Last Updated : 19 Nov, 2014 12:39 PM

 

Published : 19 Nov 2014 12:39 PM
Last Updated : 19 Nov 2014 12:39 PM

வியர்த்துக் கொட்டினால் மழை பெய்யுமா?

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் ஜாலியாக இருக்கலாம் என்ற நினைத்திருந்த கவின், ஜாலியாக இருக்க முடியாமல் தவித்தான். வீட்டில் கரண்ட் கட் ஆகி விட்டது. மின்வசிறி இயங்கவில்லை. வீட்டினுள் ஒரே புழுக்கமாக இருந்தது. வியர்வை அதிகமாக இருந்ததால் கவினுக்கு அவஸ்தையாக இருந்தது.

வீட்டுக்கு வெளியே வந்து வாசலில் உட்கார்ந்தால் அங்கேயும் ஒரே புழுக்கம். வீட்டினுள் புழுக்கம் தாங்காமல் ரஞ்சனியும் வாசல் பகுதிக்கு வந்தாள்.

“அம்மா! எங்கேயும் உட்கார முடியலம்மா. ஒரே புழுக்கமா இருக்கு” என்று கத்தினான் கவின்.

பக்கத்து வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த பாக்கியம் பாட்டி, “டேய் பையா! மழை வரப் போவுது. அதான் ஒரே புழுக்கமா இருக்குப்பா” என்று குரல் கொடுத்தார்.

“மழை பெய்ய வாய்ப்பிருக்குன்னு வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் அங்கிள் டி.வி.யில அடிக்கடி வந்து தகவல் சொல்லுவார். இங்கே நம்ம பாக்கியம் பாட்டிகூட மழை வரும்னு எச்சரிக்கை செய்தி சொல்றாங்களே. பாட்டி எப்போ வானிலை அறிவியல் படிப்பெல்லாம் படிச்சாங்கன்னு தெரியல!” என்று கவின் கிண்டலாகக் கூறினான்.

அவன் கூறியதைக் கேட்டு ரஞ்சனியும் சத்தமாகச் சிரித்தாள்.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு பாக்கியம் பாட்டி சொன்னதைப் போலவே மழை கொட்டித் தீர்த்தது. கவினுக்கும், ரஞ்சனிக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை. பாக்கியம் பாட்டி எப்படி அவ்வளவு சரியாகச் சொன்னார் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது பற்றி கவினும், ரஞ்சனியும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

அப்போது நிலா டீச்சர் அவர்களுடைய பேச்சில் கலந்துகொண்டார்.

“மழை வரப் போகுதுன்னு பாக்கியம் பாட்டி சொன்னதையும், அதைக் கேட்டு நீங்க ரெண்டு பேரும் கிண்டலாகப் பேசி சிரிச்சதையும் நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்” என்றார் நிலா டீச்சர்.

“சாரிம்மா!. பாட்டி ஏதோ சும்மா சொல்றாங்கன்னு நினைச்சேன். அது எப்படிம்மா இவ்வளவு சரியா சொன்னாங்க?” என்று கேட்டான் கவின்.

“பாட்டி சொன்னப்போ புழுக்கம் அதிகமா இருந்துச்சு. அதேநேரத்துல நல்ல வெயில் அடிச்சுகிட்டு இருந்துச்சு. அந்த நேரத்துல மழை வரும்னு பாட்டி சொன்னத எங்களால நம்பவே முடியலம்மா” என்றாள் ரஞ்சனி.

“பாட்டி ஸ்கூலுக்கெல்லாம் போய்கூட படிச்சதில்லையே. அப்புறம் எப்படிம்மா இவ்வளவு கரெக்டா சொன்னாங்க” என்று மீண்டும் கேட்டான் கவின்.

“வழக்கத்துக்கு மாறாக புழுக்கம் ரொம்ப அதிகமா இருந்தா மழை பெய்யலாங்கிறதை, தன்னோட பல ஆண்டு கால அனுபவத்தின் மூலம் பாட்டி சொல்லியிருக்கிறார்” என்றார் நிலா டீச்சர்.

