Last Updated : 12 May, 2017 08:45 AM

 

Published : 12 May 2017 08:45 AM
Last Updated : 12 May 2017 08:45 AM

ஒளிரும் நட்சத்திரம்: ராஜ்கிரண்

1. பத்தாம் வகுப்பு முடித்த கையோடு 1966-ல் 16 வயது இளைஞனாகச் சென்னை வந்தவர் ராஜ்கிரண். கிரசெண்ட் மூவீஸ் என்ற புகழ்பெற்ற படவிநியோக நிறுவனத்தில் 4 ரூபாய் 50 பைசா தினக்கூலியில் பிலிம் ரெப் வேலையில் சேர்ந்து, ‘நேர்வழி’ என்ற படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிவர். பிலிம் ரெப்பாக ராஜ்கிரண் தரும் வசூல் அறிக்கை, திரையரங்கிலிருந்து வரும் வசூல் அறிக்கை இரண்டும் துல்லியமாக ஒத்துப்போகும். இதனால் நிறுவனம் இவருக்கு 150 ரூபாயாக மாத ஊதியத்தை உயர்த்தி, பதவி உயர்வு, பணி நிரந்தரம் ஆகியவற்றை வழங்கியது.

2. திரையரங்கிலேயே தங்கியிருந்து வசூலைக் கண்காணிக்கும் வேலை என்பதால் நிறையத் திரைப்படங்களைப் பார்த்துத் தனது கதை, திரைக்கதை அறிவை வளர்த்துக்கொண்டவர். எந்தக் காட்சி, வசனத்துக்கு ரசிகர்கள் கைதட்டி, ரசித்து, அழுது, சிரித்து ரசிக்கிறார்கள் என்பதைக் குறிப்பெடுத்துக்கொண்டு அதைப் படத்தின் இயக்குநரைப் பார்க்கும்போது தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். பிலிம் ரெப்பாக இருந்தபோது “மீன் அழுத கதையம்மா நீரில் தெரியாது… என் இதயம் வடிக்கும் கண்ணீரோ உனக்குப் புரியாது” என்று பாட்டெழுதி, அதற்கு மெட்டமைத்து அவரே பாடிக் காட்டுவார். அதைத்தான் ‘தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்’ என்று டி.ராஜேந்தர் மாற்றி எழுதினார்.

3. இயக்குநர் மகேந்திரன் கதை, வசனத்தில், கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில், முத்துராமன், சுஜாதா நடித்த ‘வாழ்ந்துகாட்டுகிறேன்’படத்தின் மூலம் முதன்முதலாகத் திரைப்பட விநியோகத் தொழிலில் இறங்கினார். இவர் விநியோகித்த அனைத்தும் வெற்றிப்படங்கள். ராமராஜன் நாயகனாக நடிக்க ‘ராசாவே உன்னை நம்பி’(1988) படத்தின் மூலம் தயாரிப்பாளராக அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கினார் ராஜ்கிரண். இவர் தயாரித்த 5 படங்களில் இரண்டு 100 நாள் படங்கள். 3 வெள்ளிவிழாப் படங்கள். இவர் நடிக்க வருவதற்கு முன் தயாரிப்பாளராக இருக்கும்போதே இவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள்.

4. இளங்கோ என்ற ரசிகரின் திருமணத்துக்குச் சென்றுவிட்டு மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் திரும்பினார். பயணத்தில் ராஜ்கிரணுக்குப் பேச்சுத்துணையாக கல்யாண மாப்பிள்ளை அனுப்பிவைத்த இளைஞர்தான் வடிவேலு. சென்னை வரும்வரை ராஜ்கிரணை சிரிக்கவைத்த வடிவேலுவை தான் நாயகனாக அறிமுகமான ‘என் ராசாவின் மனசிலே’படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார். கவுண்டமணியிடம் அடிவாங்கும் காட்சியில் வடிவேலுவே கூடுதல் வசனங்களைப் போட்டு நடித்ததால் அவருக்குப் படத்தில் ‘போடா போடா புண்ணாக்கு’ பாடலைச் சேர்த்தார்.

