Published : 09 May 2017 11:04 AM
Last Updated : 09 May 2017 11:04 AM

சேதி தெரியுமா? - அமெரிக்கர்களைப் பணியமர்த்தும் இன்ஃபோசிஸ்

அடுத்த இரண்டு ஆண்டுகளில், பத்தாயிரம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறது பிரபல இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ். அமெரிக்காவுடன் இருக்கும் எச் - 1பி விசா பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இந்த முயற்சியை எடுத்திருக்கிறது இந்நிறுவனம். இந்தப் புதிய பணிகள், மையங்கள் மூலம் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), இயந்திரக் கற்றல், பயனர் அனுபவம், பெரிய தரவுகள் போன்ற புதிய தொழில்நுட்பப் பகுதிகளில் பணியாற்ற இருக்கிறது.

“முதல் கட்டப் பணியமர்த்தல், அமெரிக்காவில் உள்ள இண்டியானாவில் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இதனால், இரண்டாயிரம் புதிய வேலைவாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கு வரும் 2021-ல் உருவாகும். அத்துடன், கடந்த சில ஆண்டுகளில் ஏற்கெனவே 2000 அமெரிக்கர்களை இன்ஃபோசிஸ் பணியமர்த்தியிருக்கிறது. இந்தப் பணியமர்த்தல் விசா பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மட்டுமல்லாமல் புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தவும் உதவும்” என்கிறார் இன்ஃபோசிஸ் முதன்மைச் செயல் இயக்குநர் விஷால் சிக்கா.



100 ஆண்டுகளில் பூமியை விட்டு வெளியேற வேண்டும்

உலகின் புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், அடுத்த நூறு ஆண்டுகளுக்குள் மனிதர்கள் பூமியை விட்டு வெளியேறி வேறொரு கிரகத்தில் குடியேற வேண்டியிருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். காலநிலை மாற்றம், சிறுகோள்களின் தாக்குதல், மக்கள்தொகைப் பெருக்கம் போன்றவற்றை இதற்கான காரணங்களாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பி.பி.சி.யின் பிரபல அறிவியல் தொடர் ‘நாளைய உலகம்’ (Tomorrow’s World) 14 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஒளிபரப்பாகிறது. இந்தப் பகுதிக்காக ‘எக்ஸ்படிஷன் நியூ எர்த்’ (Expedition New Earth) என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஹாக்கிங்கும் அவருடைய முன்னாள் மாணவர் கிறிஸ்டோப் கல்ஃபர்டும் விண்வெளியில் மனிதர்கள் எப்படி வாழ்வது என்பதை அலசியிருக்கின்றனர். பூமியிலிருந்து மனிதர்கள் வெளியேற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாக இந்தத் தொடரில் ஹாக்கிங் சொல்லியிருக்கிறார்.

மனிதர்களை மூர்க்கமாக மாற்றும் உள்ளுணர்வுகள், தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, அணு சக்தி / உயிரியல் போர் போன்றவற்றால் உலகமே அழிந்துவிட வாய்ப்பிருப்பதாகக் கடந்த மாதம் ஹாக்கிங் தெரிவித்திருந்தார். இதற்குத் தீர்வாக அவர் ‘உலக அரசாங்கம்’(‘world government’) அமைப்பதை முன்மொழிந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. மனிதர்கள் ஓர் இனமாக வாழ்வற்கான திறன்களை இழப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் சொல்லியிருந்தார்.

தற்போது இந்த ஆவணப்படத்தில் அடுத்த நூற்றாண்டுக்குள் மனிதர்கள் வேறொரு கிரகத்துக்குக் குடிபெயர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.



பட்டம் வென்ற ஜோஷ்னா

ஆசிய ஸ்குவாஷ் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் ஜோஷ்னா சின்னப்பா. இறுதிச் சுற்றில் தீபிகா பள்ளிக்கள்ளை வீழ்த்தி இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார் ஜோஷ்னா. இறுதிச் சுற்றில் முதல் ஆட்டத்தை தீபிகா வென்றிருந்தாலும், இரண்டு ஆட்டங்களில் வெற்றிபெற்று பட்டத்தைக் கைப்பற்றினார் ஜோஷ்னா. இவர் தற்போது உலக ஸ்குவாஷ் தரவரிசை பட்டியலில் பதினான்காவது இடத்தில் இருக்கிறார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோசல் இறுதிச் சுற்று வரை முன்னேறினார். ஆனால், ஹாங் காங்கைச் சேர்ந்த மேக்ஸ் லீயிடம் எதிர்பாராத விதமாகத் தோல்வியடைந்தார்.



