Last Updated : 26 Aug, 2016 11:59 AM

 

Published : 26 Aug 2016 11:59 AM
Last Updated : 26 Aug 2016 11:59 AM

கேமரா உங்களிடமே வரும்: அடூர் கோபாலகிருஷ்ணன் நேர்காணல்

சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்திய சினிமா இயக்குநர்களில் ஒருவர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவரது 50 ஆண்டு திரைப்பட வாழ்வில் 12 திரைப்படங்களையே எடுத்துள்ளார். ‘நாலு பெண்ணுங்கள்’ படத்துக்குப் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து ‘பின்னயும்’ என்ற படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். மலையாள சினிமாவை உலக சினிமா வரைபடத்தில் இடம்பெறச் செய்த அடூர் தனது சினிமா பயணம் குறித்த எண்ணங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

உங்களது முதல் படமான ‘சுயம்வரம்’ படத்துக்கும் தற்போதைய ‘பின்னயும்’ படத்துக்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?

நான் முதல்முறையாக இப்போது டிஜிட்டல் கேமராவில் படம்பிடித்திருக்கிறேன். மிகுந்த பயத்துடன்தான் அந்த விஷயத்தை அணுகினேன். எனது வாழ்க்கை முழுவதும் நெகடிவ் பிலிமைக் கையாண்டவன் நான். பிலிமை பிராசஸ் செய்வதற்காகக் காத்திருந்து, சில வாரங்கள் கழித்து ரஷ்களைப் பார்ப்போம். இப்போது நீங்கள் எடுத்ததை, உடனடியாக உங்களால் பார்க்க முடியும். இந்தப் படத்தை 23 நாட்களில் முடிக்க முடிந்தது. எனது முந்தைய படங்களுக்கு 30 அல்லது அதற்கும் மேல் நாட்கள் ஆகும்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதற்குப் பதிலாக நேரடியாகத் திரையரங்குகளிலேயே வெளியிட்டுவிட்டீர்களே?

ஆம். திருட்டு டிவிடி தொடர்பான பயம் இருக்கிறது. இந்தியா முழுவதும் நான் படத்தை வெளியிடுவதும் இதுவே முதல் முறை.

பின்னையும் படம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்…?

1980-களில் கேரளத்தில் நடந்த, முடிவே காணப்படாத வழக்குதான் இப்படத்தின் அடிப்படை. வளைகுடா நாட்டில் வேலைபார்த்த சுகுமார குரூப் என்பவர் ஆயுள் காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக, ஒரு நபரைக் கொன்று எரித்து, தானே இறந்ததாக நம்பவைக்க முயல்கிறான். இன்றைக்கும் பொருந்தக்கூடிய கதை அது. ஏன் ஒருவர் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்கிறார்? அதன் உளவியலால் நான் கவரப்பட்டேன்.

முறையாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுபவை உங்கள் படங்கள். படப்பிடிப்புக்கான திட்டமிடுதலுடன் திரைக்கதையை எழுதுபவர் நீங்கள் என்றும் கேள்விப்wபட்டிருக்கிறோம்…

படப்பிடிப்புக்கான திரைக்கதையை எழுதிய பின்னரும் நான் மேம்படுத்தியபடி இருப்பேன். நான் எழுதும் திரைக்கதையைவிட எடுக்கும் சினிமா மேம்பட்டதாக இருக்கும். ஏனெனில் அதை உயிரோட்டமாகப் படமாக்குவேன். கேமராவின் நிலை, நகர்வுகள் உட்பட அனைத்தை நுட்பமான விவரங்களையும் எழுதும்போதே குறித்துக்கொள்வேன். ஒவ்வொரு ஷாட்டுக்கும் எந்த லென்ஸ் வேண்டுமென்பதையும் எழுதிவிடுவேன்.

ஒளிப்பதிவாளர் தொடர்பாகப் பிரத்யேகமான தேர்வுகள் உண்டா?

ஒளிப்பதிவாளரின் பணி என்பது ஒளியமைப்பிலும், ஒரு எல்லைவரை, காட்சி உருவாக்கத்திலும் பிரதானமாக உள்ளது. சூழ்நிலைகளைப் பொறுத்து சில ஆலோசனைகளும் தேவைப்படும். ‘எலிப்பத்தாயம்’ படத்தில் உண்ணியின் நோய்வாய்ப்பட்ட தங்கை, படுத்திருக்கும் கட்டிலோடு மருத்துவர் வீட்டுக்குக் கொண்டுசெல்லப்படுவதாக ஒரு காட்சி வரும். நான் அதைப் பல ஷாட்களாக எடுக்கத் திட்டமிட்டு எழுதியிருந்தேன். ஆனால் படமெடுக்கும்போது, ஒளிப்பதிவாளர் மங்கடா ரவிவர்மா, கட்டிலோடு கேமராவைப் பொருத்திவிட்டால் அதை ஒற்றை ஷாட்டில் எடுத்துவிடலாம் என்றார். அந்த ஷாட் எங்களுக்கு அற்புதமான உணர்வைத் தந்தது. அப்படியான ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வேன்.