5. ராஜ்கிரண் இளையராஜாவின் தீவிர ரசிகர். அவர் மீதிருந்த பாசத்தால் ‘என் ராசாவின் மனசிலே’ என்று தலைப்பு வைத்து, படத்தின் தலைப்புடன் இளையராஜாவின் படத்தை அச்சிட்ட முதல் தயாரிப்பாளர், இயக்குநர். ‘மேஸ்ட்ரோ’ என்று இளையராஜா கொண்டாடப்படும் முன்பு, அவருக்கு ‘ராகதேவன்’ என்ற பட்டத்தைத் தனது படங்களில் சேர்த்தார். ராஜ்கிரண் தயாரித்த அனைத்துப் படங்களுக்கும் ஒருமணி நேரத்தில் 6 பாடல்களுக்கு மெட்டமைத்துக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.

6. படத்தைப் பார்த்து விமர்சனத்தை போஸ்ட் கார்டில் எழுதச்சொல்லி அறிவித்துவிடுவார். ரசிகர்களிடமிருந்து வரும் பத்து சிறந்த விமர்சனக் கடிதங்களில் இருந்து தலா இரண்டு வரிகளைத் தேர்தெடுத்து அவற்றைத் தினசரிப் பத்திரிகைகளில் 175 நாட்கள்வரை விளம்பரமாக வெளியிடும் உத்தியைக் கையாண்டு வெற்றி கண்டவர்.

7. முதன்முதலில் தமிழ்சினிமாவில் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நாயகன் ராஜ்கிரண். ரஜினி ரூ.70 லட்சமும் கமல் ரூ.60 லட்சமும் விஜயகாந்த் ரூ.50 லட்சமும் வாங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் சில்வர் ஜூப்ளி நாயகனாக விளங்கிவந்த ராஜ்கிரணுக்கு ‘மாணிக்கம்’ படத்துக்காக 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது.

8. அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா, தாத்தா ஆகிய உருவங்களில் தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்துபோயிருக்கும் ராஜ்கிரணின் அடையாளம் வெள்ளை வெளேர் வேட்டி, சட்டை. பிரபல நிறுவனம் தங்களது வேட்டி விளம்பரத்தில் நடிக்க ஒன்றரை கோடி ரூபாய் தருவதாகக் கூறியும் நடிக்க மறுத்துவிட்டார். வேட்டி நிறுவனம் நடிக்க மறுத்த காரணத்தைக் கேட்டபோது, “எனக்கு ஒருமுறை வருமானம் வருகிறது என்பதற்காக நல்லதா கெட்டதா என எனக்குத் தெரியாத ஒரு பொருளை, என்னைக் காட்டி வாங்குங்க என்று மக்களை நம்பவைப்பது ஏமாற்று வேலைதானே. மீறி நடித்தால் அது என்னை நம்பும் மக்களுக்குச் செய்யும் துரோகம் அல்லவா?…” என்று கேட்டிருக்கிறார் ராஜ்கிரண்.

9. “நான் நடிக்கும் கதையில் அல்லது எனது கதாபாத்திரத்தில் மக்களுக்கு ஒரு செய்தி ஒளிந்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அப்படியொரு வேடம் வரும்வரை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருக்கிறேன். பணத்துக்காக குப்பைகளில் நடிக்கமுடியாது” என்று கூறும் ராஜ்கிரண், சினிமாவில் நடிக்கத் தொடங்கிய கடந்த 27 ஆண்டுகளில் 23 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

10. விருந்தோம்பலில் ராஜ்கிரண் இன்னொரு எம்.ஜி.ஆர் என்று பாராட்டுப்பத்திரம் வாசிக்கிறது திரையுலகம். சென்னை கிண்டி அருகில் உள்ள ‘டிபென்ஸ் காலனியில்’ மனைவி, மகள், மகன், மாமியாரின் தயார் ஆகியோருடன் வசித்துவரும் ராஜ்கிரணுக்கு மிகவும் பிடித்தமான உணவு கேழ்வரகுக் கூழ், வெள்ளரிக்காய் சாலட்.

