2016-ன் இந்தியச் சொல் எது?

2016-ன் இந்தியச் சொல் எது?
Updated on
2 min read

‘இந்த ஆண்டின் சொல்’ என்று 2016-ல் தேர்வு செய்யப்பட்ட ‘post-truth’ என்ற சொல்லைப் பற்றி சில வாரங்களுக்கு முன் பார்த்தோம். இந்தச் சொல்தேர்வின் வரலாற்றைப் பார்த்தால் ஆங்கிலத்தின் ஆதிக்கம் நமக்கு நன்றாகப் புலப்படும். ‘Sudoku’ போன்ற சொற்கள் விதிவிலக்கு. நாம் விரும்பியோ விரும்பாமலோ ஆங்கிலம் உலக மொழியாகிவிட்டது. அதனால் ‘இந்த ஆண்டின் சொல்’ தேர்வுகளில் ஆங்கிலமே எப்போதும் இடம்பிடிக்கிறது. விதிவிலக்காக, சுடோகு (ஜப்பானியச் சொல்) போன்ற சொற்கள் அந்தப் பட்டியலில் இடம்பிடிக்கின்றன.

அதுபோல், நாம் ஏன் இந்தியா சார்ந்த ‘இந்த ஆண்டின் சொல்’ விருதை வழங்கக் கூடாது? கடந்த சில ஆண்டுகளில் இணையத்திலும் ஊடகங்களிலும் பயன்படுத்தப்பட்ட சொற்களைக் கொண்டே ஒரு பட்டியலை நாம் உருவாக்கலாம்.

ஆக்ஸ்ஃபோர்டில் கொலவெறி?

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழ்ப் பாடல் இணையத்தில் ‘கொலவெறி’ ஹிட்டடித்தது. உலகெங்கும் நூறு கோடிக்கும் மேற்பட்டோரால் அந்தப் பாடல் பார்க்கப்பட்ட பிறகு ஆங்கிலத்திலும் ‘kolaveri’ என்ற சொல் இடம்பிடித்தது. ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் அந்தச் சொல் சேர்க்கப்படலாம் என்றுகூட ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் சேர்க்கப்படவில்லை வீரேந்திர சேவாக் ஒரு நாள் போட்டியில் சதமடித்தபோது பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் முதல் பக்கத்தில் ‘Why this kola-Viru Ji?’ என்று கேட்டிருந்தார்கள். ‘கொலைவெறி’ என்ற சொல்லை வைத்து நிகழ்த்தப்பட்ட ஒரு விளையாட்டு இது.

இதை அடிச்சிக்க வார்த்தை இல்லை!

இதுபோல் இந்திய அளவில் புகழ்பெற்ற சொற்களைப் பார்த்துவிட்டு ‘இந்த ஆண்டின் இந்தியச் சொல்’ விருதுக்கான சொல்லைத் தேர்ந்தெடுப்போம்.

‘துல்லியத் தாக்குதல்!’ ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் பயங்கரவாத நிலைகளின் மேல் இந்திய ராணுவம் நிகழ்த்திய தாக்குதலுக்குப் பின் ஊடகங்களில் எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தச் சொல்லின் தாக்குதல்தான். அது ஓய்வதற்குள் ‘பணமதிப்பு நீக்கம்’ என்ற அறிவிப்பு வந்துவிட அதை ‘கறுப்புப் பணத்தின் மீதான துல்லியத் தாக்குதல்’, ‘இந்தியப் பொருளாதாரத்தின் மீதான துல்லியத் தாக்குதல்’ என்று இரு தரப்பிலும் மாறி மாறி இந்தச் சொல்லின் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் காலத்துக்கு எந்தப் பெரிய மாற்றம் நிகழ்ந்தாலும் அதனுடன் ‘துல்லியத் தாக்குதல்’ என்ற பதம் ஒட்டிக்கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது. இணைய உலகிலும் இந்திய அரசியல் போக்கை விமர்சிப்பவர்கள் மத்தியிலும் bhakt, sangi ஆகிய சொற்கள் அதிகம் உலாவின.

எல்லாவற்றுக்கும் மேலாக, 2016-ன் ஆண்டின் இறுதியில் ‘திரையிடப்பட்டு’ மகத்தான வெற்றியடைந்த சொல் ஒன்று இருக்கிறது. அதுதான் Demonitization. தமிழில் ‘பணமதிப்பு நீக்கம்’ என்று சொல்லலாம். இந்த ஆண்டின் இந்தியச் சொல் விருதுக்கான போட்டியில் இந்தச்சொல்லுக்குப் பக்கத்தில் வருவதற்கு வேறு எந்தச் சொல்லுக்கும் வாய்ப்பில்லைதானே!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in