Published : 30 Jun 2017 10:45 am

Updated : 30 Jun 2017 10:46 am

 

Published : 30 Jun 2017 10:45 AM
Last Updated : 30 Jun 2017 10:46 AM

நண்பர்களின் ஹாட்ரிக்

திரையுலகில் போட்டி அதிகம். அதனால் போலியற்ற தோழமை அரிதினும் அரிது. இதற்கு விதிவிலக்காக இருக்கிறார்கள் திருப்பூரைச் சேர்ந்த நண்பர்கள் மூன்றுபேர். பள்ளிக் காலம் தொடங்கி கோடம்பாக்கம் வரை நட்பின் கதகதப்பைப் பத்திரமாகப் பாதுகாத்துவரும் அவர்கள் அடுத்தடுத்து மூன்று அசத்தல் வெற்றிகளைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த மூவர் ‘முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கிய ராம் குமார், ‘ இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார், ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கியிருக்கும் சரவன் ஆகியோர். தி இந்து தமிழ் அலுவலகத்துக்கு அழைத்ததும் ப்ரியமுடன் வந்து பிரத்தியேக சந்திப்பில் வெற்றியின் ரகசியம் பகிர்ந்தார்கள். அவர்கள் உடனான கலந்துரையாடலின் ஒரு பகுதி இங்கே...

சினிமா என்றாலே நட்பு என்பது நண்பர்களின் அறையோடு தங்கிவிடும் என்பார்கள். தனித் தனியே வெற்றி கொடுத்த பிறகும் உங்களுடைய நட்பு தடம் மாறாமல் இருக்கிறதே?


ராம்குமார்: ஊர் மணம்தான் காரணம். பள்ளியில் படிக்கும்போதே நான் கார்ட்டூனிஸ்ட். 2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் எனது கார்ட்டூன்களைக் கண்காட்சியாக வைத்திருந்தேன். அதைக் காணப் பார்வையாளராக வந்திருந்தார் ரவிக்குமார். “கார்ட்டூன்கள் சூப்பர், வரைந்தது யார் தம்பி?” என்னிடமே வந்து கேட்டார். நான்தான் என்றதும் சிரித்துவிட்டார். அன்று ஆரம்பித்தது எங்கள் நட்பு. சரவணனை ரவிக்குமார்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். ரவிக்குமாரும் சரவணனும் ஐந்தாம் வகுப்பில் இருந்தே நண்பர்கள்.எங்கள் மூவரையும் இணைத்தது ஊரும், கார்ட்டூனும் சினிமாவும்தான். இந்த மூன்றையும் தாண்டிய இன்னொரு அம்சம் மூவருக்குமே இயல்பான குணமாக இருந்த நகைச்சுவை உணர்வு.

ரவிக்குமார்: திருப்பூரில் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்குத் தனியே போய்க்கொண்டிருப்பேன். ராம் அறிமுகமான பிறகு சேர்ந்து செல்லத் தொடங்கினோம். அப்போது எங்கள் ஊரில் குறும்படங்களை யாருமே முயற்சிக்காத காலம். அச்சமயத்தில், ‘நம்ம ஊரில் ஒரு கார்ட்டூனிஸ்ட்டா’ என்று ஆச்சரியமாக இருந்தது. ராம் நினைத்த குறும்படத்தைத்தான் முதலில் எடுத்தோம். அனைவருமே சினிமாவில் சாதிப்போம் என்று அப்போது நாங்கள் நம்பவில்லை. நான் நூல் வியாபாரம், சரவணன் அவரது அண்ணனின் அச்சகத்தில் வேலைசெய்துகொண்டிருந்தான். ராம் கார்ட்டூனிஸ்ட் கம் டிசைனராக பணிபுரிந்து கொண்டிருந்தான். மூவருமே வேலை பார்த்துக்கொண்டே, நூல் கடையில் சந்திப்போம். ப்ளாக் டீ குடித்துக்கொண்டே சினிமாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம்.

உதவி இயக்குநராக வேலை செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்ததா?

