Last Updated : 26 Aug, 2016 12:26 PM

 

Published : 26 Aug 2016 12:26 PM
Last Updated : 26 Aug 2016 12:26 PM

திரைப் பார்வை: பின்னயும்- காலத்தின் நரையேறிய சினிமா

மலையாளத்தின் புகழ்பெற்ற சினிமா ஆளுமையான அடூர் கோபாலகிருஷ்ணனின் புதிய படம், மலையாளத்தின் சூப்பர் ஸ்டார்களான திலீப்பும் காவ்யாவும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜோடி சேர்ந்துள்ள படம் எனப் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகியிருக்கிறது ‘பின்னயும்’.

லாட்ஜ் அறையில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். போலீஸார் பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்குகிறார்கள். இதுதான் படத்தின் முதல் காட்சி. படம் ஒரு புலனாய்வுத் திரைக்கதையில் பயணிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. ஆனால் படம் அந்த விசாரணையை அங்கேயே விட்டுவிட்டுப் பதினேழு வருடங்களுக்கு முன்பு செல்கிறது.

அங்கு காக்கை கரையும் சத்தத்துடனான அடூரின் பிரத்யேகமான அன்றாடம் விரிகிறது. காதல் திருமணம் செய்துகொள்ளும் தேவி-புருஷோத்தமன் இருவரும்தான் ‘பின்னயும்’ படத்தின் நாயகர்கள். காதல் கைகூடியதுடன் சுபமடையும் படங்களின் பின் பகுதி என்னவாகும் என்பதன் தொடர்ச்சி என்றும் இதைச் சொல்லலாம். காதல் திருமணம் செய்துகொண்டு மனைவியின் தரவாட்டில் வாழும் புருஷோத்தமன், வேலையும் கூலியும் இல்லாமல் இருக்கிறான். இந்தத் தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கிறாள். இவர்களுடன் தேவியின் தந்தையும் அவளுடைய சீக்காளி சகோதரனும் அதே வீட்டில் வசித்துவருகிறார்கள்.

கடிதங்களால் தன் காதலை வரைந்து தேவியின் மனத்தை வசம்கொள்ளும் புருஷோத்தமனால் வாக்குறுதி அளித்தபடி சவுகரியமான லெளகீக வாழ்வைத் தேவிக்குத் தர முடியவில்லை. பேர்பெற்ற தரவாட்டின் ஒரே பெண்ணான தேவி, தன் வீட்டாரின் வற்புறுத்தல்களை மீறி புருஷேத்தமனைக் கரம் பிடித்தது தவறோ என எண்ணும் நிலைக்கு வருகிறாள். அவளது இந்த எண்ணம் அவன் மீதான வெறுப்பாக வெளிப்படுகிறது. புருஷோத்தமனுக்குப் பதில் அவள் வேலைக்குச் செல்கிறாள். அவளது வருவாயும் அவளுடைய தந்தையின் ஓய்வூதியமும்தான் அந்தக் குடும்பத்தின் ஜீவிதப் பாட்டைத் தீர்க்கின்றன. அந்தப் பேர்பெற்ற தரவாட்டின் மானம் காக்க வேண்டியாவது புருஷோத்தமன் வேலைக்குச் செல்ல வேண்டும். ஆனால் அவன் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறான். இதனால் அவனது இருப்பின் ஆதாரமான தேவியின் பிரியத்தையும் இழக்க நேரிடுகிறது.

திலீப், காவ்யா மாதவன், நெடுமுடி வேணு, இந்திரன்ஸ், விஜயராகவன் ஆகியோரின் பங்களிப்புகள் இந்தப் பின்னணியை ஜீவனுள்ள காட்சிகளாக்கியுள்ளன. இதை உருவாக்குவதில் அடூர் மாஸ்டர். அதை நிரூபித்தும் உள்ளார். 23 நாட்களில் குறைந்த முதலீட்டில் திட்டமிட்டபடி படத்தை உருவாக்கியிருக்கிறார்.

