Last Updated : 25 Jun, 2016 12:46 PM

 

Published : 25 Jun 2016 12:46 PM
Last Updated : 25 Jun 2016 12:46 PM

பரிசோதனை ரகசியங்கள் 31: அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ தெரியுமா?

ஸ்கேன்’ என்று சொன்னாலே பெரும்பாலான வர்களுக்கு வயிற்றில் எடுக்கப்படும் ஸ்கேன்தான் நினைவுக்கு வரும். இவ்வகை ஸ்கேன் ‘அல்ட்ரா சோனோகிராபி’ (Ultrasonography) என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக மருத்துவத் துறையில் பெரிய அளவில் பயன்பாட்டில் இருக்கும் முதன்மை ஸ்கேன் பரிசோதனை இதுதான். கேளா ஒலி அலைகளை (Ultra sound) பயன்படுத்தி இது எடுக்கப்படுகிறது.

பொதுவாக 20 KHz அலை அதிர்வுகளுக்கு (Frequencies) மேல் உள்ள ஒலி அலைகள் நம் காதுக்குக் கேட்பதில்லை. இந்தக் கேளா ஒலி அலைகளை உடலுக்குள் செலுத்தினால், அவை எதிரொலித்துத் திரும்பிவரும். அப்படித் திரும்பிவரும் ஒலி அலைகளைப் பிம்பங்களாக மாற்றினால், உடல் உறுப்புகளின் தன்மை தெரியும். இந்த அறிவியல் உண்மையை அடிப்படையாக வைத்து ‘அல்ட்ரா சவுண்ட்’ ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

வௌவால்கள் தங்களிடமிருந்து மிக நுண்ணிய ஒலி அலைகளைக் காற்றில் அனுப்பும். அவை திரும்பிவரும் திசையைக் கண்டறிந்து, தங்கள் இரையைத் தெரிந்துகொள்வதற்கும் இரவில் பயணப் பாதையை அமைத்துக்கொள்வதற்கும் பயன்படுத்தும். அதே அறிவியல் அடிப்படைதான் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைக்கும் பயன்படுகிறது.

செயல்படும் விதம்

பார்ப்பதற்கு டேபிளில் வைக்கப்பட்ட ஒரு கணினிப் பெட்டி மாதிரிதான் இந்த ஸ்கேன் கருவி இருக்கும். அமைப்பிலும் அளவிலும் ஒரு டார்ச் லைட்போல் இருக்கிற ‘புரோப்’ (Probe) என்னும் நுண்ணாய்வு கருவி, இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும். கேளா ஒலி அலைகளை உடலுக்குள் அனுப்பவும் உடலிலிருந்து எதிரொலித்து வரும் ஒலி அலைகளைத் திரும்பப் பெற்றுக் கணினிக்குள் அனுப்பவும் இதுதான் உதவுகிறது.

பயனாளியை டேபிளில் படுக்கவைத்துப் பரிசோதனையை ஆரம்பிக்கிறார்கள். பரிசோதிக்க வேண்டிய இடத்தில் ஒரு பசையைத் தடவுகிறார்கள். இது, அந்தப் புரோபுக்கும் சருமத்துக்கும் இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்கிறது. அப்போதுதான் ஒலி அலைகளைத் துல்லியமாக அனுப்பவும் திரும்பிப் பெறவும்முடியும். மேலும், புரோபை சருமத்தில் அழுத்தும்போது சருமம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் இந்தப் பசை உதவுகிறது. பரிசோதிக்க வேண்டிய பகுதிக்குப் புரோபை கொண்டு செல்லும்போது, அது கேளா ஒலி அலைகளை உடலுக்குள் அனுப்புகிறது. அப்போது அந்த உறுப்பிலிருந்து ஒலி அலைகள் எதிரொலித்துத் திரும்பி வருகின்றன. அவற்றைக் கணினிக்குள் அனுப்புகிறது.

இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்: திரும்பி வரும் ஒலி அலைகள் எல்லாமே ஒன்று போலிருப்பதில்லை. திசுவின் கடினத்தன்மையைப் பொறுத்து அந்த அலைகளின் அதிர்வுகள் வேறுபடும். இவற்றைக் கணினி புரிந்துகொண்டு, அவற்றை மின் சமிக்ஞைகளாக மாற்றி, உடல் உறுப்புகளை வெவ்வேறு வடிவங்களில் படங்களாகத் தயாரித்துக் கணினித் திரையில் காண்பிக்கும். இவற்றை மருத்துவர் ஆராய்ந்து நோய்களைக் கணிப்பார். மேலும், இந்தப் படங்களை ஃபிலிமில் பிரிண்ட் செய்து நோயாளியிடம் கொடுத்துவிடுவார்.

எந்த நோய்களைக் கண்டுபிடிக்கலாம்?

# பொதுவாக, வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளை ஆராய்வதற்கும் நோய்களைக் கணிப்பதற்கும் இது பெரிதும் உதவுகிறது.

# இரு பாலினத்தவருக்கும் கல்லீரல், பித்தப்பை, கணையம், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர்ப் பை ஆகிய உறுப்புகளின் தன்மையை அறிய முடியும்.

# குடல்வால் அழற்சி, குடல் கட்டிகள், குடல் புற்றுநோய், வயிற்றில் தேங்கும் நீர் போன்ற வற்றை இதன் மூலம் அறியலாம்.

# கல்லீரல் வீக்கம், கொழுப்புக் கல்லீரல், கல்லீரல் சுருக்கம், மண்ணீரல் வீக்கம் போன்ற பல பாதிப்புகளை இதில் காண முடியும்.

# பித்தப்பை அழற்சி, பித்தப்பை கற்கள், பித்தக் குழாய் அடைப்பு ஆகிய நோய்களை இதில் அறிந்துகொள்ள முடியும்.

# கணைய அழற்சி மற்றும் கணையப் புற்றுநோயைக் கண்டறிய இது உதவுகிறது.

# சிறுநீரக வீக்கம், சிறுநீரக நீர்க் கட்டி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர்ப்பை அடைப்பு ஆகியவற்றையும் இதில் கண்டறிய முடியும்.

