அடுத்த தலைமுறை இந்தத் தொழிலை எப்படி எடுத்துச் சென்றார்கள்?

அடுத்த தலைமுறையைச் சேர்ந்த என் அப்பா, சித்தப்பா என்று எல்லோருமாகச் சேர்ந்து இதே தொழிலில் ஈடுபட்டார்கள். நிறுவனத்தின் கிளை திருநெல்வேலியில் தொடங்கப்பட்டு திருநெல்வேலிக்கும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கும் காளிமார்க் கோலி சோடா சப்ளை செய்யப்பட்டது. பிறகு மதுரை, திருச்சி, கும்பகோணம், சென்னை, சேலம் என்று தமிழகம் முழுவதும் எட்டு இடங்களில் காளிமார்க் கிளை பரப்பிக் கொண்டது.

இப்போது நாங்கள் நான்காவது தலைமுறையினர், மொத்தம் எட்டு டைரக்டர்கள் சேர்ந்து இதனை நிர்வகித்து வருகிறோம். தமிழகத்தில் மட்டுமே தற்போது விற்பனையில் உள்ளது.

வெளிநாட்டு குளிர்பானங்கள் அசுர வளர்ச்சியுடன் எப்படிப் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?

வெளிநாட்டுக் குளிர்பானங்கள் இந்தியாவுக்குள்ள வந்தபோது, அந்தந்த மாநிலங்களில் இருந்த கூல் டிரிங் நிறுவனங்களை, ஃபார்முலா காப்பி ரைட்டோடு வாங்கிவிட்டார்கள். முக்கியம்மாக அதிகம் விற்பனையாகிக் கொண்டிருந்த பல நிறுவனங்கள், பின்னர் அவற்றின் உற்பத்தியை நிறுத்திவிட்டு, வெளிநாட்டுக் குளிர்பானங்களையே சந்தைக்குள் குவித்தார்கள்.

இந்த நேரத்தில் எங்கள் நிறுவனத்தை வாங்க முற்படவில்லை. ஏனெனில் அப்போது நாங்கள் சென்னையைக்கூட எட்டி இருக்கவில்லை. எங்கள் நிறுவனத்தால் பெரிய பாதிப்பு வராது என்று நினைத்தார்களோ என்னவோ, காளிமார்க் நிறுவனத்தை வாங்க முற்படவில்லை.

ஆனால் பிரச்சினை வேறு ரூபத்தில் வந்தது. உதாரணத்திற்கு எங்கள் கூல் டிரிங்ஸ் பத்து பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்த இடத்தில், ஆறு பாட்டில்கள் மட்டுமே விற்றன. இந்த விற்பனை சரிவால், உற்பத்தி தேங்கத் தொடங்கியது.

இதற்குக் காரணம் வெளிநாட்டுக் குளிர்பான நிறுவனங்கள் கடைக்காரர்களுக்குக் கொடுத்த அதிகபட்ச கமிஷன்தான். எம்ஆர்பி விலை அவர்களும் ரூ. 6 என்று குறிப்பிட்டிருந்தார்கள். நாங்களும் ரூ.6 என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால் கடைக்கு நாங்கள் ரூ. 5-க்கும், அவர்கள் ரூ.3க்கும் கொடுத்தார்கள். கடைக்காரர்களைப் பொறுத்தவரை ஒரு பாட்டில் விற்றால் மூன்று பங்கு லாபம் என்றால் அதைத் தானே விற்பார்கள்.

தனக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, காளிமார்க்கை ஒழித்துவிட்டால் பின்னர் சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற வியாபாரத் தந்திரத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. இதைப் பற்றி ஒவ்வொரு கடையாகச் சென்று கடைக்காரர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொன்னோம். கடைக்காரர்களும் ஒத்துழைப்பு தந்ததால்தான் இன்று இன்னும் சந்தையில் இருக்கிறோம்.

இந்நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை தற்போது பெட் பாட்டில்களிலும் தங்கள் காளிமார்க் முத்திரையை கெளரவமாகப் பதித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x