Published : 11 Jan 2014 12:00 AM
Last Updated : 11 Jan 2014 12:00 AM

அத்தோ கை விரலின் ருசி

பாரிமுனையிலிருந்து இரண்டாவது கடற்கரை சாலையில் அதாவது மண்ணடியில் மாலை நேரங்களில் தள்ளுவண்டியில் பெட்ரோ மாக்ஸ் விளக்குகள் ஒளியைத் தந்து கொண்டிருக்கின்றன. பெரிய சைஸ் தோசைக் கல்லில் நூடுல்ஸ், புதினா, எலுமிச்சை, முட்டை கோஸ், பூண்டு,புளி தண்ணீர், வெங்காயம் இவற்றுடன் நல்லெண்ணெய் கலந்து சுடச்சுட அத்தோ தயாராக அதை அழகிய பீங்கான் தட்டுகளில் பரிமாறுகிறார்கள்.

அத்தோ என்பது பர்மாவின் தேசிய உணவு. பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியவர்களால் இரண்டாவது கடற்கரை சாலையில் அத்தோ நூடுல்ஸ் கடைகள் நடத்தப்படுகின்றன. அத்தோவிலும் சைவம், அசைவம் இருக்கிறது. மேற்சொன்ன சமையற்குறிப்புடன் முட்டை அல்லது இறச்சியை சேர்த்தால் அது அசைவ அத்தோ.

அத்தோவுடன் வாழைத் தண்டு சூப் மற்றும் பேஜோவை சேர்த்துச் சாப்பிடலாம். பேஜோ என்பது தட்டை போலிருக்கும். இதை சூப்பில் ஊற வைத்தும் தருகிறார்கள். வாழைத் தண்டு சூப் கிட்னி மற்றும் குடலில் கல்லைக் கரைக்கக்கூடிய ஆற்றல் உள்ள மருத்துவ குணம் உடையது.

25 ஆண்டுகளுக்கு மேலாக அத்தோ செய்யும் செல்வம், தனது தந்தையிடம் இருந்து தொழிலைக் கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார். அவரது தந்தை பர்மாவில் இருக்கும்போது அத்தோ செய்யக் கற்றுக் கொண்டாராம். கைப் பக்குவம் வந்து விட்டால் யார் செய்தாலும் அத்தோ நன்றாக இருக்கும் என்கிறார் செல்வம்.

மேலும் அத்தோவின் ருசி என்பது அந்தக் கைப்பக்குவத்தில்தான் உள்ளது. சுத்தம் குறித்தான மிகுந்த அக்கறை வந்துவிட்ட இன்றைய காலகட்டத்திலும் வெறுங்கை கொண்டே அத்தோ தயாரிக்கிறார்கள். கடைக்காரர்களே உரையிட்ட கைகளால் தயாரிக்க முனைந்தாலும் வாடிக்கையாளர்கள் வெறுங்கை கொண்டு சமைப்பதைத்தான் விரும்புகிறார்கள்.

60களில் பர்மாவிலிருந்து தாயகம் திரும்பியோருக்காக அரசால் வட சென்னை பகுதிகளான வியாசர்பாடியில் பி.வி.காலனி,சாஸ்திரி நகர், சர்மா நகர், பாரதி நகர், புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் நிலங்களை ஒதுக்கியது. அவர்கள் இப்பகுதிகளில் மொய்ங்கா,பேபியோ,கவ்ஸ்வே, மொபெட்டோ போன்ற பர்மிய உணவுகளை விற்கத் தொடங்கினார்கள்.

ஒரு பிளேட் அத்தே ரூ.30ல் இருந்து ரூ. 40 வரையிலும் விற்கப்படுகிறது. இத்தொழில் அவர்களின் வாழ்வாதாரமாக ஆகியுள்ளது. குறிப்பாக மகாகவி பாரதியார் நகரில் பிரசித்து பெற்று வட சென்னையின் தனித்துவமான அடையாளமாகவே ஆகிய அவர்களின் இந்த உணவு இன்று சென்னையின் தென் பகுதிகளிலும் கிடைக்கிறது. அத்தோ உணவைத் தங்கள் விருப்ப உணவாகக் கொண்டுள்ள ஒரு இளம் தலைமுறை சென்னையில் இன்று உருவாகி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x