Published : 09 Apr 2017 08:27 AM
Last Updated : 09 Apr 2017 08:27 AM

கேளாய் பெண்ணே: வெயில் கொப்புளங்களைத் தடுப்பது எப்படி?

வெயில் காலம் என்பதால் குழந்தையின் உடலில் சிவப்பு நிறக் கொப்புளங்கள் தோன்றுகின்றன. என்ன செய்வது?- சுதா கார்த்திகேயன், ஆவடி

ரெக்ஸ் சற்குணம், குழந்தை நல மருத்துவர்,
இசபெல்லா மருத்துவமனை ஆலோசகர்.

குழந்தைகளின் உடல் மிகவும் மென்மையாக இருப்பதால் வெயில் காலத்தில் வியர்க்குரு மற்றும் சரும நோய்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. பள்ளிக்குச் சென்று வரும் பிள்ளைகளைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளும் குளிக்க வையுங்கள். அதிகமாகத் தண்ணீர், மோர், பழச்சாறு ஆகியவற்றைக் குடிக்கக் கொடுங்கள். விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு உடனடியாக ஐஸ் வாட்டர் கொடுக்கக் கூடாது. முதலில் சாதாரணத் தண்ணீரைக் கொடுங்கள். அரைமணி நேரம் கழித்து ஐஸ் வாட்டர் வேண்டும் என்றால் கொடுங்கள்.

பொதுவாக வெளியே விளையாடி விட்டு வரும் குழந்தைகளுக்கு ஐஸ் வாட்டர் கொடுக்காமல் இருப்பது நல்லது. இதனால் உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் பருத்தி உடைகளைக் குழந்தைகளுக்கு அணிவியுங்கள். உடலை ஒட்டிய இறுக்கமான உடைகளைத் தவிர்ப்பது நல்லது. வியர்க்குரு கட்டிகள் அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

பிறந்து சில நாட்களான குழந்தைகள் வெயில் காலத்தில் மிகவும் அசௌகரியமாக உணர்வார்கள். குழந்தைக்கு அடிக்கடி தாய்ப் பால் கொடுப்பது அவசியம். குழந்தைகளின் உடலில் நீர்ச் சத்துக் குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தைகள் நன்றாகச் சிறுநீர் கழிக்க வேண்டும். அதேபோல் வீட்டிலிருக்கும்போது சிறு குழந்தைகளுக்கு டயபர் போடாமல் இருப்பது நல்லது.

தொடர்ச்சியாக டயபர் போடுவதால் குழந்தைகளுக்கு எரிச்சல், கொப்புளங்கள் உண்டாகும். அதற்குப் பதிலாகப் பருத்தித் துணிகளை அணிவிக்க வேண்டும். வெயில் காலத்தில் குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும். மாலை நேரத்தில் நல்ல காற்றோட்டமாக உள்ள இடத்தில் குழந்தையைச் சிறிது நேரம் வைத்துக்கொள்ளலாம்.

நான் கல்லூரி மாணவி. வெயில் காலம் தொடங்கிவிட்டதால் என் முகம், கை, கழுத்து போன்ற பகுதிகள் நிறம் மாறத் தொடங்கியுள்ளன. தலையில் பொடுகுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு சொல்லுங்கள்.
- பாரதி, கோவை

கே.பிரியா, தோல் மற்றும்
அழகியல் மருத்துவர், சென்னை.

வெயில் காலத்தில் வெயில் படும் இடங்களான முகம், கழுத்து, கழுத்தின் பின்பகுதி, கை போன்ற இடங்களில் தோலின் நிறம் மாறும். வெயில் காலத்தில் படர்தாமரை, பூஞ்சைத் தொற்றுகள் போன்றவையும் ஏற்படலாம். முகம், கை பகுதிகளில் வெள்ளை, சிவப்பு நிறங்களில் ஒவ்வாமை திட்டுகள் உண்டாகக்கூடும்.

எலுமிச்சை, ஆரஞ்சு, சந்தனம், மஞ்சள் மற்றும் கிளிசரின் அடங்கிய சோப்பு, கிரீம், லோஷன் ஆகியவை வெப்பத்தை அதிகமாக உட்கிரகிக்கும் தன்மை கொண்டவை. அதனால் அவற்றை வெயில் காலத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். தலைக்குப் பூசும் சாயமும் வெப்பத்தை அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது.

பொடுகுத் தொல்லையைத் தவிர்க்க மாலை நேரத்தில் தலைக்குக் குளிப்பது நல்லது. இப்படிக் குளிப்பதால் இரவு நேரத்தில் தலைமுடியின் வேர்க்கால்கள் இருக்கும் பகுதி சுத்தமாக இருக்கும். வெயில் காலத்தில் தினமும் இரண்டு முறை கட்டாயமாகக் குளிக்க வேண்டும். அதிகமாக வியர்ப்பதாலும் பொடுகுத் தொல்லை ஏற்படலாம். தோலிலும் அழுக்கு சேரும். வியர்வையை உடலில் நீண்ட நேரம் ஊறவிடாமல் உடனுக்குடன் குளிப்பதுதான் இதைத் தவிர்க்கச் சிறந்த வழி.

சராசரியாக அறுபது கிலோ எடை கொண்ட ஒருவர் குறைந்தபட்சம் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் வெளியே செல்லும்போது தலைக்குத் தொப்பி அணிந்து, கைகளை முழுமையாக மறைக்கும் கை உறைகளை அணிந்துகொண்டு செல்லலாம். குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம். தோலின் நிறம் மங்காமல் இருக்க எஸ்.பி.எஃப். 25 கொண்ட கிரீம்களைப் பயன்படுத்தினாலே போதும்.

நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீரில் குளோரின் அதிகமாகக் கலந்திருக்கும். அதனால் தண்ணீர் உட்புகாத லோஷன்களைத் தடவிக்கொண்டு நீச்சல் பயிற்சி எடுக்கலாம். குளோரின் கலந்த தண்ணீர் நம் தோலில் படுவதால்

வெப்பம் அதிகமாக உறியப்படும். ஃபேஷியல் செய்வதால் வெயிலால் கறுத்துப்போன நிறம் திரும்பும் என்று பலரும் நம்புவார்கள். ஆனால் அப்படி எதுவும் நிகழாது. சரியான உணவு, போதுமான தண்ணீர் இரண்டையும் சரியாகக் கடைப்பிடித்தாலே வெயில் காலத்தில் வரும் சருமப் பிரச்சினைகளைச் சரிசெய்துவிட முடியும்.



உங்கள் கேள்வி என்ன?

‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002. மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x