“புழுக்கம் அதிகமா இருந்தா மழை பெய்யுமா? அது எப்படிம்மா?” என்றாள் ரஞ்சனி.

நிலா டீச்சர் அவர்களுக்கு விளக்கத் தொடங்கினார்.

“நாம சாப்பிடற சாப்பாட்டுல உள்ள சத்துப் பொருள்கள் உடம்புக்குள்ளே எரிக்கப்பட்டு ஆற்றலா மாற்றப்படுது. இது தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கும். அப்போது உடலின் ஏற்படும் கழிவுப் பொருள்களோட ஒரு பகுதி வியர்வையா வெளியேற்றப்படுது.

தோலின் வழியே வெளியேற்றப்படும் வியர்வை நீராவியா மாறுது. நம்மை சுற்றியுள்ள காற்றுல நீராவி மூலக்கூறுகளின் அளவு (இதை ஈரப்பதம் என்று கணக்கிடுகிறார்கள்) குறைவா இருக்கும்போது, வியர்வை நீராவியாக மாறுவது வேகமாக நடக்கும்.

மிக அதிகமான அளவுல நீராவி மூலக்கூறுகள் காற்றுல கலந்திருந்தா, வியர்வை நீராவியா மாறுவது மெதுவாக நடக்கும். அந்த நேரத்தில்தான் நம் தோல் பகுதிகளில் வியர்வையின் பிசுபிசுப்பு அதிகமாகி புழுக்கமான சூழல் ஏற்படுது.

காற்றில் கலந்திருக்கும் நீராவி மூலக்கூறுகள்தான் சுருக்கமடைந்து மழைத் துளியாக மாறுது. நீராவி மூலக்கூறுகளின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிச்சுகிட்டே போய், ஒரு பூரித அளவை (Saturated Level) அடையும்போது நீராவி மூலக்கூறுகள் சுருங்கி மழைத் துளியாக மாறும் நிகழ்வு நடைபெறும்.

இன்னிக்கு முதல்ல நமக்கு ஒரே புழுக்கமா இருந்துச்சு. அப்போ, நம்மை சுற்றியுள்ள காற்றுல நீராவி மூலக்கூறுகள் அதிகமா இருந்ததால, வியர்வை நீராவியாக மாறும் வேகம் குறைஞ்சு போய் பிசுபிசுப்பு ஏற்பட்டது.

நம்ம உடம்புல தெரியற இந்த உணர்வு, இன்னும் கொஞ்ச நேரத்துல காற்றுல நீராவி மூலக்கூறுகளின் அளவு பூரித நிலையை எட்டி மழைத்துளியாக மாறப் போறதுக்கான அறிகுறி. அதனாலதான் சீக்கிரம் மழை பெய்யப் போகுதுன்னு பாக்கியம் பாட்டி சொன்னாங்க” என்றார் நிலா டீச்சர்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல மழை பெய்யலாங்கிறதை அன்றாட வாழ்க்கையோட அனுபவத்திலேர்ந்து இப்படியெல்லாம் தெரிஞ்சுக்கலாங்கிறதை நினைக்கும்போது ரொம்ப ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்மா” என்றாள் ரஞ்சனி.

“இன்னிக்கு வானிலை முன்னறிவிப்பு சொல்ற மாதிரி நம்ம முன்னோர் காலத்துலயெல்லாம் யாரும் சொல்ல மாட்டாங்க. இதுபோன்ற அனுபவம் மூலமாத்தான் மழை பெய்யலாங்கிறதை மக்கள் முன்னரே கணிச்சி, அதுக்கேற்ப தங்கள் வாழ்க்கைய அமைச்சிக்கிட்டாங்க” என்றார் நிலா டீச்சர்.

நிலா டீச்சர் இவ்வாறு சொல்லி முடிக்கவும், வெளியே மழையும் குறைந்து சொட்டுச் சொட்டாக நின்று போனது. இப்போது வீட்டினுள் புழுக்கம் இல்லை. மாறாக குளிர்ச்சியாக, இதமான சூழல் நிலவியது. மழை குறித்த அறிவியல் உண்மைகளை தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் கவினும், ரஞ்சனியும் உற்சாகத்தில் திளைத்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x