Last Updated : 23 Feb, 2014 12:00 AM

 

Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM

பெண்களின் உரிமைக் குரல்

சேலம் மாவட்டம் அம்மன்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்தவர் பேராசிரியர் சரஸ்வதி. பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்ட காலகட்டத்தில், முதுநிலைக் கல்வி கற்றுத் தேர்ந்தவர். கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாகச் சமூகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர். நண்பர்களுடன் இணைந்து 80களில் பெண்ணுரிமை இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். விளிம்பு நிலை மக்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் ஆகியோருக் காகவும் போராடியிருக்கிறார். குறிப்பாக, பெண்களின் உரிமைக்காகப் பல முக்கியமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

“என் குழந்தைப் பருவத்தில் இருந்தே என் அம்மா, எப்போதும் வெள்ளைப் புடவையிலேயே எனக்குத் தெரிந்திருக்கிறாள். மற்றக் குழந்தை களின் அம்மாக்கள் எல்லாம் வண்ணப் புடவை களில் இருக்கும்போது, நம் அம்மா மட்டும் ஏன் வெள்ளைப் புடவையிலேயே இருக்கிறாள்? என என் பிஞ்சு மனது கேள்வி எழுப்பியது. இந்தக் கேள்விக்கான பதில் தேடி நிறைய வாசிக்கத் தொடங்கினேன். அப்போது பெரியார்தான் எல்லாவற்றுக்கும் எனக்கு விடை தந்தார். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால் பெண் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பது புரிந்தது. என் சமூகப் போராட்டங்களுக்குப் பெரியாரின் கருத்துகளே ஆதாரம்” என்கிறார் சரஸ்வதி.

“மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் இங்கிலாந்து அரசு, ஆசியாவில் இருந்து வரும் பெண்களுக்குக் கன்னிப் பரிசோதனை யைக் கட்டாயமாக ஆக்கியது. அதை எதிர்த்து நாங்கள் இங்குப் பெரும் போராட்டத்தை மேற் கொண்டோம். அது எங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. அது ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றி. நாங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு, அது பெரும் உற்சாகத்தை அளித்தது” என்றும் சரஸ்வதி குறிப்பிடுகிறார்.

பேராசிரியர் சரஸ்வதி களத்தில் மட்டுமல்லாமல், தொடர்ந்து தன் எழுத்து மூலமும் போராடியுள்ளார். அவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ‘பெண்களும் அரசியலும்’ என்னும் தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசுப் பணியில் இருந்துகொண்டு சமூகப் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகப் பல வழக்குகளைச் சந்தித்துள்ளார். அரசு பணியிலிருந்து அவரை நீக்க முயற்சித்த சம்பவமும் நடந்தது. அம்மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் ஓய்வுபெற்ற நீதியரசர் கிருஷ்ண ஐயர், “பெண்களுக்காகக் குரல் கொடுப்பது அவரது அடிப்படை உரிமை. அதற்காக அவரைப் பணியில் இருந்து நீக்கினால், நானே உச்ச நீதிமன்றத்தில் அவருக்காக வாதாடுவேன்” என்று கூறியது பேராசிரியர் சரஸ்வதியின் சமூகப் போராட்டத்திற்கான உண்மையான அங்கீகாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x