Published : 06 Nov 2013 03:44 PM
Last Updated : 06 Nov 2013 03:44 PM

மண்ணுக்கு வந்தனம்

சர்வதேச மகளிர் தினத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு, பெண்களுக்கு முன்னுதாரணமாகவும், பெண்கள் முன்னேற்றத்துக்குத் தூண்டுதலாகவும் இருக்கும்100 பெண்கள் கொண்ட பட்டியலைத் தி கார்டியன் பத்திரிகை வெளியிட்டது. அதில் இடம்பெற்ற 5 இந்தியப் பெண்களில் ஒருவர் வந்தனா சிவா.

உலகம் அறிந்த சூழலியல் பெண்ணியலாளரான முனைவர் வந்தனா சிவா, அத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். இது சார்ந்து அவர் எழுதிய உயிரோடு உலாவ (Staying Alive: Women, Ecology and Survival) என்ற நூல் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழிலும் அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரது சூழலியல் பார்வை காந்தியத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஆனால், வந்தனா சிவா முனைவர் பட்டம் பெற்றது எந்தத் துறையில் தெரியுமா? கனடாவில் உள்ள மேற்கு ஆண்டாரியோ பல்கலைக்கழகத்தில், குவான்டம் தியரியில். 1970களில் புகழ்பெற்ற சிப்கோ இயக்கத்தின் ஒரு பகுதியாகப் பல்லுயிர்ப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார். பல்லுயிர் பாதுகாப்பு என்பது தனித்து இயங்கும் ஒன்றல்ல, பண்பாட்டு பன்மயம், அறிவு பன்மயத்துடன் நெருக்கமான தொடர்புகொண்டது என்பதைப் புரிந்து கொண்டார்.

அந்த இயக்கத்தால் உத்வேகம் பெற்று, நவதான்யா என்ற முன்னோடி இயற்கை வேளாண் இயக்கத்தின் அமைப்பை உருவாக்கினார். இன்றைக்கு விதை சேகரிப்பாளர்கள், இயற்கை வேளாண் உற்பத்தியாளர்கள், பாரம்பரிய விதை காப்பாளர்கள் அடங்கிய இந்தியாவின் மிகப் பெரிய அமைப்பாக அது திகழ்கிறது.

1982ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற இயற்பியல் துறையைத் துறந்துவிட்டு, தனது சொந்த ஊரான டெராடூனில் அறிவியல், தொழில்நுட்ப, சூழலியல் ஆராய்ச்சி அறக்கட்டளையை (Research Foundation for Science, Technology and Ecology (India) - RFSTE) தொடங்கினார். சுற்றுச்சூழல் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களின் முறைசாராத அமைப்பாக அந்த அறக்கட்டளை செயல்படுகிறது. மக்கள் அறிவையும் அது கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

அந்த அமைப்பு தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்த பின், பசுமைப் புரட்சியின் கடுமையான விமர்சகர் ஆனார் வந்தனா. அடிப்படையில் ஒரு அறிவியலாளர் என்பதால், இந்திய வேளாண்மை, சூழலியல் பிரச்சினைகள் சார்ந்த அவரது வாதங்கள் வலுவாக வெளிப்பட்டன.

நாடே பசுமை புரட்சியைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், வேளாண்மையில் கட்டுமீறிப் பயன்படுத்தப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், வீரிய விதைகள், நவீன கருவிகளின் பயன்பாட்டைக் கேள்விக்கு உட்படுத்தினார். உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கட்டமைக்க, இந்த நவீனத் தொழில்நுட்பம் எப்படி முனைகிறது என்பதை வெளிப்படுத்தினார். அறிவியலால் இயற்கையை வெல்ல முடியாது, குறுகிய காலப் பலன்களை மட்டுமே தர முடியும். இறுதியில் நவீன அறிவியல் தோல்வியைத் தழுவும் என்பதே வந்தனாவின் முடிவு. இதை அவரது ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ நூலில் அறியலாம். அமெரிக்காவில் ரேச்சல் கார்சன் முன்வைத்த கேள்விகளைப் போல, இந்திய வேளாண்மைத் துறைக்குள் புகுத்தப்பட்ட நவீனத்துவத்தின் அடிப்படைகளை அவரது வாதம் அசைத்தது.

