Published : 23 Aug 2016 10:25 AM
Last Updated : 23 Aug 2016 10:25 AM

கேரொலைன் ஹார்ட்டன்: கனவுகளின் ஒளிப்பதிவாளர்

இங்கிலாந்தின் லிங்கனில் உள்ள பிஷப் கிராஸெடெஸ்ட் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராக இருப்பவர் கேரொலைன் ஹார்ட்டன் (Caroline Horton). உறக்கம், கனவு, நினைவு போன்றவற்றைப் பற்றியும் குறிப்பாக நமது நனவு வாழ்க்கையின் நினைவுகளைக் கனவு எவ்வாறு தொகுக்கிறது என்பதைப் பற்றியும் ஆய்வுகள் செய்துவருகிறார். கனவுகளைப் பற்றி ஆய்வுசெய்வதற்காக ‘டிரீம்ஸ்லாப்’ என்ற ஆய்வகத்தை இந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் தொடங்கியிருக்கிறார். ‘தி கார்டியன்’ இதழில் வெளியான அவரது பேட்டியிலிருந்து...

எதைப் பற்றி ஆய்வுசெய்து கொண்டிருக்கிறீர்கள்?

நினைவுத்திறனைக் கனவுகள் எப்படி மேம்படுத்துகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறேன். நாம் தூங்கிக்கொண்டிருக்கும்போது நிறைய ஒருங்கிணைப்பு வேலைகளும் மறுவடிவம் கொடுக்கும் வேலைகளும் நடக்கின்றன. அன்றைய நாளில் நடந்தவற்றைச் சலித்தெடுத்து நினைவுகளை ஒருங்கிணைப்பதில் கனவுகள் உதவுகின்றன. அதன் மூலம் எதையெல்லாம் நாம் மறந்துபோகலாம் என்பதை முடிவுசெய்கின்றன. மேலும், நாம் நினைவில் வைத்திருக்க வேண்டியவற்றை நீண்ட கால மூளையமைப்பில் நிறுவுகின்றன. நான் நினைவுகூர்ந்தாலும் இல்லையென்றாலும் எல்லோருக்கும் கனவுகள் வருகின்றன. ஆகவே, ஒரு உளவியல் நிபுணராகக் கனவுகள் என்னைப் பெரிதும் ஈர்க்கின்றன.

சில கனவுகள் ஏன் ரொம்பவும் விசித்திரமாக இருக்கின்றன?

உறக்கத்தில் கண்கள் இப்படியும் அப்படியுமாகத் திரிந்துகொண்டிருக்கும் நிலையில்தான் (REM) கனவு வரும் என்பது தவறான நம்பிக்கை. உண்மையில், உறக்கத்தில் எல்லா கட்டங்களிலும் கனவுகள் வரும். இரவில் முதல் நான்கு மணி நேரங்களில் மிகவும் ஆழ்ந்த உறக்கம் இருக்கும். அப்போது வரும் கனவுகள் குறைந்த நேரமே நீடிக்கும். அது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையின் வழக்கமான விஷயங்கள்தான் அந்தக் கனவுகளில் வரும். முந்தைய நாளின் நிகழ்வுகளிலிருந்து எந்தெந்த நினைவுகளையெல்லாம் வலுப்படுத்திக்கொள்வது என்பதற்காகப் புத்துயிர் கொடுக்கப்பட்ட நினைவுகள்தான் அந்தக் கனவுகள்.

கண்கள் இங்குமங்குமாகத் திரியும் உறக்கத்தின்போது நமது மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்; ஆகவே, அந்தக் கட்டத்தில் வரும் கனவுகள் மிகவும் சிக்கலானவையாகவும் கதைகள் போன்றும் இருக்கும். புது நினைவுகளை மறக்காமல் இருப்பதற்காக அவற்றை வெவ்வேறு புதிய சூழல்களில் நம் மூளை வைத்துப் பார்ப்பதால் அந்தக் கனவுகள் விசித்திரமாக இருக்கின்றன. பழைய நினைவுகள் அடிக்கடி தலைதூக்குவது வழக்கம். எடுத்துக்காட்டாக, ஓர் இரவு நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்த ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் பணிபுரிந்த அலுவலகத்தின் அறையொன்றில் பேசிக்கொண்டிருப்பதுபோல் கனவில் வரலாம். கண்கள் இங்குமங்கும் திரியும் உறக்கக் கட்டத்தில் நமது மூளை கிட்டத்தட்ட விழிப்பு நிலையில் இருப்பதால் அதுபோன்ற கனவுகளையெல்லாம் நினைவுபடுத்திப் பார்ப்பதற்கு எளிதாக இருக்கிறது.

கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன?

நனவு வாழ்க்கையில் மிகவும் உணர்ச்சிகரமான அனுபவங்கள் நமக்கு ஏற்பட்டிருக்கலாம். அவற்றில் நல்லதும் இருக்கலாம், மோசமானதும் இருக்கலாம். பெரும்பாலும் அவை தொடர்பான கனவுகளே நமக்கு வருகின்றன. ஏனெனில், நினைவுகூர வேண்டிய அளவுக்கு முக்கியமானவை அவை. சில சமயம் மிகவும் திகிலூட்டுவதற்கும் அல்லது ஆபத்து ஏற்படுத்துவதற்கும் சாத்தியமுள்ள சூழல்களை நமது மூளை ஓட்டிப்பார்க்கிறது. அது போன்ற சம்பவங்கள் உண்மையில் நடந்தால் நாம் அவற்றை நல்ல விதத்தில் சமாளிப்பதற்கு ஏதுவாக நம்மை நாமே தயார்படுத்தப்படுகிறோம். கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது கியர் இயங்காமல் போவதுபோன்ற கனவுகள் இதற்கு உதாரணம். எதிர்காலத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களை நாம் சமாளிப்பதற்கு நமது கடந்த கால அனுபவங்களிடமிருந்து உதவி பெறும் செயலாகவும் இதைக் கருதலாம்.

தேர்வுகளுக்கு முன்பு, நாம் சரியாகத் தயார்படுத்திக்கொள்ளாததுபோல் நிறைய கனவுகள் வரும். விழித்துப் பார்க்கும்போதும் ‘நாம் சரியாகத் தயார்படுத்திக்கொள்ளவில்லை’ என்ற எண்ணமே மிஞ்சினால் தேர்வுக்காக மேலும் நன்றாகப் படிப்பதில் நாம் முனைப்பு காட்டுவோம் அல்லவா!

சிறுவயதில் நாம் கண்ட இடங்களும் மனிதர்களும் நம் கனவுகளில் வருவது ஏன்?

நமது பதின்பருவத்தின் இறுதியாண்டுகளிலும் இருபதையொட்டிய வயதுகளிலும் நமக்கு நடந்த சம்பவங்களைப் பற்றியே நாம் அதிகம் கனவு காண்கிறோம். அந்தப் பிராயத்தில்தான் ஏராளமான புதிய விஷயங்களை எல்லோரும் எதிர்கொள்வார்கள். முதல் தடவையாக வீட்டை விட்டுப் பிரிந்துசெல்வது, காதல் உள்ளிட்ட புது உறவுகள் ஏற்படுவதெல்லாம் அப்போதுதான். இவையெல்லாம் நிகழும் காலகட்டத்தில்தான் நாம் உச்சபட்ச நினைவுத்திறனுடன் இருப்போம். அந்த நிகழ்வுகளெல்லாம் மிகவும் உணர்ச்சிகரமானவையாகவும் இருக்கக்கூடும். ஆகவே, அவைதான் மிகவும் அழுத்தமான நினைவுகளாக நம் மூளையில் பதிந்து, பெரியவர்களான பிறகு கனவுகளில் பின்தொடர்கின்றன. பெரும்பாலும் புதிய நினைவுகளோடும் அவை கலந்துவிடுகின்றன. ஆகவே, நீங்கள் இன்னும் உங்கள் முதல் காதலுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் இல்லை.

நாம் கனவு காணும் எல்லாமே நினைவுகளோடு தொடர்பானவைதானா?

