Last Updated : 16 Apr, 2017 01:14 PM

 

Published : 16 Apr 2017 01:14 PM
Last Updated : 16 Apr 2017 01:14 PM

சட்டமே துணை: சட்டமே சமூக மாற்றத்துக்கான கருவி

சட்டம் என்பது சமூகத்தில் மாற்றம் உண்டாக்குவதற்கான கருவி என்றார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர். இந்தியாவில் மக்கள் பிரதிநிதியாகச் சட்டமன்றத்திலும் அமைச்சராக அதிகாரவர்க்கத்தின் தலைமையிலும் நீதித்துறையின் தலைமை மன்றமான உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்த ஒரே மனிதர். அவரது அளப்பரிய மக்கள் பணியின் அனுபவங்களின் அடிப்படையில், ‘சட்டம் சமூகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முக்கியமான காரணி’ என்றார்.

சட்டங்கள் உருவாக அடிப்படைக் காரணிகளாகத் தொடர்ந்துவந்த சமூக ஏற்றத்தாழ்வுகளும் அதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் இருந்தார்கள். பல தருணங்களில் குறிப்பிட்ட தலைவர்கள், அவர்களின் தொலைநோக்கு, சமூக நீதிக்காக அவர்களின் தீர்க்கமான போராட்டங்கள் புதிய சட்டங்களை உருவாக்கவும் காரணமாக இருந்தன.

ஒவ்வோர் ஆண்டும் பத்தாயிரம் பெண்கள் தத்தமது கணவரின் சிதைகளில் உயிருடன் எரிக்கப்பட்டபோது அதை எதிர்த்து, சதி ஒழிப்புச் சட்டம் ராஜாராம் மோகன் ராயின் முயற்சியால் இயற்றப்பட்டது. சட்டம், சதியை ஒழித்தாலும் நடைமுறைகள் என்னவோ, சட்டத்துக்குப் புறம்பான விஷயத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்தன. எனவே, 1987-ல் சதி மாதாவைக் கும்பிடுவது, சதியைப் போற்றுவது போன்ற எல்லாச் செயல்களும் தண்டனைக்குரியவை என்று சட்ட திருத்தம் செய்யப்பட்டது.

போராடிப் பெற்ற நீதி

திருமண பந்தத்திலிருந்து வெளியே வந்து, கணவனை விவாகரத்து செய்யும் சம வாய்ப்பு 20 ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகே பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் 1955-ல் சட்டத்தின் வாயிலாகத் தரப்பட்டது. வரதட்சணைக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக 1961-ல் வரதட்சணைத் தடைச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சட்டங்கள் இயற்றப்படுவதற்கும் பெண்களின் வாழ்வில் ஓரளவு நீதியைப் பெறுவதற்கும் நாடெங்கும் திரளான மக்களும் பெண்ணுரிமை இயக்கங்களும் சமூகச் சீர்திருத்தவாதிகளும் போராடினர்.

பொதுவாக எல்லோரையும் மிகக் கடுமையாகப் பாதிக்கும் அவலங்களைத் தடுத்துச் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அன்றாட வாழ்வில் பெண்களின் மீதான பாகுபாடுகள், குடும்பங்களிலும் பொதுவிலும் மிக அதிகமாகத் தொடர்ந்தன. ஆனால், அந்தப் பாகுபாடுகள் கலாச்சாரம், பண்பாடு, தொன்மை போன்ற காரணங்களுக்காகத் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும் என்று அதிகாரத்திலிருப்போர் கருதியதால், பல சட்டங்கள் நடைமுறையில் அமலுக்கு வரவில்லை என்பது ஓரளவு உண்மைதான்.

25-30 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படங்களில் அன்றைய நடை முறையான பெண் பார்க்கும் படலத்தில் வரதட்சணையைத் தயங்காமல் கேட்டார்கள். வரதட்சணை கேட்பதும் அதைத் தொடர்ந்து கொடுமைகள் செய்வதும் கைது செய்யப்படக்கூடிய கடும் குற்றம் என்ற பிரிவு 498 ஏ இந்திய தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட பின்னர்தான் வரதட்சணையை நேரடியாகக் கேட்க அச்சம் ஏற்ப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஸ்டவ் வெடித்து ஆயிரக்கணக்கான பெண்கள் மரணம் அடைந்தபோது, 1980களில் அதிகரித்த பெண்கள் இயக்கப் போராட்டங்களின் விளைவால் பிரிவு 304 பி என்ற ‘வரதட்சணை மரணம்’என்ற பிரிவு இந்திய தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சொற்ப சதவீதக் குற்றவாளிகள் தண்டனை பெற்றனர். எனினும், இதுவே வரதட்சணை கேட்பதற்கான எண்ணத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

1994-ம் ஆண்டு கருத்தெரிவு தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று கூறி, பெண் கருக் கொலைக்கு உதவும் மையங்கள் மீதும் மருத்துவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கச் சட்டம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியா முழுவதும் சில நூறு மருத்துவமனைகளும் ஸ்கேன் மையங்களும் சட்டப்படி கையாளப்பட்டு, மூடப்பட்டுள்ளன.

பெண் குழந்தைகளுக்கு அரசின் நிரந்தர வைப்பு நிதித் திட்டம், திருமண உதவித் திட்டம், பெண் தொழில் முனைவோர் கடன் வசதி என்று பல்வேறு நிதி ஆதாரங்கள் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் ஏற்படுத்தப்பட்டன. எவ்வளவுதான் பொது வெளியில் சீர்திருத்தங்கள் செய்வதற்கான சட்டங்களை இயற்றிய போதும், பெண்கள் அரசியல் அதிகாரத்தில் பங்குபெறும்போதுதான் சட்ட மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். அரசியல் சாசனம் சீர்திருத்தப்பட்டுப் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீடு செய்யும் சட்டம் உருவானது. ஆரம்பத்தில் பெண்கள் யாரும் அதிகாரத்தில் இல்லை எனவும் அவர்களுடைய கணவன், தந்தை, சகோதரனே பின்னணியில் இருந்து ஆட்சி செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் தற்போது நிலைமை மாறிவருவதையும் பார்க்க முடிகிறது.

