Published : 26 Feb 2017 10:55 AM
Last Updated : 26 Feb 2017 10:55 AM

போகிற போக்கில்: அன்னாசி நாரால் கிடைத்த விருது

பருத்தி நாரைப் பற்றி அதிகமாகக் கேள்விப்பட்ட பலருக்கும் அன்னாசி நார் புதியது. அன்னாசி நாரில் இருந்து விதவிதமான நகைகள் செய்யலாம் என்று நம் ஆச்சரியத்தைக் கூட்டுகிறார் தங்கஜோதி. அத்துடன் பனை ஓலைகளில் பல்வேறு வகையான கைவினைப் பொருட்களைச் செய்கிறார். அன்னாசி நார் நகைகளுக்காகத் தமிழக அரசின் சிறந்த கைவினைக் கலைஞர் விருதைப் பெற்றிருக்கும் தங்கஜோதி, பனை ஓலையில் செய்யும் கைவினைப் பொருட்களுக்காகத் தேசிய விருதுபெறும் லட்சியத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் புன்னையடி மக்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர் தங்கஜோதி. இவரது சுறுசுறுப்பும் செயல்பாடும் 61 வயதைப் பாதியாக்கிவிடுகின்றன. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கையே தன்னை வழிநடத்துகிறது என்கிறார் தங்கஜோதி.

“எனக்குப் படிப்பு ரொம்பக் குறைவு. சின்ன வயசுல எங்க வீட்டைச் சுத்தி நிறைய பனை மரங்கள் இருக்கும். பதநீர் வாசமும் பனை ஓலைகளின் சத்தமும் சங்கீதம் மாதிரி கேட்டுக்கிட்டே இருக்கும். அப்பா விவசாயி. பனை மரமும் ஏறுவார். மூத்த பிள்ளைன்னு பனை மரங்களைத்தான் சொல்வார். அதனால எங்களுக்கும் பனை மரங்க மேல அளவு கடந்த பாசம். எங்க அம்மா புட்டு செய்து அதைப் பனையோலைப் பெட்டியில் வச்சுதான் கொடுப்பாங்க. ஆனா இன்னைக்குப் பனையோலைப் பெட்டி மட்டுமல்ல, பனை மரமே எங்க பகுதியில குறைஞ்சுபோச்சு. பனைதான் எங்க மண்ணோட, மக்களோட அடையாளம். பனைகளை அழிச்சு, பனை உயர வீடுகளைக் கட்டிக்கிட்டே போறது ரொம்ப வருத்தமா இருக்கு. நான் கைவினைப் பொருட்கள் செய்ய, திசையன்விளைக்குப் போய்தான் பனையோலை வாங்கிட்டு வர்றேன்” என்கிற தங்கஜோதியின் குரலில் வருத்தம் தெரிந்தது.

மூன்றாம் வகுப்பிலிருந்தே பனையோலையில் பெட்டிகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார் தங்கஜோதி. படிப்பைத் தொடர இயலாத சூழல் வந்தபோது, பனையோலையில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். பெட்டி, பை, சுருக்குப் பெட்டி, தண்ணீர் பாட்டில் வைக்கும் பை, பூக்கூடைகள், பென்சில் பாக்ஸ் போன்றவற்றைக் கனகச்சிதமாகச் செய்தார். தாழம்பூ ஓலையைச் சேகரித்து பெரிய பைகள், டீ மேட், வளையல் பாக்ஸ் என்று விதவிதமாக உருவாக்கி, விற்பனையும் செய்துவந்தார்.

கைவினைப் பொருட்கள் வளர்ச்சி ஆணையர் அலுவலகத்தின் உதவி இயக்குநர் பாலு, தங்கஜோதியை ஊக்கப்படுத்தினார். அதன் மூலம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற கண்காட்சிகளில் தங்கஜோதி பங்கேற்க ஆரம்பித்தார். அரசு சார்பில் இலங்கை, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும் சென்றுதிரும்பினார்.

- தங்கஜோதி

“பிலிப்பைன்ஸ் நாட்டில் அன்னாசி இலையில் உள்ள நாரை எடுத்து, துணி தைப்பதைப் பார்த்தேன். அதிலிருந்துதான் நகைகள் செய்யும் எண்ணம் வந்தது. எடுத்த உடனே எனக்கு வெற்றி கிடைக்கலை. நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து முயற்சிசெய்துகிட்டே இருந்தேன். ஒருநாள் என் கைகளுக்குள் கட்டுப்பட்டுவிட்டது கலை. விதவிதமாக நகைகள் செய்தேன். மாநில அரசும் விருது கொடுத்து என்னை அங்கீகரித்தது. தங்க நகைகள் மீது ஈடுபாடு கொள்ளாமல் விதவிதமான பசுமை நகைகள் மீது பெண்கள் ஆர்வம் காட்டினால் நல்லது. பலருக்குப் பசுமை நகை செய்யும் பயிற்சியும் கொடுத்துவருகிறேன். இதன் மூலம் அவங்களோட பொருளாதார உயர்வுக்கும் என்னால் கொஞ்சமாவது உதவ முடியுது”என்கிறார் தங்கஜோதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x