Last Updated : 20 Jan, 2017 11:42 AM

 

Published : 20 Jan 2017 11:42 AM
Last Updated : 20 Jan 2017 11:42 AM

திரையிசைப் பயணம்: இறங்கி அடித்த இளையராஜா!

சிவபாக்கியம் அம்மாள், காளி. என். ரத்னம், சி.டி.ராஜகாந்தம் போன்றவர்களுக்குப் பிறகு நாட்டார் பாடல்களுக்குத் திரையிசையில் செல்வாக்கு சேர்த்த மூன்று பெரிய ஜாம்பவான்கள் ஜி.ராமநாதன், கே.வி. மகாதேவன், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர். கலைவாணர் காலத்தில் இதுவொரு அலையாகவே இருந்தது. நாட்டு நடப்புகளின் மூலம் உருவாக்கிய நகைச்சுவையைப் பகுத்தறிவு இயக்கத்தின் ஒரு பகுதியாகவே கலைவாணர் கையாண்டார். அவர் கையாண்ட நகைச்சுவையின் முக்கிய அங்கமாக லாவணி உள்ளிட்ட நாட்டார் பாடல்கள் இருந்தன.

கலைவாணரின் பாணியைப் புரிந்துகொண்ட ஜி.ராமநாதன் போன்ற இசைமேதைகள் நாட்டார் பாடல்களை ‘சிக்ஸ் எய்ட்’ என்று சொல்லக்கூடிய தாள கதியில் கச்சிதமாக இசையமைத்தார்கள். ஒரு கட்டத்தில் நகைச்சுவையாளருக்கு மட்டும் என்ற எல்லையைத் தாண்டி கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இதுபோன்ற பாடல்களை இசையமைக்க ஆரம்பித்தார்.

‘மதுரை வீரன்’ படத்துக்காக இசையமைத்த

“ வாங்க மச்சான் வாங்க…

வந்த வழியப் பார்த்துப் போங்க..

ஏங்கி ஏங்கி நீங்க..

ஏன் இப்படிப் பார்க்குறீங்க”

என்ற பாடல் எல்லாம் நாட்டார் இசையின் உச்சமாக உருவான கேலிப் பாடல்தான். நாட்டுப்புற இசையைப் பயன்படுத்தி அதேநேரம் கிளாசிக்கல் இசையை நாட்டுப்புற இசைவடிவத்துக்குள் கொண்டுவருகிற அற்புதத்தையும் பல பாடல்களில் கே.வி. மகாதேவன் மாமா செய்து வெற்றிபெற்றார். அப்படியொரு பாடல்தான் கவி. கா.மு.ஷெரீஃப் எழுதி டி.எம்.எஸ். குரலில் ஒலித்த ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!’ என்ற காலம் கடந்து நிற்கும் பாடல்.

ராகக் கட்டுக்கோப்பும் மெல்லிசை வருகையும்

நாட்டார் பாடல்களை ஒரு ராகக் கட்டுக்கோப்புக்குள் வடிவமைத்தவர்கள் ஜி.ராமநாதன், கே.வி. மகாதேவன் ஆகிய இருவரும்தான். அதற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்த ‘எலந்தப் பழம்ம்ம்…’ பாடலில் தொடங்கி பல பாடல்கள் உதாரணங்கள்.

இவர்களுக்குப் பிறகு எம்.எஸ்.வி. வருகிறார். அவர் ‘மெல்லிசை மன்னராக’ விளங்கியதற்கான காரணத்தைப் பாருங்கள். மிகத் தீர்க்கமாக இருந்த சங்கீதத்தை எளிதாகப் பாடுவதற்காகத் திரையில் அதை இலகுவாக்கினார். ஒலிகளை நுட்பமாகக் கையாளத் தொடங்கினார். மேலும் அவரிடம் இந்தி, இந்துஸ்தானி இசையின் தாக்கம் இருந்தது. அப்படிப்பட்டவர் துள்ளலான கிண்டல், கேலிப் பாடல்களையும் காதல் பாடல்களையும் அவற்றின் தாக்கத்தோடு இசையமைத்தார். அவற்றில் தமிழ் நாட்டுப்புற இசையின் வாசனை சுத்தமாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.