வர்த்தக சினிமா குறித்து உங்களுக்கு விமர்சனங்கள் இருந்தாலும், நட்சத்திரங்களான மம்மூட்டியையோ மதுவையோ நீங்கள் நடிக்க வைக்கத் தயங்கியதேயில்லை... தற்போது திலீப்பை இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறீர்கள்...

எந்த நட்சத்திரத்தின் மீதும் பிரமிப்பெல்லாம் இல்லை. அந்த நபரை நான் நடிகராகவே பார்க்கிறேன். எனது மனதில் உள்ள கதாபாத்திரத்துக்கு அந்த நட்சத்திரம் உருவம் அளிக்க வேண்டும். உதாரணத்துக்கு ‘விதேயன்’ கதையில் வரும் பட்டேலர் கதாபாத்திரத்துக்கு யாருமே மம்மூட்டியைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் நான் அவரை நடிக்க வைத்தேன். ஏனெனில் அவரது உடல்தோற்றம், உள்ளார்ந்த சக்தியைப் பிரதிபலிக்கும் ஒரு சாத்தியத்தை எனக்கு உணர்த்தியது. ஒரு நடிகர் சார்ந்து முடிவெடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் ஒட்டுமொத்த பின்னணியையும், பூர்விகத்தையும் தெரிந்திருப்பது அவசியம். அந்தக் கதாபாத்திரம் சினிமாவில் ஒரு நிமிட அளவே தோன்றினாலும், நமது வாழ்க்கையின் வாயிலாக அறிந்த நபரைப் போல அவர் சித்தரிக்கப்பட வேண்டும்.

நடிகர்களிடம் படத்தின் முழுக் கதையையும் சொல்ல மாட்டீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்...

ஆம். குறிப்பிட்ட காட்சிக் கோவைக்கு எது தேவையோ அதை மட்டுமே அவர்களிடம் சொல்வேன். மொத்தக் கதையையும் அவர்களிடம் சொல்வது பல்வேறு விளக்கங்களுக்கு இட்டுச்செல்லக்கூடும். நான் ‘விதேய’னை எடுக்கத் தொடங்கியபோது, தொம்மியின் பாத்திரத்தைச் செய்த எம்.ஆர்.கோபகுமார் படப்பிடிப்பில் வினோதமாக நடந்துகொள்வதைக் கண்டுகொண்டேன். அவரிடம் கேட்டபோது, பால் சக்கரியாவின் கதையை அடிப்படையாக கொண்ட படத்தைத்தான் நான் எடுப்பதாக அவர் கேள்விப்பட்டதாகவும் அந்தக் கதையை அவர் பலமுறை படித்திருப்பதாகவும் என்னிடம் சொன்னார். “உங்களை யார் அதைப் படிக்கச் சொன்னது? அந்தக் கதையின் அடிப்படையிலானதல்ல இந்தப் படம். அந்தக் கதை என்பது இந்தப் படத்திற்கான தொடக்கம்” என்று அவரிடம் சொன்னேன்.

உங்கள் திரைப்படங்களில் அரசியல் விமர்சனத்தை எப்போதும் தவிர்ப்பவர் நீங்கள். ‘முகாமுகம்’ போன்ற படத்தில்கூட, அரசியல் விமர்சனத்தை விட ஒரு மனிதனின் கதைதானே அழுத்தமாக உள்ளது?

அரசியல் எனது படங்களில் உள்ளடக்கமாகவும் அறிக்கையாகவும் உள்ளது. ஆனால், சிலர் செய்வது போன்ற அரசியல் படங்களை நான் உருவாக்கவில்லை. நான் எதையும் நிரூபிப்பதற்காகப் படத்தை எடுப்பதில்லை. ஆனாலும், கேமராவை நாம் எங்கு வைக்கிறோம் என்பதிலிருந்தே அரசியல் இருக்கவே செய்கிறது. ஆறடி மனிதன் இந்த உலகத்தைப் பார்ப்பது, ஐந்தடி கொண்ட மனிதன் பார்ப்பதிலிருந்து வேறுபட்டதுதான்.

நீங்கள் நாடகாசிரியராக அனுபவம் பெற்று சினிமாவுக்கு வந்தவர். ஆனால் உங்கள் படங்களில் நாடக அம்சங்கள் இல்லையே? நீங்கள் படித்த புனே இன்ஸ்டிட்யூட்டில் அதைத் தொலைத்துவிட்டீர்களா?