உங்கள் கனவுகளை நீங்கள் எந்த அளவுக்குப் பதிவு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு எந்தெந்த நினைவுகளிலிருந்து ஒவ்வொரு கனவும் வருகிறது என்பதை நாம் அடையாளம் கண்டுகொள்ளலாம். என் கனவுகளை நான் பல ஆண்டுகளாகப் பதிவுசெய்துவருகிறேன். அவற்றை அடையாளம் காண்பதில் நான் நன்றாகத் தேறியிருக்கிறேன். அதே நேரத்தில் சம்பந்தமே இல்லாதது போன்ற சில விஷயங்களெல்லாம் கனவில் வருகின்றன. நீங்கள் படைப்பூக்கம் கொண்ட ஒரு மனிதர் என்றால் உங்களுக்கு படைப்பூக்கமான, அதீதக் கற்பனையான கனவுகளெல்லாம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. சைக்கோஸிஸ் (psychosis) பிரச்சினை இருக்கும் நபர்களுக்கு ரொம்பவும் துண்டுதுண்டான, விசித்திரமான கனவுகள் அதிக அளவில் வரும்.

நம் கனவுகளுக்கு விளக்கம் கொடுக்க முடியுமா?

நம் அன்றாட வாழ்க்கை தொடர்பான விஷயங்களையே நாம் கனவுகாண்கிறோம். ஆகவே, ஒவ்வொரு கனவும் தனித்துவமானது, அதைக் காண்பவருக்குப் பிரத்யேகமானது. ஆகவே, பொதுவான ‘கனவு மொழி’ என்ற ஒன்றை நான் முன்மொழிய மாட்டேன். கனவைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு அறிவியலாளராக சில சமயங்களில் எங்கள் பணிகளைப் பற்றி விளக்குவது கொஞ்சம் சிரமமானதே. சில சமயங்களில் பதில் இப்படி எளிதாகவும் இருக்கலாம்: பற்கள் உதிர்ந்துபோவதுபோல் கனவு காண்பவர்கள் ஒருவேளை விழித்திருக்கும்போது எப்போதும் பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டிருக்கலாம்.

உங்கள் ஆய்வுகளை எப்படி நடத்துகிறீர்கள்?

ஆய்வுக்குட்படுத்தப்படுபவர்களின் வீடுகளில்தான் எங்களின் பெரும்பாலான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. சமீபத்திய ஆய்வொன்றில், அவர்களுக்கு ஒலிப்பதிவுக் கருவியையும் அலாரம் கடிகாரத்தையும் தந்தோம். இரண்டு இரவுப் பொழுதுகளில் வெவ்வேறு நான்கு சமயங்களில் அவர்களது கனவுகளை ஒலிப்பதிவுக் கருவியில் பதிவுசெய்யச் சொன்னோம். ஓர் இரவிலேயே கனவுகள் எப்படி மாறுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் அப்படிச் செய்தோம்.

இந்த ஆண்டு நாங்கள் தொடங்கிய ஆய்வகத்தில் ஆட்கள் தூங்கும்போது அவர்களைக் கவனிக்க மின்கடத்திகளைப் (Electrode) பயன்படுத்துகிறோம். சொகுசான படுக்கையறையும் ஜன்னல்களை அடைப்பதற்கான திரைகளும் அந்த அறையில் உண்டு. தூங்கப் போவதற்கு முன்பு எதைப் பற்றியாவது தெரிந்துகொள்ளுங்கள் என்று அவர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வோம். அவர்களுக்காக ஒரு கணினியும் வைத்திருக்கிறோம். சில சமயம் அவர்கள் எங்கள் ஆய்வகத்தைப் பற்றியே கனவுகாண ஆரம்பித்துவிடுவார்கள். இந்த ஆய்வில் இதுவரை நாங்கள் சந்தித்த ஒரே பிரச்சினை அதுதான். ஆகவே, கனவுகளைப் பற்றிய தரவுகளைச் சேகரிக்க வீடுதான் இயல்பான சூழல்.

தி கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x