Published : 29 Apr 2017 11:20 AM
Last Updated : 29 Apr 2017 11:20 AM

அமோக விளைச்சல் தரும் குள்ளரகப் பாக்கு: நின்றபடியே பறிக்கலாம்!

சாதாரணமாகப் பாக்கு மரங்கள் என்றால் 80 அடி உயரம் முதல் 100 அடி உயரத்துக்கு மேல் வளரும். ஒரு மரம் ஆண்டுக்கு மூன்று, நான்கு குலைகள் காய்க்கும். அதில் பாக்குக் காய்கள் பறிப்பதென்றால் மரம் ஏறிப் பறிப்பவர்களைத் தேட வேண்டும். ஆனால் ஆயுளில் 25 அடி உயரம் மட்டுமே வளர்ந்து, இரண்டு அடி உயரமாக இருக்கும்போதே ஆண்டுக்கு 10 குலைகளுக்கு மேல் காய்க்கக்கூடிய குள்ளப் பாக்கு மரங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

கேரள மாநிலம் அட்டப்பாடி பிரதேசத்தில் தேக்குவட்டை கிராமத்தில் தனது நிலத்தில் மட்டும் 1,000 பாக்கு மரங்களை இப்படி வளர்த்திருக்கிறார் விவசாயி ராதாகிருஷ்ணன். அத்துடன் இந்தப் பாக்கு மர நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு அளித்தும் வருகிறார்.

“2009 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலம் உடுப்பி பக்கம் விவசாயத்தில் புதுமையான விளைச்சல் குறித்து அறிந்துகொள்ள நண்பர்களுடன் சென்றிருந்தேன். அங்கு இந்தக் குள்ளப் பாக்கு மரங்களைப் பார்த்து வியந்தேன். அதை நம் நிலத்தில் பயன்படுத்திப் பார்க்கலாம் என்று 1,000 நாற்றுகளை வாங்கி வந்து நட்டேன். மூன்றாவது ஆண்டில் மரம் இரண்டு அடி வளர்ந்திருந்த நிலையிலேயே காய்ப்புக்கு வந்துவிட்டது. அதுவும் ஒன்றுக்கு மூன்று, நான்கு மடங்கு மகசூல்!” என்கிறார்.

சாதக அம்சங்கள்

“பொதுவாகப் பாக்கு மரங்கள் 80 அடி முதல் 100 அடி வரையிலான உயரத்துக்கு வளரும். 25 ஆண்டுகள் வரை ஆண்டுக்கு ஒரு முறை ஒன்று முதல் நான்கு குலைகள் தள்ளும். 25 ஆண்டுகள் கழிந்த மரங்கள் காய்ப்பு குறைய ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் விளைச்சலே இருக்காது. அதை வைத்திருப்பதும் நஷ்டம்தான். இந்தக் குள்ளரகப் பாக்கு மரம் 25 ஆண்டுகளுக்கு 25 அடி வளர்ந்தாலே பெரிய விஷயம். சாதாரண மரத்தில் இரண்டு,மூன்று மாதங்கள் மட்டுமே குலைகள் இருக்கும். ஆனால் இதுவோ எட்டு முதல் 10 மாதங்கள் குலைகள் தள்ளுகிறது, அதுவும் ஒரு முறைக்கு ஆறு முதல் ஒன்பது குலைகள் காய்க்கிறது. நாற்று வைத்து மூன்றாவது ஆண்டே விளைச்சலைப் பார்க்க முடிகிறது.

நெட்டைப் பாக்கு ரகத்தில் ஏறிப் பறிக்கக் கூலிக்கு ஆட்கள் கிடைப்பது கஷ்டம். இந்த மரத்தில் நாமே கைக்கு எட்டிய தூரத்தில் துரட்டியைக் கொண்டே பறித்துவிட முடிகிறது. பூச்சி தாக்குதல் இல்லை. அப்படியே இருந்தாலும் மரத்தில் மருந்தடிக்க ஏற வேண்டியதில்லை. கீழே இருந்தபடியே அடிக்க முடிகிறது!” என்று அதன் சாதகங்களைத் தெரிவிக்கிறார்.

பாக்கு நாற்றுப் பண்ணை

தனது தோப்பில் காய்கள் காய்த்துத் தொங்க ஆரம்பித்த காலத்திலிருந்தே, இந்தப் பாக்கு மர நாற்றுகளை உற்பத்தி செய்யும் நாற்றுப்பண்ணையையும் தொடங்கியிருக்கிறார் ராதாகிருஷ்ணன். அதை மற்ற விவசாயிகளுக்கும் அளித்துவந்துள்ளார். அட்டப்பாடி பகுதியில் பாக்கு மரத் தோப்புகள் அதிகம். எனவே, இந்தக் குள்ளரக நாற்றுகள் உற்பத்தியின்போது சாதாரணப் பாக்கு மரங்களின் மகரந்தச் சேர்க்கை நடந்து கலப்பு நடந்துவிட வாய்ப்புண்டு இல்லையா? எனவே, அந்த நிலைமை ஏற்பட்டுவிடாதிருக்க, குறிப்பிட்ட காலம் மட்டுமே இங்கே நாற்று உற்பத்தி செய்துவிட்டு, மறுபடியும் உடுப்பி சென்று அங்கிருந்து நாற்றுகளை வாங்கிவந்து விளைவிக்கிறாராம்.

“இந்தக் குள்ளரக நாற்றுகள் வாங்கும் உடுப்பி பகுதியின் அருகில் தேசியப் பூங்கா ஒன்று உள்ளது. அதைத் தாண்டி 300 முதல் 400 ஏக்கர் விவசாயப் பண்ணைகள் நிறைய உள்ளன. அதில் இந்தக் குள்ளரகப் பாக்கு மட்டுமே விளைகிறது. அதை விட்டால் ரப்பர் எஸ்டேட்கள் உள்ளன. எனவே, அங்கு கிடைக்கும் நாற்றுகளில் மற்றப் பாக்கு மரங்களின் கலப்பு மகரந்தச் சேர்க்கை நடக்க வாய்ப்பில்லை. சுத்தமாக இருக்கும்.

எனவேதான், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கே போய் நாற்று வாங்கிவந்து உற்பத்தி செய்கிறோம். இந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரம் காய்கள் நாற்றுக்காகப் போட்டிருக்கேன். ஒரு காய் உடுப்பியில் ரூ.10 க்குக் கிடைக்கும். அதை இங்கே கொண்டுவந்து மண், கவர் போட்டு ஆள்கூலி செலவு செய்து, ஓராண்டு காத்திருந்து நாற்றாக விற்கும்போது ரூ. 30 வரை வருகிறது. அட்டப்பாடியில் மட்டுமல்லாது காசர்கோடு, மலப்புரம் எனப் பல பகுதிகளிலிருந்து நிறைய பேர் இப்போது இந்த நாற்றுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கே வந்து வாங்கிச் செல்கிறார்கள்!” என்று பெருமையுடன் சொல்கிறார் ராதாகிருஷ்ணன்.

விவசாயி சி. ராதாகிருஷ்ணன் தொடர்புக்கு: 095391 28484



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x