எனக்கு நாடகம் என்றால் என்னவென்று தெரியும். அதனால் என்னுடைய படங்களில் நாடக அம்சங்கள் வருவதேயில்லை. உடலையும் கைகளையும் தீவிரமாகப் பயன்படுத்தும் என்னுடைய நடிகர்கள் சிலரிடமும் இதையே சொல்வேன். இத்தகைய அதீத உடல்பாவங்கள் அனைத்தும் நாடகத்துக்கானவை. கடைசியில் அமர்ந்திருக்கும் பார்வையாளருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக அது நிகழ்த்தப்படுகிறது. சினிமாவில், அதைச் செய்ய வேண்டியதில்லை. அந்த வேலையை கேமரா செய்கிறது. உங்களை நெருக்கமாகப் பார்க்க வேண்டுமானால், கேமரா உங்களிடமே வரும்.

‘அனந்தரம்’ திரைப்படம் உங்களுடைய படங்களிலேயே சிக்கலானது இல்லையா? அதைப் பற்றிக் கூறுங்கள்…

என் மனைவி கர்ப்பமாக இருந்து மருத்துவமனையிலிருந்து எங்கள் குழந்தையுடன் திரும்பியபோது சொன்ன கதை அது. மருத்துவமனையில் அநாதையாக விடப்பட்டு, அங்குள்ள மருத்துவர்களில் ஒருவரால் தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் கதை அது. அதுதான் ‘அனந்தரம்’ படத்துக்கான பொறி. யாருடனும் அதிகம் பழக இயலாத தனியன் ஒருவனின் கதை அது. நம் ஒவ்வொருவரிலும் அதிகம் வெளிப்படாத தனியனும், எல்லாருடனும் பேசிக் கலக்கும் இயல்புள்ளவனுமாய் இரண்டு பேர் இருக்கிறார்கள். நான் தனியன்தான். நான் சினிமா எடுப்பவன் என்பதால் எல்லாருடனும் புழங்குவதற்கும் உரையாடுவதற்கும் நிர்ப்பந்திக்கப்படுகிறேன்.

உங்கள் படங்களைச் சாதாரண மக்கள் ரசிக்க முடியாது என்ற விமர்சனம் உள்ளதே?

அப்படிச் சொல்ல முடியாது. ஒவ்வொரு முறை நான் படமெடுக்கும் போதும், உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்குமானதாக அது இருக்க வேண்டுமென்று நினைத்தே எடுக்கிறேன். ஆனால் அதற்காக எந்தச் சலுகைகளையும் தருவதில்லை. அது என்னுடைய இயல்பின் அடிப்படையிலேயே இருக்கும். நான் எதை விரும்புகிறேனோ அது மற்றவர்களாலும் விரும்பப்படக்கூடியதே என்று நினைக்கிறேன். நான் சில மதிப்பீடுகளை வைத்துள்ளேன். அதிகபட்சம் குரூரமான ஒரு நபர்கூட, மதிப்பீடுகள் கொண்ட ஒரு நபரை மதிக்கவே செய்வார். இன்னொரு குரூரமான நபர் மீது அவருக்கு மதிப்பு இருக்காது.

பிரபலம் தொடர்பாக எப்போதாவது எண்ணிப் பார்த்துள்ளீர்களா?

எனது இரண்டாவது படமான ‘கொடியேட்டம்’ படத்துக்கு 13 பிரிண்ட்கள் போட்டேன். ஆனால் கோபியின் முகத்தைப் பார்த்து யாரும் திரையரங்குக்கு வர மாட்டார்கள் என்று கூறி பெரும்பாலான திரையரங்கங்கள் அந்தப் படத்தைத் திரையிட மறுத்தன. இரண்டு திரையரங்கங்கள்தான் அந்தப் படத்தைத் திரையிட்டன. ஆனால் படம் பார்த்தவர்கள் சொல்லிக் கேட்டு அரங்கம் நிறையத் தொடங்கியது. அந்தச் செய்தி பரவி, மற்ற திரையரங்கங்களும் திரையிட்டன. புகழ் என்பது சுயேச்சையானது. மக்களின் மனநிலை தொடர்பானது. எத்தனைதான் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் பேசினாலும், மகத்தான திரைப்படங்கள் எல்லாமே மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்டவை. உணர்வுபூர்வமாகத் தாக்கம் ஏற்படுத்தும் படங்கள் மக்களால் ரசிக்கப்படுகின்றன. ‘பின்னயும்’ படம், எனது எல்லாப் படங்களையும்விட அதிக பிரபலத்தைப் பெறும். இது எனது நம்பிக்கை.

‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x