நண்பரின் பார்வையில் ராஜ்கிரண்

அசலான மண்வாசனைப் படங்களை த்ரில்லர் தண்மையுடன் தந்தவர் இயக்குநர் கஸ்தூரி ராஜா. தன்னை அறிமுகப்படுத்திய ராஜ்கிரண், இன்றும் நெருக்கமான நண்பராகத் தொடர்வது பற்றி இங்கே மனம்விட்டுப் பகிர்ந்திருக்கிறார்:

ராஜ்கிரண் ஒரு சினிமாக்காரர் அல்ல. நிஜ வாழ்வில் மிக ஆபூர்வமான கதாபாத்திரம். அவரது அணுகுமுறை, தொழில்முறை, உணவுமுறை என எதை எடுத்துக்கொண்டாலும் தனது வாழ்க்கையை முறைப்படுத்தி வைத்திருக்கும் மண்ணின் மைந்தர். அவரைச் சரியாகப் புரிந்துகொண்டவர்களுக்கு அவர் பச்சைக் களிமண். எப்படிப்பட்ட சிற்பமாகவும் நீங்கள் அவரைப் வடித்துவிடலாம். புரிந்துகொள்ளாதவர்களுக்கு அவர் முரட்டுத்தனமான பாறை. இதை வைத்துத்தான் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் “அவன் உருவம்தான்டி முள்ளு மரம்…மனசு மல்லியப் பூ” என்ற வசனத்தை எழுதினேன்.

ராஜ்கிரண் எனக்குக் கடவுள் ஸ்தானத்தில் இருப்பவர். நான் உதவி இயக்குநராக இருந்தபோது என்னை யாரென்றே அவருக்குத் தெரியாது. யாருடைய சிபாரிசும் இல்லாமல், அவரிடம் சென்று, ‘கதை சொல்ல வந்திருக்கிறேன்’ என்றபோது, என்னை அழைத்துக் கதைகேட்டவர். அவரை அணுக அன்றும் இன்றும் யாருடைய பரிந்துரையும் தேவையில்லை. மனிதர்களை நேசிப்பதுபோலவே சிறந்த கதைகளை நேசிக்கக்கூடியவர். தயாரிப்பாளராக இவர் உயர்ந்தபோது, படபூஜையின்போதே இவரது படங்களின் அனைத்து ஏரியாக்களும் விற்பனையாகிவிடும். அவர் ஒரு கதையைத் தேர்வு செய்துவிட்டால், அந்தப் படம் நிச்சய வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை உருவாக்கிய ஆற்றல் மிக்கவராக இருந்தார். கதைத் தேர்வில் இன்றும் அவர் அன்னப்பறவை. எனது கதையைத் தேர்வுசெய்து எனக்கு முதல் வாய்ப்பை அவர் தந்திருக்காவிட்டால்; சாலையோரம் கடந்து செல்கிற ஒரு சாமான்ய கதாபாத்திரமாக என் வாழ்க்கை ஆகியிருக்கலாம். இளையராஜா என்கிற மேதை எனது முதல் படத்துக்கு கிடைத்திருப்பாரா என்பதும் சந்தேகம்தான்.

ராஜ்கிரணின் வெற்றிக்குப் பின்னால் அனைவரையும் ஒரேபோன்று நேசிக்கும் அவரது ஆன்மிகம் மிக முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன். இடைவேளை இல்லாமல் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தாலும் ஐந்து வேளைகளும் கடவுளைத் தொழுதுவிடுவார். தான் சார்ந்திருக்கும் இஸ்லாமே சிறந்தது என்று விவாதம் செய்யமாட்டார். அவருக்கு எம்மதமும் சம்மதம். நான் அழைத்து எங்கள் குலதெய்வக்கோயில் திருவிழாக்களுக்கு வந்திருக்கிறார். அவர் எழுதி, இயக்கி நடித்த ‘அரண்மனைக் கிளி’ படத்தில் இந்துமத ஆசாரங்களைக் கதாநாயகி கதாபாத்திரம் வழியே எளிமையாக எடுத்துக் கூறியவர்.

குடும்பத்தையும் சமூகத்தையும் நேசிக்காதவனால் உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்தமுடியாது. குடும்பம், சமூகம் இரண்டையும் நேசிக்கக் கூடிய எளிய கலைஞன் ராஜ்கிரண்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x