ஆனால் முதல் பாதிக்குப் பிறகு படத்தின் காட்சிகளுக்கு இறக்கை முளைக்க, வவ்வால்கள் போல் அவை தலைகீழாகப் பறக்கின்றன. முதல் பாதியில் சாதுவாக வந்த கதை மாந்தர்களுக்கு வேட்டை மிருகங்களின் கோரப் பற்கள் முளைக்கின்றன. ஒரு இரவு உணவுக்குப் பிறகான கதையாடல் போல் ஒரு கொலைக்குத் திட்டமிடுகிறார்கள். இதற்கான காரணங்களைப் புருஷோத்தமன் கதாபாத்திரம் மூலம் இயக்குநர் சொல்ல விழைகிறார். ஆனால் அது யதார்த்தமாக வெளிப்படவில்லை. புருஷோத்தமன் வெளிநாட்டு வேலை கிடைத்துப் போன பிறகு காட்சிகள் துரித கதியில் வேகம் எடுக்கின்றன. ஆனால் இயல்பாக இல்லை. 17 வருஷங்களாக மாயமாகிவிட்ட புருஷோத்தமனைக் குறித்து அவரது குடும்பத்தாரைப் போலப் பார்வையாளர்களுக்கும் சிரத்தை இல்லாமல் போகிறது.

படத்தின் பின் பாதியைவிட முன்பாதி மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒட்டவே முடியாத இரு வேறு துண்டுக் கதைகளாகப் படத்தின் இரு பகுதிகளும் ஒன்றையொன்று விலக்குகின்றன. பின்பகுதிக் கதை, உண்மையில் நடந்த ஒரு சம்பவம் எனச் சொல்லப்படுகிறது. கதையின் மையமான அதற்கு நியாயம் செய்யத்தான் சினிமாவும் முயல்கிறது. அதற்கான சூழல் விவரிப்பாகத்தான் அடூர் முன்பாதிக் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார். நவீன உலகின் தேவைகளுக்கான குற்றம் ஒன்றைச் செய்யவைக்க, அவர் இருபது வருடங்களுக்கு முன்னரான அவரது படங்களின் கதாபாத்திரங்களைத் தேடிப் போயிருக்கிறார் எனத் தோன்றுகிறது.

புருஷோத்தமனுக்கு வேலையும் கிடைத்துவிடுகிறது. தேவியின் பிரியமும் திரும்புகிறது. கதை இப்படிப் போகும்போது பாவ, புண்ணியங்களுக்கு அஞ்சும் எளிய நடுத்தர வர்க்கத்து ஆட்கள் இந்தக் குற்றத்துக்குத் துணிவதற்கான காரணம் தெளிவாகச் சொல்லப்படவில்லை.

கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தம்கோட்டா என்னும் கிராமத்திலுள்ள வீட்டில்தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. சில காட்சிகள் மட்டுமே வெளியே படமாக்கப்பட்டுள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம், இன்ஷ்யூரன்ஸ் மோசடி, நுகர்வுக் கலாச்சாரம் எனப் பல சமூக நிகழ்வுகளைப் படத்தின் கதாபத்திரங்கள் வசனங்களாகப் பேசுகின்றன. ஆனால் அந்தச் சமூக மாற்றம் படத்தில் பதிவுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தக் கதை 17 ஆண்டுகளுக்கு முன் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கதாநாயகன் பட்டம் பெறுகிறான். ஆனால் இந்தக் காலகட்டத்தில் உலகமயமாக்கல் வந்துவிட்டது. அப்போது வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு பெரும் சமூக நிகழ்வாக இல்லை. தனிப்பட்ட ஆளுமை சார்ந்துதான் இருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் அந்தக் காலகட்டத்தில் செல்போன், சாட்டிலைட் சானல்கள் அறிமுகமாகிவிட்டன. இவையெல்லாம் நம் அன்றாடங்களில் பெரும் பாதிப்பை விளைவித்த சமூக நிகழ்வுகள். ஆனால் படத்தில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டிகூட இல்லை. குழந்தையின் விளையாட்டுப் பொருள்கள்கூட 80களில் வழக்கில் இருந்த கீ கொடுக்கும் பொம்மைகள். இந்தப் பொம்மைகள் 2000-ல் துபாயில் வாங்கப்பட்டவையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.

நுகர்வுக் கலாச்சாரத்தால் உண்டாகும் பணத்தாசையையும் அதனால் பெருகும் குற்றங்களையும் சித்தரிப்பதுதான் படத்தின் நோக்கம் எனலாம். ஆனால் இதைச் சொல்ல வேண்டும் என்ற தீர்க்கம் இருந்த அளவு அதைச் சொல்வதற்கான திட்டமான திரைமொழி படத்தில் வெளிப்படவில்லை. உலக அளவில் மிகச் சிறந்த படங்களுள் ஒன்று ‘எலிப்பத்தாயம்’. அதுபோன்ற படத்தை அடூரால்கூட இனி உருவாக்க முடியாது எனச் சொல்லப்படுவதுண்டு. ‘பின்னயும்’ அதை உறுதிப்படுத்தியுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x