Last Updated : 12 Jan, 2014 12:00 AM

 

Published : 12 Jan 2014 12:00 AM
Last Updated : 12 Jan 2014 12:00 AM

வீதி நாய்களை வீட்டில் பராமரிக்கும் பெண்

‘நாய் மாதிரி நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும்’, ‘கண்ட கண்ட தெருநாய்ங்க’ என வாழ்த்துதல், தூற்றுதல், கிண்டல் உள்ளிட்ட அனைத்திற்கும் நாயை உதாரணமாக பயன்படுத்துவது வாடிக்கையான ஒன்று. ஆனால், எத்தனை பேர் அந்த வாயில்லா ஜீவன் வாலாட்டி வரும்போது வாஞ்சையுடன் அரவணைத்து அதற்கு உணவு அளிக்கிறார்கள்? அதிலும் பராமரிப்பின்றி சுற்றித் திரியும் தெரு நாய்களென்றால் சொல்லவே தேவையில்லை, கையில் கிடைத்ததைக்கொண்டு அடித்து விரட்டுவதுதான் முதல் வேலையாக இருக்கும்.

இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் வீதியில் சுற்றித் திரியும் நாய்களை எடுத்து பராமரிப்பதுடன் ஆரோக்கியமான உணவு, குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கை வசதி, மாதம் ஒரு முறை மருத்துவப் பரிசோதனை ஆகிய வசதிகளைச் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார் நாமக்கல்லைச் சேர்ந்த மீரா தயாளன். பேருந்து நிறுவனம், ஹோட்டல், பெட்ரோல் பங்க் என கணவரும், மகனும் கடிகார முள் போல் 24 மணி நேரமும் உழைக்கக்கூடிய பரபரப்பான குடும்பச் சூழலில் தெருநாய்களை எடுத்து தன் வீட்டில் பராமரிப்பது சிரமமான காரியம் என்றாலும், அதை தனது அன்றாடக் கடமையாக செய்து வருகிறார் இவர்.

“வீட்டுக்கு பின்னால் சந்தைத் திடல் ஒன்று இருக்கிறது. அங்கு ஏராளமான தெருநாய்கள் உலவும். அந்த நாய்களுக்கு நாள்தோறும் வீட்டின் முன், மதிய உணவு வைப்போம். அதனால், இப்பகுதியில் சுற்றும் தெருநாய்கள் மதியம் வீட்டருகே வந்துவிடும். அவற்றில் சில குட்டி நாய்களை எடுத்து பராமரிக்கத் தொடங்கினேன். கடந்த 16 ஆண்டுகளாக இதுபோல் செய்து வருகிறேன். ஏறத்தாழ முப்பது நாய்கள் வீட்டில் உள்ளன” என்கிறார் மீரா.

அனைத்து நாய்களும் ஒன்றாக இருந்தால் சண்டை போட்டுக் கொள்கின்றனவாம். "இதனால், அவற்றுக்கு வீட்டின் முன் தனித்தனி அறைகள் கட்டி விட்டுள்ளேன். ஒரு சில நாய்கள் வீட்டுக்குள் எங்களுடனேயே உள்ளன. நாங்கள் படுத்து உறங்கும் அறையிலேயே சில நாய்கள் உறங்கும். பழகிவிட்டதால் வீட்டில் நாய்கள் சாதாரணமாக உலவும். எங்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதில்லை. நாய்களுக்கு மாதம் ஒரு முறை நாமக்கல் கால்நடை மருத்துவமனை டாக்டர் வந்து சிகிச்சை அளிப்பார். அதுபோல் உடல்நலம் குன்றும் நாய்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

“வீதியில் நோய்வாய்ப்பட்டு கிடக்கும் நாய்களை எடுத்து வந்தும் பராமரித்து வருகிறேன். ஒரு நாய் கடந்த ஓராண்டுக்கு மேல் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்த படுக்கையாக உள்ளது. அதற்கு உரிய மருத்துவ சிகிச்சை தந்து வருகிறோம். என்றாலும், அதன் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. வாயில்லா ஜீவன்களைப் பராமரிப்பதை பாக்கியமாகக் கருதுகிறேன். இதற்கு எனது கணவர், மகன், மருமகள் என அனைவரும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்” என்கிறார் மீரா.

வசதி படைத்தோர் வீடுகளில் டாபர் மேன், கிரேடன், பக், ராட் கில்லர் என விதவிதமான பெயர்களைக் கொண்ட வெளிநாட்டு நாய் வகைகளை வளர்ப்போர் மத்தியில் ஆதரவற்ற தெருநாய்களை பராமரிக்கும் மீரா தயாளன், நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x