ரவிக்குமார்: சினிமாவில் எங்களுக்கு யாரையும் தெரியாது. அப்போது சிம்புதேவன் சாரிடம் போய் உதவி இயக்குநராகச் சேர ஆசைப்பட்டவர் ராம்தான். இருவருமே கார்ட்டூனிஸ்ட். எனக்கும் உதவி இயக்குநராகப் பணியாற்ற ஆர்வம் இருந்தாலும் ‘நாளைய இயக்குநர்’ தந்த உத்வேகம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து உற்சாகத்துடன் கலந்துகொண்ட என்னைப் போன்றவர்களை அங்கே பார்த்தபோது படம் இயக்கிவிடலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. அந்த நிகழ்ச்சியில் நானும், சரவணனும் இறுதி வரை வந்தோம். ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி இல்லை என்றால் நலன் குமாரசாமியின் தொடர்பு கண்டிப்பாக எனக்குக் கிடைத்திருக்காது. சீசன் 1-ல் எனது குறும்படங்களைப் பார்த்துவிட்டுப் பேசுவார். அந்தத் தொடர்பினால் மட்டுமே ‘சூது கவ்வும்’ படத்தில் அவருடன் பணிபுரிய முடிந்தது. அதன் மூலமாக மட்டுமே சினிமாவுக்குள் நுழையும் வாய்ப்பும் கிடைத்தது.

சரவணன் எந்தக் கட்டத்தில் உங்களுடன் இணைந்தார்?

சரவணன்: அதை நானே சொல்கிறேன். எங்கள் வீட்டில் கட்டுப்பாடுகள் கொஞ்சம் அதிகம். ரவியும் ராமும் வந்து எங்கள் வீட்டில் சொல்லிவிட்டு என்னைச் சினிமா பார்க்க அழைத்துச் செல்வார்கள். ராம் முதலில் பட வாய்ப்பு கிடைத்து ‘முண்டாசுப்பட்டி’ படத்தைத் தொடங்கியபோது அதில் நான் இணை இயக்குநராகப் பணிபுரிய எங்கள் வீட்டில் போராடித்தான் என்னை அழைத்துச் சென்றார்கள். சினிமாவிலிருக்கும் அனைவருக்கும் எடுத்ததுமே இணை இயக்குநராகப் பணிபுரியும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாது. ரவி,ராம் இருவர் மீதும் எங்கள் வீட்டில் நிறைய நம்பிக்கை வைத்தார்கள். அவர்கள் இருவருடைய படமும் வெற்றியடைந்ததால் மட்டுமே, என்னையும் படம் இயக்க அனுமதித்தார்கள்.

மூன்றுபேரும் நண்பர்களாக இருந்தாலும் மூன்று வேறு வேறு வகைமையில் படங்களை எடுத்திருக்கிறீர்கள். இது திட்டமிட்ட ஒன்றா, அதுவாக அமைந்ததா?

ரவிக்குமார்: நிறைய படங்களைப் பார்த்து நிறையவே பேசுவோம். ஒவ்வொரு காட்சியையும் விவாதத்தின்போது உண்டு இல்லை என்று செய்துவிடுவோம். பத்து ஐடியாக்கள் சொன்னால் இரண்டை மட்டும்தான் பரவாயில்லை என்பார்கள். முதல் படத்தை மூவரும் சரியாகச் செய்துள்ளோம் என்றால் அதற்கு நிறைய விஷயங்களை நன்றாக இல்லை என்று ஒதுக்கித் தள்ளியதுதான் காரணம்.

ராம்: ரவி சொல்வது சரிதான்.சூப்பர் படமாக இல்லை என்றாலும் நல்ல படம் என்ற ரீதியிலாவது பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்தோம். அதனால் யார் கதைக்கான ஐடியாவைக் கூறினாலும் வெளிப்படையாக விமர்சனம் செய்யத் தொடங்கினோம்.

ரவிக்குமார்:எங்களது கதைகளின் நிறைகளை விட்டுவிட்டுக் குறைகளைத்தான் முதலில் பேசுவோம். அதிகமாக நான்தான் குறை சொல்வேன். அதனால் ராமும் சரவணனும் என்னிடம் கதையைக்கூட கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால், முதலில் குறை என் கண்ணுக்குத் தெரியும் என்று ஓட்டுவார்கள். அதற்கெல்லாம் கவலைப்படமாட்டேன். ‘இதைக் குப்பையில் போட்டுவிட்டு வேறு ஐடியா பிடி’ என்பேன்.

சரவணன்: ‘மரகத நாணயம்’ படத்துக்கெல்லாம் பெரிய சண்டையே நடந்தது. இறுதிக்கட்ட கதையில் நிறைய பணிபுரிய வேண்டும் என்று ரவிக்குமார் கூறிவிட்டான். இவர்கள் இருவரின் படங்களுமே கதையாக உருவாகித் திரையில் வந்து வெற்றியான வரை பார்த்துவிட்டேன். எதெல்லாம் மக்கள் ரசிக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. அதை வைத்து ‘மரகத நாணயம்’ கதையை எளிதாக எழுத முடிந்தது. இவர்களுடைய வெற்றியை நான் பின் தொடர்ந்தேன் என்று சொல்லலாம்.