# வயிற்றில் செல்லும் பெருந்தமனி, கீழ்ப்பெருஞ்சிரை போன்ற ரத்தக் குழாய்களின் நிலைமைகளைத் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக, பெருந்தமனி வீக்கத்தை இதில் அறியலாம்.

# ஆண்களுக்குப் புராஸ்டேட் வீக்கம் மற்றும் புற்றுநோயை அறிய உதவுகிற முதல் கட்டப் பரிசோதனை இதுதான்.

# விரைப்பை (Scrotum) மற்றும் விரைகள் (Testes) தொடர்பான எல்லா நோய்களையும் இதில் அறிய முடியும்.

# பெண்களுக்குக் கருப்பை, சூலகம் ஆகியவற்றின் அமைப்புகளையும் அவற்றின் நோய்களையும் அறிய உதவுகிறது.

# மார்பகத்தில் தோன்றும் நார்க் கட்டிகளையும் புற்றுநோய்க் கட்டிகளையும் அறிய உதவுகிறது.

# கர்ப்பிணிகளுக்கு அவசியம் செய்யப்பட வேண்டிய முதன்மைப் பரிசோதனை இதுதான். ஒரு பெண் கர்ப்பம் அடைந்துள்ளாரா என்பதில் தொடங்கி, சிசுவின் வளர்ச்சி, பிறவிக் கோளாறுகள், ஒற்றைக் குழந்தையா, இரட்டைக் குழந்தையா, பனிக்குடத்தின் தன்மை, நச்சுக்கொடியின் அமைப்பு, குழந்தை ஆணா, பெண்ணா, சுகப் பிரசவம் ஆகுமா எனப் பல விவரங்களை இதில் அறியலாம்.

# தைராய்டு சுரப்பி மற்றும் பேராதைராய்டு சுரப்பியின் அமைப்பு, வீக்கம், புற்றுநோய் போன்ற விவரங்களை இதில் அறியலாம்.

# உமிழ்நீர்ச் சுரப்பிகளின் தன்மை மற்றும் நோய்களைக் கண்டறியலாம்.

# நிணநீர் முடிச்சுகளின் வீக்கம் மற்றும் நோய்களைத் தெரிந்துகொள்ளலாம்.

# தசைகள் மற்றும் தசைநாண்களின் நிலைமையை அறிய முடியும். குறிப்பாக, தோள்பட்டை வலி, முழங்கை வலி, மணிக்கட்டு வலி போன்றவற்றுக்குக் காரணம் தெரிந்துகொள்ள முடியும்.

# திசுப் பரிசோதனை (Biopsy) செய்வதற்குத் திசுவைச் சரியான உடல் பகுதியிலிருந்து ஊசிக்குழல் மூலம் உறிஞ்சி எடுப்பதற்கு இது உதவுகிறது. முக்கியமாக, இந்தப் பரிசோதனையின்போது அருகில் உள்ள உறுப்புகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இது பெரிதும் கை கொடுக்கிறது.

# மயக்க மருத்துவர்களுக்கு மயக்க மருந்தை நரம்புகளுக்கு அருகில் சரியான இடத்தில் செலுத்துவதற்கும் (Nerve block) இது பயன்படுகிறது. உடல் பருமன் உள்ளவர்களுக்கு முதுகுத்தண்டில் மயக்க மருந்தைக் கொடுப்பதற்கு இது வழிகாட்டுகிறது.

# விபத்தில் அடிபட்டவர்களுக்கு இதயம், நுரையீரல் மற்றும் வயிற்றில் ரத்தம் கட்டியுள்ளதா என்பதை உடனடியாகத் தெரிந்துகொள்ளவும் இதுவே பெரிதும் உதவுகிறது.

# பற்களைச் சுத்தப்படுத்த பல் மருத்துவர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

தயாராவது எப்படி?

# பொதுவாக, இப்பரிசோதனைக்கு முன் தயாரிப்பு எதுவும் இல்லை.

# என்றாலும், வெறும் வயிற்றில் இப்பரிசோதனையை மேற்கொள்வது மிகவும் நல்லது. வயிற்றில் உள்ள உறுப்புகளைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள இது உதவும்.

# இப்பரிசோதனை செய்யப்படுவதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இடுப்புப் பகுதியில் உள்ள சிறுநீர்ப் பை உள்ளிட்ட உறுப்புகளைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள இது பயன்படும்.

நன்மை என்ன?

l எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்துவதில்லை என்பதால், இதில் கதிர்வீச்சு ஆபத்து துளியும் இல்லை. எக்ஸ்ரே படத்தில் காண முடியாத பல நோய்களை இதில் காணலாம்.

# மிகவும் எளிதான, வலி இல்லாத, பக்கவிளைவு எதுவும் இல்லாத. செலவு குறைந்த, விரைவாகவும் செய்துகொள்ளக்கூடிய ஸ்கேன் பரிசோதனை இதுதான்.

# இப்பரிசோதனையை எத்தனை முறை மேற்கொண்டாலும் உடலுக்குப் பாதிப்பு இல்லை.

# இந்த ஸ்கேன் கருவியை வெளியில் எங்கும் எடுத்துச் செல்ல முடியும்.

(அடுத்த வாரம்: ‘டாப்ளர் ஸ்கேன்’ தெரியுமா?)

- டாக்டர்.கு.கணேசன், கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

தொடர்புக்கு: >gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x