Last Updated : 02 Aug, 2016 11:55 AM

 

Published : 02 Aug 2016 11:55 AM
Last Updated : 02 Aug 2016 11:55 AM

சேதி தெரியுமா? - இரண்டு எழுத்தாளர்கள் மறைவு

இரண்டு எழுத்தாளர்கள் மறைவு

வங்காள இலக்கியகர்த்தாவும், பூர்வகுடிகள் உரிமைகளுக்காக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தவருமான எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி ஜூலை 28 அன்று காலமானார். அவருக்கு வயது 90. ஆதிவாசிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அவர் 20 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 120 நூல்களையும், எண்ணற்ற பத்திரிகைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பிஹாரில் தங்களது பூர்வீக நிலத்தின் மீதான உரிமையைக் கோரி பிஹாரைச் சேர்ந்த பழங்குடியினர் பிர்சா முண்டா என்பவர் தலைமையில் போராடிய சரித்திரத்தை ‘காட்டில் உரிமை’ என்ற நாவலாக எழுதினார் மகாஸ்வேதா தேவி. இந்த நாவல் அவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த நாவலுக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவரது மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்கும்போது, தனது பாதுகாவலர் என்றும் இந்தியா ஒரு மகத்தான எழுத்தாளரை இழந்து நிற்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழ்ப் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன் ஜூலை 27 அன்று நள்ளிரவில் காலமானார். அவரது முதல் புதுக்கவிதை நூலான ‘அன்று வேறு கிழமை’ கவிதை வாசகர்களிடையே மிகுந்த புகழ்பெற்றது. அவருக்கு வயது 78.



ஆதார் அட்டை: மாநிலங்களவை முடக்கம்

எரிவாயு மானியம், ரேஷன் பொருட்கள், மற்றும் ஓய்வூதியத் தொகைகளை வாங்குவதற்கு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கக் கூடாதென்று எதிர்க்கட்சிகள் இணைந்து கோரிக்கை விடுத்ததால் ஜூலை 28 அன்று மாநிலங்களவை மூன்று முறை முடங்கியது. திரிணமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சிகள், இடதுசாரி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் துணையுடன் ஆதார் அட்டை கட்டாயமாக்கல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மாநிலங்களவையின் துணைத் தலைவர் இதற்கு மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பியதையடுத்து விவாதம் அனுமதிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, ஆதார் அட்டையை இந்தியர்கள் அனைவரும் பெறும் வரை, அரசு மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்குக் கட்டாயமாக்கப்படாது என்று உறுதியளித்தார். மானியப் பணத்தை நேரடியாக வங்கியில் சேர்க்கும் முறை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் தொடங்கப்பட்டது என்றும் கூறினார்.



இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு

1991-லிருந்து இந்தியாவில் தொடங்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் வறுமை குறைந்துள்ளதாகவும், ஆனால் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் பெருமளவு அதிகரித்துள்ளதாகவும் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ‘டு தி பிரிங்க் அண்ட் பேக்: இந்தியாஸ் 1991 ஸ்டோரி’(‘To the Brink and Back: India’s 1991 Story’) என்ற நூலை அவர் சமீபத்தில் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகள் நடந்த பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து ஜூலை 30 அன்று சென்னையில் ‘தி இந்து’வின் அரசியல் மற்றும் பொது கொள்கை மையமானது கருத்தரங்கு நடந்தது. நுகர்வுப் பொருட்களை வாங்கும் வசதி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டுள்ள சூழலில் பொது சேவை அமைப்புகள் நிலைகுலைந்து போயிருக்கின்றன என்று கூறினார். ஆரோக்கிய சேவை மற்றும் பொதுக்கல்வியின் தரம் மிகவும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



அமெரிக்க மாநாட்டில் தமிழ் யுவதி

அமெரிக்காவில் கடந்த ஜூலை 29-ல் நடந்து முடிந்த ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் 18 வயது தமிழ் பெண் ஸ்ருதி பழனியப்பன் பங்குபெற்று அயோவா மாகாணப் பிரதிநிதியாக உரையும் ஆற்றினார். ஸ்ருதி பழனியப்பனின் பெற்றோர்கள் 1992-ல் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தனர். ஸ்ருதி பழனியப்பன் விரைவில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசு நிர்வாகப் பட்டப்படிப்பு படிக்கவுள்ளார்.

அவருடைய தந்தை பழனியப்பன் ஆண்டியப்பனும் க்ரடென்சியல்ஸ் கமிட்டியின் உறுப்பினராக இந்த மாநாட்டில் கலந்துகொண்டார். ஸ்ருதி, அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்காக வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இத்தனை இளம் வயதில் ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் யாரும் பங்கேற்று உரையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



புலிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்

கடந்த ஜூலை 29 அன்று, வெள்ளிக்கிழமை சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு 45 சர்வதேச தொண்டு நிறுவனங்கள் நடத்திய நிகழ்ச்சியொன்றில் இந்திய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே பேசினார். 2022-க்குள் இந்தியாவிலுள்ள புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்றார். உலகளவில் வனத்தில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையை விட கூண்டுகளில் பிடிக்கப்பட்டுப் பராமரிக்கப்படும் புலிகளின் எண்ணிக்கை அதிகம் என்ற தகவல் அந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் வனங்களில் 2 ஆயிரத்து 226 புலிகள் உள்ளதாகக் குறிப்பிட்ட தவே, உலகிலேயே புலிகளின் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x