Last Updated : 09 Sep, 2016 10:54 AM

 

Published : 09 Sep 2016 10:54 AM
Last Updated : 09 Sep 2016 10:54 AM

கோலிவுட் கிச்சடி: இயக்குநரின் நம்பிக்கை

‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அபிநயா கிட்டத்திட்ட எல்லாத் தென்னிந்திய மொழிகளிலும் நடித்துவருகிறார். தற்போது கதையின் மையப் பாத்திரத்தில் இவர் நடித்து முடித்திருக்கும் படம் ‘நிசப்தம்’. பெங்களூரூவில் வாழும் ஓர் தமிழ்க் குடும்பத்தைச் சுற்றி நிகழும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை. மனித நேயம், மனித மனங்களுக்குத் தேவைப்படும் மாற்றம் ஆகிய இரண்டு கருத்துக்களைக் கதைக்கருவாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மூலம் அஜய் நாயகனாக அறிமுகமாகிறார்.

இவரைத் தவிர பேபி சைதன்யா, கிஷோர், இயக்குநர் ஏ.வெங்கடேஷ் எனப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் மைக்கேல் அருண். மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியிருக்க, மைக்கேல் அருண் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘மண்மீது பெண்ணாய் வந்தாய் கண்ணே’ என்ற பாடல் மூலம் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு மீண்டும் ஒருமுறை தேசிய விருது பெறும் பாடலாக அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர்.



தெலுங்கில் மியா

‘அமரகாவியம்’ படத்தில் அறிமுகமாகி `வெற்றிவேல்’, ‘ஒருநாள் கூத்து’ படங்களின் மூலம் கவர்ந்தார் கேரளத்தின் மியா ஜார்ஜ். தற்போது தனது நடிப்பின் எல்லையை தெலுங்குத் திரையுலம் வரை விஸ்தாரமாக்கியிருக்கிறார். கிராந்தி மாதவ் இயக்கும் அந்தப் படத்தில் நடிகர் சுனிலுக்கு ஜோடியாக மியா நடிக்கிறார்.



விண்வெளி வீரர்

‘மிருதன்’ பட இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனும், ஜெயம் ரவியும் மீண்டும் இணையும் படம் ஒரு விண்வெளிக் கதையாக உருவாக இருக்கிறது. இதில் வேற்றுக்கிரகத்தில் மாட்டிக்கொண்டு பூமிக்குத் திரும்பமுடியாமல் போராடும் விண்வெளி வீரராக நடிக்கிறாராம் ஜெயம் ரவி. பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘டிக் டிக் டிக்’ படத்தின் தலைப்பை இந்தப் படத்துக்குச் சூட்டியிருக்கிறார்கள்.



காலரை உயர்த்தும் ரசிகர்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒருவர் ஸ்ரேயா சரண். மற்றொரு கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் தமன்னா. சிம்புவுடன் நடிக்க தமன்னா தொடர்ந்து மறுத்துவந்தார் என்று கூறப்பட்டுவந்த நிலையில் படக்குழு வட்டாரம் கசிய விட்டிருக்கும் இந்தச் செய்தியால் சிம்பு ரசிகர்கள் காலரை உயர்த்திக்கொள்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்.



இயக்குநர் அவதாரம்

அப்பா, அண்ணன், அண்ணி, மனைவி, மைத்துனி என தனுஷ் குடும்பத்தில் ஐந்து சினிமா இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால் நடிகராகத் திரையில் நுழைந்து தேசிய விருதுவரை முன்னேறிய தனுஷ், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என அசத்திவருகிறார். இன்னொருபக்கம் இயக்குநர் வெற்றி மாறனின் நெருங்கிய நண்பராக இருந்தாலும் திரை இயக்கம் பற்றி யோசிக்காத தனுஷ் தற்போது ‘பவர் பாண்டி’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x