வாழ்க்கை வேண்டும் வன்முறை வேண்டாம்

பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பல வரைவுகள் முன்மொழியப்பட்டு, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-ல் நிறைவேற்றப்பட்டு, 2006 முதல் விதிகளும் அறிவிக்கப்பட்டு, குடும்பத்துக்குள் நிகழும் வன்முறைகளுக்கு நிவாரணங்களும் வழங்கப்படுகின்றன. ‘வாழ்க்கை வேண்டும் வன்முறை வேண்டாம்’ என்ற பெண்ணின் குரல்தான் இந்தச் சட்டம். திருமணமான பெண்ணுக்குக் கொடுமைகளோ வன்முறையோ நிகழ்த்தப்பட்டால் கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது.

கிரிமினல் சட்ட நடவடிக்கை எடுத்தால் குடும்ப வாழ்க்கையை இழப்பதற்கான நிலைமைகள் பெண்களை அச்சுறுத்தின. எனவே, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைக் காக்கும் சட்டம் சிவில் சட்டமாக, கிரிமினல் சட்ட நடைமுறையோடு அதாவது ஜீவனாம்ச சட்டத்தைப் போலவே, பெண்ணுக்கான அடிப்படை உரிமையைப் பிறந்த, மணந்த குடும்பங்களுக்குள் பாதுகாக்கும் சட்டமாக நடைமுறையில் உள்ளது.

இறுதியாக இஸ்லாமிய, கிறித்தவ பெண்களுக்கான திருமணச் சட்டங்களில் உள்ள வேறுபடான விஷயங்களைப் பார்த்தோம். அவற்றில் சொல்லப்பட்ட தனித்துவமான சில விஷயங்களைத் தவிர, பிற அரசியல் சாசன மற்றும் கிரிமினல் சட்டங்களின் கீழான பாதுகாப்புகள் அனைத்தும் எல்லா இந்தியப் பெண்களுக்கும் சமமானவையே. விவாகரத்தான இஸ்லாமியப் பெண்களுக்கு, பிரிவு 125 சிஆர்.பி.சி. படியான ஜீவனாம்ச உரிமை இல்லை. ஷாபானு வழக்கில் உச்ச நீதிமன்றம் 1985-ல் ஜீவனாம்ச உரிமை எல்லா மதத்தினருக்கும் உரியது என்று தீர்ப்பு கூறிய பிறகுதான் 1986-ல் ராஜீவ்காந்தி தலைமையிலான மத்திய அரசு, இஸ்லாமியப் பெண்களின் விவாகரத்து உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் வாயிலாக, பிரிவு 125 சிஆர்.பி.சி.-ன் படியான உரிமை விவாகரத்து அளிக்கப்பட்ட பெண்களுக்கு இல்லை என்று அறிவித்தது.

மேலும், விவாகரத்து ஆகாத ஆனால் கணவனால் கைவிடப்பட்ட அனைத்து இஸ்லாமியப் பெண்களுக்கும் அந்த உரிமை உண்டென்றாலும் ஜீவானாம்ச வழக்கு போட்டவுடன் ‘தலாக்’ சொல்லும் நடைமுறையும் இருந்தே வந்துள்ளது. எனவே, அதன் பிறகு அந்த ஜீவனாம்ச வழக்குகள் பிரிவு 125 சிஆர்.பி.சி. படி நடத்த முடியாமல் ஆக்கப்படுவதும் நடைமுறையில் உள்ளது.

குடும்பங்களைத் தாண்டி, பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கவும் தடுக்கவும் குறை தீர்க்கவும் சட்டம் 2013-ல் இயற்றப்பட்டது. மேற்கண்ட சட்டங்களை நடைமுறைப்படுத்தி உரிமைகளைக் கோரும் போது, அவை காகிதப் புலிகளாக இருப்பதாகப் பல அனுபவங்கள் இருப்பினும், ஆணாதிக்க மனப்பான்மையை எதிர்கொள்ளவும் வன்முறைகளைக் களைந்துவிட்டு விலகி, உரிமைகளைப் பெறவும், வன்முறை வாழ்க்கையிலிருந்து மீண்டு சுதந்திரமாக வாழவும் சட்டமும் நீதிமன்றமும் அருமருந்தாக இருப்பதையும் காண முடிகிறது. இந்தச் சமுதாயத்தின் அவலங்களையும் பாகுபாடுகளையும் களைய, சீர்திருத்தம் ஏற்படத் தனிப்பட்ட பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணச் சட்டங்கள் வாய்ப்பு தருகின்றன. அந்தத் தீர்வுகளைப் பெறுவது பெரும் போராட்டம்தான்.

புண் இல்லாத போராட்டம் இல்லை, போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை. வாழ்க்கை என்பதே உரிமைகளோடு கண்ணியமாக வாழ்வதுதானே! அந்த வாழ்வுரிமைக்கு இணை ஏதும் இல்லை. சட்டத்தின் மூலமாக அந்த இணையற்ற வாழ்வுரிமையைப் பெறப் பெண்கள் தயாராகிவிட்டோம் என்பதை இந்த உலகம் அறியட்டும்!

(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x