‘வருஷத்தப் பாரு அறுபத்தியாறு…

உருவத்தப் பாரு இருபத்தி ஆறு’

என்ற பாடலை எடுத்துக்கொள்ளுங்கள்... அதேபோல

‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை

ஒருவர் மடியிலே ஒருவரடி’

என்பது போன்ற பாடல்களிலும் மிகவும் கீழே இறங்காமல் கொஞ்சம் பொறுப்பாக நடந்துகொள்வார். அப்படிப்பட்டவர் எங்கள் பாவலர் சகோதரர்கள் இசைக் குழுவில் இணைந்து மக்கள் இசைப்பணியில் பங்கெடுத்துவந்த பாலமுருகன் அண்ணா நாட்டுப்புற இசையிலிருந்து உருவாக்கிய…

‘அடி என்னடி ராக்கம்மா

பல்லாக்கு நெளிப்பு

என் நெஞ்சு குலுங்குதடி

சிறு கண்ணாடி மூக்குத்தி

மாணிக்கச் செவப்பு

மச்சானை இழுக்குதடி’

- பாடலை சிறுசிறு மாற்றங்களோடு பயன்படுத்தி தானும் தமிழ் நாட்டுப்புற இசையின் காதலன் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்.

எம்.எஸ்.வி.யின் காலத்தில் தமிழ்த் திரைக்குக் கிடைக்காத நாட்டுப்புற இசையை அறுபதுகளின் இறுதியில் பல தெலுங்கு, கன்னட இசையமைப்பாளர்கள் அந்தந்த மாநிலங்களில் ஒலித்துவந்த மக்களின் பாடல்களைத் தமிழுக்குக் கொண்டுவந்தார்கள். அவர்களில் தெலுங்கிலிருந்து வந்த மாஸ்டர் வேணு என்று அழைக்கப்பட்ட இசையமைப்பாளர் வேணுகோபாலைக் குறிப்பிட வேண்டும்.

‘எங்க வீட்டு மகாலட்சுமி’ படத்தில் உடுமலை நாராயணகவி எழுதி, மாஸ்டர் வேணு இசையமைத்த ‘பட்டணம்தான் போகலாமடி பொம்பள... பணங்காசு தேடலாமடி’ என்ற பாடல் தெலுங்கு நாட்டுப்புற இசையிலிருந்து தமிழுக்குக் கிடைத்த ஒரு மாஸ்டர் பீஸ் பாடல் என்றே கூறிவிடலாம். அதேபோல கன்னடத் திரையுலகிலிருந்து அந்த மாநில மக்களின் நாட்டார் இசையைத் தமிழ்த் திரைக்குப் பல புகழ்பெற்ற பாடல்களாகக் கொடுத்தவர் ஜி.கே.வெங்கடேஷ் அண்ணா. எம்.எஸ்.வி.யிடம் உதவியாளர் இருந்த ஜி.கே.வி. அண்ணாவிடம்தான் நாங்கள் பணியாற்றினோம்.

இறங்கி அடித்த இளையராஜா

இளையராஜா அண்ணன் வந்தபிறகுதான் அசலான தமிழ் நாட்டுப்புற இசை தமிழ் திரையிசைக்குள் பெரிய பாய்ச்சலோடு வந்தது. அம்மா எங்களை மடியில் போட்டுக்கொண்டு, ‘அன்னக்கிளி உன்னத் தேடுதேஏஏஏஏஏஏஏ…’ என்ற தாலாட்டை நான்குவரி பந்தமாக இழுத்துப் பாடினார் என்றால் கண்கள் தூக்கத்தில் சொருகிக்கொண்டு செல்லும். அப்படி நாங்கள் உண்டு, உறங்கி, உழைத்துக் களித்து, விளையாடிய பாடல்கள் எல்லாமே நாட்டுப்புறப் பாடல்கள்தான். எங்கள் வாழ்க்கையே அதுவாகத்தான் இருந்தது.

அப்படிப்பட்ட நாங்கள் திரையுலகுக்கு வந்தபோது, முதன்முதலில் இசையமைத்த பாடலே ‘அன்னக்கிளி உன்னத் தேடுதே’ என்ற நாட்டுப்புறப் பாடல்தான். அம்மா எங்களுக்காகப் பாடிய தாலாட்டுப் பாடலைத்தான் காதல் பாடலாக மாற்றி இசைமைத்தார் அண்ணன். ‘அன்னக்கிளி’ படத்தில் இடப்பெற்ற ‘மச்சானப் பார்த்தீங்களா… மலவாழத் தோப்புக்குள்ளே’ பாடல் நாட்டுப்புறப் பாடலிலிருந்து உயிர்த்தெழுந்த அற்புதமான பாடல்தான்.