அடுத்த படத்துக்கு ராம், ரவி இருவருமே இவ்வளவு அவகாசம் எடுத்துக்கொள்ள என்ன காரணம்?

ராம்: மூவருக்குமே வெற்றி கிடைத்துவிட்டது. முந்தைய படத்துக்கு குறைவில்லாமல், அடுத்த படம் இயக்க வேண்டும். ‘முண்டாசுப்பட்டி’ நல்ல நகைச்சுவை படம் என்ற பெயர் கிடைத்தது. அதை உடைக்க வேண்டும் என்று ரொம்ப சீரியஸாக ஒரு படம் இயக்கி வருகிறேன். அதற்கு நேர் எதிர்மறையாக இருக்கும். ‘முண்டாசுப்பட்டி’ முடித்துவிட்டு, அடுத்த கதையை 40 பேரிடம் சொன்னேன். யாருமே என்னிடமிருந்து சீரியஸான கதையை எதிர்பார்க்கவில்லை. அதற்காக 3 வருடங்கள் போராடினேன். ‘முண்டாசுப்பட்டி’ படத்துக்கு 4 தயாரிப்பாளரை மட்டும்தான் பார்த்தேன். ஆனால் தற்போது இயக்கி வரும் படத்துக்கு 40 பேரைப் பார்த்துள்ளேன். அந்த அளவுக்குக் கடினமாக இருந்தது. தயாரிப்பாளர்கள் பலர் ‘முண்டாசுப்பட்டி’ என்ற படம் வந்ததையே மறந்துவிட்டார்கள்.

சரவணன்: அனைவருமே ‘மரகத நாணயம்’ படத்தைப் பார்த்து கை தட்டி ரசித்துச் சிரித்தவுடன் கொஞ்சம் பயமாக உள்ளது. ஒரு கதையை யோசித்தேன். அதைத் தற்போது செய்யலாமா, வேண்டாமா என்று பயமாக இருக்கிறது. நல்ல கதை கிடைக்கும்வரை காத்திருப்பதில் தவறில்லை.

ரவிக்குமார்: திரைக்கதை வேலைகள் முடித்துவிட்டேன். விரைவில் படத்தைத் தொடங்க இருக்கிறேன்.

ஒரே படத்தை மூவரும் இயக்குவீர்களா?

ராம்: மூவரும் இணைந்து இயக்குவதென்றால் ப்யூர் ஹூமர் வகை எங்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

ரவிக்குமார்: ஒருவர் கதை, ஒருவர் வசனம், ஒருவர் இயக்கம் எனச் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம். காலம் அதற்கும் எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அளித்தால் கண்டிப்பாக வெற்றி தருவோம்.

மேலும் ஒருவர்

கடந்த வாரம் வெளியான ‘வெருளி’ திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை அள்ளியிருக்கிறது. இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் அமுதவாணன் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. இவரும் கோயமுத்தூரைச் சேர்ந்தவர். பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களில் பத்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவரை திரைக்கு அழைத்து வந்திருக்கிறது. “ சினிமா என்பது 99 சதவீத மக்களின் வாழ்வனுபத்துடன் தொடர்புடைய பிரச்சினையை பொழுதுபோக்குத் தன்மையுடன் அணுகவேண்டும். ‘வெருளி’ படத்தில் அப்படியொரு முக்கிய பிரச்சினையை த்ரில்லர் கதையாக மாற்றியிருந்தேன். 12 படங்களுடன் படத்தை வெளியிட வேண்டி வந்துவிட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் எங்கெங்கோ இருந்து அழைத்துப் பாராட்டுகிறார்கள். சினிமா எத்தனையோ வில்லன்களை கண்டுவிட்டது. ‘வெருளி’யில் நான் டீல் செய்திருக்கும் வில்லனை, கருவில் இருக்கும் குழந்தை உட்பட நம்மில் கடந்து செல்லாதவர்கள் என்று யாருமில்லை” என்கிறார்.நண்பர்களின் ஹாட்ரிக்இயக்குநர் ராம்இயக்குநர் ரவிக்குமார்இயக்குநர் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x