மரபணுப் பொறியியலை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது பசுமைப் புரட்சியையும் வந்தனா கடுமையாக எதிர்க்கிறார். மரபணுப் பொறியியல், அது உருவாக்கிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் (genetically modified organisms) ஏற்படுத்தும் சூழலியல் பாதிப்புகள், நெறிமுறை மீறல்கள் தொடர்பாகக் கவனப்படுத்தி வருகிறார்.

பி.டி கத்தரிக்கு எதிரான போராட்டங்கள் அதற்கு உதாரணம். இதன் மூலம் பன்னாட்டு வேளாண் நிறுவனங்கள் செலுத்தும் ஏகபோகம், ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் என்கிறார்.

இதற்கு மாற்றாகப் பாரம்பரிய அறிவுச் செல்வங்களை (எ.கா. வேம்பு, மஞ்சள் போன்ற மருத்துவக் குணங்கள்) தமதாக்கிக் கொள்ள முனையும் வெளிநாட்டு காப்புரிமை தாக்குதலுக்கு எதிராகவும் அவர் போராடிவருகிறார்.

நீர், நிலம், காடு, பல்லுயிரியம், வேளாண்மை போன்ற இயற்கை வளங்கள் மீதான மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் போராடியதற்காக மாற்று நோபல் பரிசு என்று அழைக்கப்படும் வாழ்வாதர உரிமை விருதை (Right to Livelihood) வந்தனா 1993ஆம் ஆண்டு பெற்றார்.

2003ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த டைம் இதழ், அந்த ஆண்டின் சுற்றுச்சூழல் நாயகியாக அவரை அடையாளம் கண்டது. ஏசியன் வீக் இதழ் ஆசியாவின் 5 வலிமையான தகவல்தொடர்பாளர்களில் ஒருவர் என்று பாராட்டியுள்ளது.

அவர் எழுதியுள்ள 20க்கும் மேற்பட்ட நூல்களில் ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’, ‘எண்ணெய் மற மண்ணை நினை’ ஆகிய நூல்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

சூழலியல் பெண்ணியலாளர்களில் வந்தனா சிவா முன்னோடியாகக் கருதப்பட்டாலும், அவரது பார்வை நிலப்பிரபுத்துவக் கொள்கைகள், இந்து சார்புக் கொள்கைகளுக்கு நெருக்கமாக இருப்பதாக விமர்சனமும் செய்யப்படுகிறது.

உணவுப் பாதுகாப்பில் பெண்களின் முக்கியத்துவம் குறித்து வந்தனா கவனப்படுத்தும் விஷயம்:

“உலகில் பெண்கள்தான் எப்பொழுதுமே உணவு உற்பத்தி செய்பவர்களாக இருந்துவருகின்றனர். இந்தியாவின் விவசாயத்தை, அதன் வழியாகச் செலுத்தப்படும் உழைப்பு, விவசாய அறிவு, விவசாயத் திறன் ஆகிய அனைத்தும் பெண்களுடையது.

உணவுச் சங்கிலியின் முதல் கண்ணியாக இருக்கும் விதையை பெண்கள்தான் பாதுகாத்து வந்திருக்கின்றனர். அவர்களுடைய ஆற்றலால்தான் விதையைப் பெருக்கவும் முடிகிறது. பாரம்பரிய உணவு பதப்படுத்தும் முறைகளிலும் (வத்தல், ஊறுகாய்) பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால், தொழிற்சாலையில் பதப்படுத்தும் உணவின் அளவை மட்டுமே அரசு கணக்கில் எடுத்துக் கொள்கிறது.”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x