Published : 08 Apr 2014 12:00 PM
Last Updated : 08 Apr 2014 12:00 PM

உங்கள் உடல் ஒரு கார் அல்ல- உலக சுகாதார நாள் சிறப்புக் கட்டுரை

ஒரு நகைச்சுவைக் காட்சியில் வயிற்று வலி வந்த நோயாளியைச் சுற்றிப் பல மருத்துவர்கள் நிற்பார்கள். ஒருவர் குடல் நோய் மருத்துவர், அவர் உடனடியாகக் குடல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பார். சிறுநீரக மருத்துவர் கிட்னியில் இருக்கும் கல்லை உடைக்க வேண்டும் என்றும், எலும்பு மருத்துவர் எலும்பில் உடனே பிளேட் மாட்ட வேண்டும் என்றும் சொல்வார்கள்.

இப்படி ஒவ்வொரு சிறப்பு மருத்துவரும் ஒவ்வொன்றைக் கூற நோயாளி மயங்கிவிடுவார். தற்போது இந்த நகைச்சுவை மருத்துவ உலகில், மருத்துவமனைகளில் அன்றாடம் நடக்கும் சம்பவமாக மாறிவிட்டது. குடும்ப மருத்துவர் யார், அவருடைய தேவை என்ன என்பது பற்றி மனநல மருத்துவர் ஆ.காட்சன் கவனப்படுத்தும் விஷயங்கள்:

ஒரு டாக்டரை, இவர் எங்களுடைய பேமிலி டாக்டர் என்றும், இவர்கிட்டதான் எங்க குடும்பமே மருத்துவம் பார்த்துக் கொள்வோம் என்று சொல்லக் கேள்விபட்டிருப்போம். ஆனால், ஃபேமிலி டாக்டர் என்று அழைக்கப்படும் குடும்ப மருத்துவர் யார் என்று தெரிந்துகொள்வது அவசியம்.

முன்பெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே எந்த நோயாக இருந்தாலும் நன்கு பரிச்சயமான ஒரு மருத்துவரிடம் மட்டுமே, பெற்றோர் அழைத்துச் செல்வது வழக்கம். அந்த நபரின் உடல்நிலை, அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகள், குடும்பம், பொருளாதாரச் சூழ்நிலை, எந்த மருந்து ஒத்துக்கொள்ளும், எது ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது போன்ற விவரங்கள் எல்லாம் அவருக்கு அத்துப்படியாகி இருக்கும்.

ஒருவேளை அவர் தனது மருத்துவ வரம்பை மீறிய நோயாக இருந்தால், எந்தச் சிறப்பு மருத்துவரிடம் அல்லது உயர் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் என்பதை உங்களுக்கு வழிகாட்டும் அல்லது முடிவுஎடுக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்து சொல்வார் சரி, நோய்க்கும் குடும்ப மருத்துவருக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம்.

நம்பிக்கையே அடிப்படை காரணம்

ஒரு நோயாளியின் நோயைக் கண்டறிவது மற்றும் குணப்படுத்துவதில் அந்த நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்படும் நம்பிக்கை மற்றும் புரிந்துகொள்ளலை அடிப்படையாகக் கொண்ட ஒரு உறவு தான் அடித்தளம் எனக் கூறுகிறார் எக்கிஹார்டு ஒத்மர் என்ற மருத்துவ அறிஞர். ஒரு நோயாளி மருத்துவரிடம் கொண்டுள்ள நம்பிக்கை, எதிர்பார்ப்பு, உணர்ச்சிகள்தான், மருத்துவர் - நோயாளி என்ற உறவை மேம்படுத்துவதுடன் நோய் குணமடைய ஒரு காரணியாகவும் அமையும்.

இதை உளப்பகுப்பாய்வின் தந்தை என்றழைக்கப்படும் 19-ம் நூற்றாண்டின் மனநல மருத்துவர் சிக்மண்ட் ஃபிராய்டு (Sigmund freud) தெளிவாக விளக்கியுள்ளார். தாய் - குழந்தை உறவு வளர்ச்சிக்கும், கணவன் - மனைவி உறவு |வாழ்க்கைக்கும் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு இந்த மருத்துவர் - நோயாளி உறவு என்பது மனரீதியாக மட்டுமல்ல, உடல் நோய்கள் குணமடைதலில் மருந்துகளுக்கு நிகரான முக்கியப் பங்கையும் வகிக்கிறது.

இன்றைய மருத்துவ உலகம்

இத்தகைய மதிப்பு வாய்ந்த உறவு, இன்றைக்கு வெறும் சேவை அளிப்பவர் - வாடிக்கையாளர் என்ற நிலைக்கு மாறியதற்கு இரு தரப்பினருமே பொறுப்பு தான். பெரிய மால்களில் பலரும் விண்டோ ஷாப்பிங் செய்வதைப் பார்க்கலாம்.

அது போலத்தான் பல நோயாளிகள் அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்து, ஒவ்வொரு நோய் அறிகுறிக்கும் ஒவ்வொரு சிறப்பு நிபுணரைத் தேடி மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கும் நிலை உள்ளது. திருப்திக்காக ஒரே பிரச்சினைக்குப் பல மருத்துவர்களின் ஆலோசனையை நாடும் நிலை உள்ளது. இதை ‘டாக்டர் ஷாப்பிங்' என்று சொல்லலாம்.

பின்விளைவுகள்

சுருக்கமாகச் சொன்னால் பல மெக்கானிக்குகளின் கையில் சிக்கிய காரின் கதைதான் இது. மொத்தத்தில், பரஸ்பரப் புரிந்துகொள்ளல் மற்றும் மருத்துவர் - நோயாளி இடையிலான உறவு ஏற்பட இரு பக்கத்தில் உள்ளவர்களும் வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

குடும்ப மருத்துவர் முறை மாறிவருவதால் நோய் கண்டறிவதில் காலதாமதம், வீண் அலைச்சல், பண விரயம் ஏற்படுவதுடன் மருத்துவத்தின் மீதான நம்பிக்கையும் குறைகிறது. மேலும் முன் காலங்களைக் காட்டிலும் நோயாளியின் உறவினருக்கும் மருத்துவ ஊழியருக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றத்தில் இடைவெளி அதிகரித்துள்ளதே காரணம்.

இதனால் சிறப்பு மருத்துவர்களைப் பார்ப்பதே தேவை இல்லை என்று அர்த்தமல்ல. தேவைப்படும் நேரத்தில், அது அவசியமான ஒன்றுதான். ஆனால், குடும்ப மருத்துவர் முறை என்பது, அதைக் காட்டிலும் அதிக நன்மைகள் நிறைந்த விஷயம். நவீனமயமாக்கத்தை பின்பற்றிச் சென்று, பாரம்பரியப் பழக்கங்களை நாம் மறந்து போயிருந்தாலும், நலம் பயக்கும் இந்த மருத்துவர் - நோயாளி உறவைப் பேணி காத்தால் நமது எதிர்காலச் சந்ததிகளுக்கு நல்வாழ்வு நிச்சயம்.

மனநல மருத்துவர் ஆ.காட்சன், தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x