ஜிசாட் -9 வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்தியா ‘தெற்காசிய’ செயற்கைகோளான ‘ஜிசாட்-9’ மே 5 -ம் தேதி சதிஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. எட்டு சார்க் நாடுகளில், பாகிஸ்தான் மட்டும் இந்தத் திட்டத்திலிருந்து விலகிவிட்டதால் மற்ற ஏழு தெற்காசிய நாடுகளும் இந்த செயற்கைகோளால் பயன்பெறும். பேரிடர் கால ஆதரவு, இணைப்பு வசதி, அறிவு பகிர்தல் போன்றவற்றை இந்தச் செயற்கைகோள் ஏழு நாடுகளுக்கும் வழங்கும்.

‘ஜிஎஸ்ல்வி-எஃப்09’ (GSLV-F09) என்ற ஏவுகணையின் மூலம் அனுப்பப்பட்டிருக்கும் இந்தச் செயற்கைகோளின் மதிப்பு ரூ. 235 கோடி. இது 12 ஆண்டுகளுக்குத் தன் சேவையை வழங்கும். அதற்கான செலவு ரூ. 9,600 கோடி என இஸ்ரோ மதிப்பிட்டிருக்கிறது.

“அடுத்தபடியாக, ஜிஎஸ்எல்வி எம்கே III, பிஎஸ்எல்வி உள்ளிட்டவை வரும் மாதங்களில் ஏவப்படுவதற்குத் தயாராகிவருகின்றன. சந்திராயன் II அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஏவப்படும்” என்று சொல்கிறார் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண்குமார்.



இந்தோர்: இந்தியாவின் தூய்மையான நகரம்

இந்தியாவின் தூய்மையான நகரங்களுக்கான ‘ஸ்வச்ச சர்வேக்ஷன் 2017’ கருத்துக் கணிப்பில், முதல் இடத்தை இந்தோர் நகரம் பிடித்திருக்கிறது. இது பல தரப்பினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், 2014-ம் ஆண்டு நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த நகரம் 149-வது இடத்தில் இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு, இந்நகரத்தின் நகராட்சி அலுவலர்கள் கடுமையாகவும் திறம்படவும் உழைத்து இந்தோரைத் தூய்மையான நகரமாக மாற்றியிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தின் இன்னொரு நகரமான போபாலும் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த இரண்டு நகரங்களும் சரியான விழிப்புணர்வு, சட்டங்களைச் சீராக நிறைவேற்றியது, திறமையான நிர்வாகம் போன்றவற்றால் இதைச் சாதித்திருக்கின்றன.

2017-ம் ஆண்டுக்கான கருத்துக் கணிப்பில் இந்தியாவின் 434 நகரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. பதினெட்டு லட்சம் பேர் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை இந்தப் பட்டியலில் 235வது இடத்தைப் பிடித்திருப்பது பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. இதற்கு சென்னை மாநகராட்சின் மோசமான செயல்பாடுகளே காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். தமிழகத்தின் மற்ற நகரங்களில் திருச்சி 6வது இடத்திலும் கோயம்புத்தூர் பதினாராவது இடத்திலும் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.



குறையும் ஆக்ஸிஜன் அளவு

கடந்த இருபது ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள கடல்களில் கரைந்துள்ள ஆக்ஸிஜன் அளவு ஆபத் தான அளவில் குறைந்துவருவது தெரியவந்திருக்கிறது.

ஜார்ஜியா இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜியின் ஆய்வாளர்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கடல்களின் தரவுகளை ஆய்வுசெய்தபோது கடல்களின் ஆரோக்கியம் ஆபத்தான அளவுக்குப் பாதித்திருப்பது உறுதியாகியிருக்கிறது. 1980-களில் இருந்து கடல்களின் வெப்ப நிலை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அப்போதிலிருந்து, கடல்களில் கரைந்துள்ள ஆக்ஸிஜன் அளவு குறைய ஆரம்பித்திருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

“கடல்களில் இருக்கும் ஆக்ஸிஜனுக்கு மாறுபட்ட பண்புகள் இருக்கின்றன. அதில் மாற்றம் நடக்கும்போது இது காலநிலையிலும் மாற்றத்தை உருவாக்கும்” என்கிறார் ஜார்ஜியா இன்ஸ்ட்டியூட்டின் இணைப் பேராசிரியர் தகா இடோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x