Last Updated : 12 Nov, 2014 12:29 PM

 

Published : 12 Nov 2014 12:29 PM
Last Updated : 12 Nov 2014 12:29 PM

சாகாவரம் பெற்ற வேதாளர்

அடர்ந்த காட்டில் ஓர் அருவி. அதைக் கடந்து சென்றால் மனித மண்டையோடு போல இயற்கையாகவே அமைந்த ஒரு கபாலக் குகை. அது ஒருவரின் வீடாக இருந்தால்...

ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் காமிக்ஸ் கேரக்டர்கள் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அவர்களைப் போல உலகில் முதன்முதலா புகழ்பெற்றிருந்த கார்ட்டூன் அதிரடி ஹீரோ யாருன்னு தெரியுமா? வேதாளர் (Phantom). மேலே சொன்னதுதான் அவரது வீடு. உலகெங்கும் ஒரே நேரத்தில் 10 கோடிக்கும் மேலான ரசிகர்கள் வேதாளர் காமிக்ஸ் படிச்சிருக்காங்க.

காமிக்ஸ் கேரக்டர்கள் முகமூடி அணியும் வழக்கம் வேதாளர் கிட்ட இருந்துதான் தொடங்குச்சு. உடலோட இறுக்கமாகப் பிடிக்கிறது (Skin Tight) மாதிரியான உடையை அணிந்த முதல் ஹீரோ வேதாளர்தான். அவருக்குப் பின்னாடிதான் காமிக்ஸ் ஹீரோக்கள் இந்த மாதிரி டிரெஸ் போட ஆரம்பிச்சாங்களாம்.

அறிமுகம்: முதல் வேதாளர் கிரிஸ்டோபர் வாக்கர், அமெரிக்காவைக் கண்டறிந்த கொலம்பஸுடன் பணிபுரிந்தவரின் மகன். 20-வது வயதில் அப்பாவுடன் கப்பலில் சென்றபோது கடற்கொள்ளை குழுவால் தாக்கப்பட்டு, கப்பல் மூழ்கிவிடுகிறது. அந்தக் கப்பலில் இருந்து தப்பிய ஒரே ஆள் வாக்கர் என்ற வேதாளர். அவரை பாந்தர் எனும் ஆப்பிரிக்கப் பிக்மி (குள்ள) இனத்தவர் காப்பாற்றுகின்றனர்.

அப்போது அநீதியையும், கொள்ளையையும் எதிர்த்துப் போராடுவதாக உறுதி எடுத்துக்கொள்கிறார் வேதாளர். அதற்குப் பிறகு வாக்கர் என்ற வேதாளரும் அவருடைய வாரிசுகளும் குற்றங்களை எதிர்த்துப் போராடும் நாயகர்களாக வலம் வருகிறார்கள். வெளியுலகைப் பொறுத்தவரையில் வாக்கரும் அவருடைய வாரிசுகளும் ஒரே ஆள் என்றே நம்புகிறார்கள். அதனால் வேதாளர் சாகாவரம் பெற்றவர் போலவும், அவரை கொல்லவே முடியாது என்ற கருத்தும் பரவியுள்ளது. இப்போதைய கதைகளில் ஹீரோவாக வருபவர் 21-வது வேதாளர். குதிரையில்தான் வேதாளர் வருவார், எப்போதும் அவருடைய நாயும் உடன் இருக்கும்.

வேதாளரின்மோதிரங்கள்: வேதாளரின் வலது கையில் இருப்பது மண்டையோட்டு சின்னம் கொண்ட கபால மோதிரம். இதன் மூலம் வேதாளர் ஒருவரைக் குத்தினால், அவரது முகத்தில் என்றுமே அழியாத சின்னமாக அது பதிந்துவிடும்.

இடது கையில் இருப்பது அனைவரும் மதிக்கும் நல்ல சின்னம். வேதாளரின் நண்பர்கள் என்று அர்த்தம் கொண்ட இச்சின்னம், காலம்காலமாக மக்களைக் காப்பாற்றும். இது எங்கே இருக்கிறதோ அங்கே வேதாளர் இருக்கிறார், அந்த இடம் அவரது பாதுகாப்பில் உள்ளது என்று அர்த்தம்.

ஈடன்தீவு: இந்தத் தீவில் உள்ள அனைத்து விலங்குகளும் ஒன்றாக வாழ்வதற்கு ஏற்பப் பயிற்சி கொடுத்திருக்கிறார் வேதாளர். இங்குள்ள விலங்குகள் அனைத்துக்கும் மீனே உணவு. வேதாளர் அப்படிப் பழக்கியுள்ளார். பால்டி என்ற வாலில்லாக் குரங்கு வேதாளரின் ஆணையை ஏற்று நிறைவேற்றும் தன்மை கொண்டது.

புதியவீடு: திருமணத்துக்குப் பின் மனைவி டயானாவுக்காக, காட்டுக்கும் - நகருக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் மரங்களின் உச்சியில் முழுக்க முழுக்க மரத்தால் கட்டப்பட்ட வீட்டில் வசிக்கிறார் வேதாளர். 1996ஆம் ஆண்டு வேதாளரை ஹீரோவாகக் கொண்ட முதல் சினிமா ‘தி ஃபேண்டம்' வெளியானது. இப்போது செல்போன் வீடியோ கேம் வடிவிலும்கூட வேதாளர் வந்துகொண்டு இருக்கிறார்.

உருவாக்கியவர்: அமெரிக்க எழுத்தாளர் லீ ஃபாக்

முதலில் தோன்றிய தேதி: 17-02-1936

பெயர்: கிட் வாக்கர் (வேதாள மாயாத்மா, சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி, கீழ்த்திசையின் காவலர்)

மனைவி: டயானா பாமர் (இவர்களுடைய திருமணத்தை இரு நாட்டு ஜனாதிபதிகள் நடத்தினர்)

குதிரையின் பெயர்: ஹீரோ

நாய்: டெவில் (இது ஒரு மலை ஓநாய்)

யானை: ஜூம்பா

சிங்கம்: கேட்டீனா (பெண் சிங்கம்)

தமிழில் வேதாளர்: 1964-ம் ஆண்டு இந்திரஜால் காமிக்ஸ் மூலம் தமிழில் அறிமுகமான வேதாளர், பின்னர்க் குமுதம் (முகமூடி), முத்து காமிக்ஸ், முத்து மினி காமிக்ஸ், ராணி காமிக்ஸ் (மாயாவி), மாலை முரசு, தேவியின் கண்மணி காமிக்ஸ், கொமிக் வேர்ல்ட் ஆகிய இதழ்களில் தமிழில் பேசியது. தமிழில் கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x