Last Updated : 24 Jun, 2016 12:11 PM

 

Published : 24 Jun 2016 12:11 PM
Last Updated : 24 Jun 2016 12:11 PM

இன்னுமா இந்த உலகம் நம்புது?- பிரபு தேவா சிறப்பு பேட்டி

நடனம், ஹீரோ, இயக்குநர் என்று ஒரு வலசைப் பறவையாய் இந்தியா முழுக்கப் பறந்துவரும் பிரபுதேவா இங்கே சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ‘தேவி’ என்ற படத்தின் வழியே மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். ‘‘இது தமிழ், தெலுங்கு, இந்தி மூணு மொழி படம்னு கேட்குறதுக்கும், பார்க்குறதுக்கும் ஈஸியா இருக்கும். ஆனா, ஒவ்வொரு காட்சியையும் எடுத்து முடிக்கிறதுக்குள்ள எங்க டீமுக்கு பெரிய சேலஞ்ச் இருந்துச்சு. படத்தோட சீன்ஸ் ஒவ்வொன்னும் நல்லா இருந்ததனால, அந்தப் பொறுப்பு ஷூட்டிங் ஸ்பாட்டை ஜாலியா மாத்திடுச்சு!’’ என்று உற்சாகம் பொங்கப் பேசத் தொடங்குகிறார், பிரபுதேவா.

‘தேவி’ங்கிற படத்தோட தலைப்பு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்துதே. படத்தில் உங்களோட பங்களிப்பு என்ன?

நான் ஹீரோவா நடிச்ச முதல் படத்தோட தலைப்பு ‘இந்து’. அதுவும் பெண்ணோட பேர்தான். இந்த ‘தேவி’யும் அப்படித்தான். இது பெண்ணுக்கும் முக்கியத்துவமுள்ள களம். த்ரில்லர் கலந்த குடும்பப் படம். காமெடியும், திரில் உணர்வும் ஜாலியா கதையை நகர்த்திக்கொண்டு போகும். மாடர்ன் வாழ்க்கையை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும் ஒருவனைக் கட்டி இழுத்து வந்து நம்ம ஊர் கலாச்சாரத்தோட மதிப்பு என்னன்னு சொல்றதுதான் படத்தோட கரு. அந்த ஒருவனாகத்தான் நான் நடிச்சிருக்கேன்.

முதன்முறையாக பிரபுதேவா, இயக்குநர் விஜய், தமன்னான்னு புதிய கூட்டணி அமைந்திருக்கிறது. அலைவரிசை அனுபவங்கள் எப்படி?

நல்ல டிராவல். இந்த படத்தோட கதை, அடுத்த சீன்ஸ் என்னன்னு என்னைவிட தமன்னாவுக்கு அதிகம் தெரியும். ஏன், நான் நடிக்கிற அடுத்த காட்சி என்னன்னு ஸ்பாட்ல அவங்க சொல்வாங்க. அந்த அளவுக்குக் கதையோட ஒன்றியிருந்தாங்க. அவங்களோட மேக்கப், டிரெஸ்ஸிங், நடை எல்லாமே படத்துல வித்தியாசமா இருக்கும். இதெல்லாம் அவங்களுக்கு சரியா இருக்கும்னு இயக்குநர் விஜய் தெளிவா இருந்தார். நான் டைரக்ட் பண்ணும்போது ஷூட்டிங் ஸ்பாட்ல கதகதன்னு நெருப்பு மாதிரி கோபமா இருப்பேன். அப்படியே அதுக்கு நேர் எதிர் இயக்குநர் விஜய். அவ்ளோ பொறுமைசாலி.

“எப்படிங்க இவ்ளோ பொறுமையா இருக்கீங்க?” ன்னு கேட்டிருக்கேன். “அப்படித்தான் சார்!”ன்னு சொல்லிட்டுச் சிரிச்சிப்பார். அவர் ஒரு நல்ல ரசிகர்கூட. ஏதாவது ஒண்ணு நல்லா பண்ணினா, அப்படிப் பாராட்டுவார். படத்துக்கு கேமராமேன் மனுஷ். எழுத்தாளர் ஞாநியோட பையன். ஷாருக் கான் நடித்த ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தோட கேமராமேன். அடுத்து ஹ்ரித்திக் ரோஷன் படம் பண்ணப்போறார். நல்ல உழைப்பாளி. படத்தை ஆத்மார்த்தமா எடுத்துக்கிட்டுப் பண்ணியிருக்கார்.

படத்தோட முதல் டிரெயிலர்ல உங்க அடையாளமான டான்ஸை வச்சுட்டீங்களே?

சினிமாவுக்கு வந்ததுல இருந்து மேக்கப்கூட பெருசா போட்டுக்கிட்டதில்லை. ‘தேவி’ படத்துக்கு மொத்தமா என்னோட ஹேர் ஸ்டைல் மாறுச்சு. தலைமுடிக்கு ஹீட்டர் எல்லாம் போட்டு 15 நாட்கள் ட்ரீட்மெண்ட் போச்சு. என்னோட லுக்கே வேற மாதிரி இருந்துச்சு. எல்லாத்துக்குமே இயக்குநர் விஜய்தான் காரணம். அவரேதான் “ரொம்ப நாளைக்குப் பிறகு வர்றீங்க, முதல் டிரெயிலர் உங்க ஸ்டைல் ஆஃப் டான்ஸோட விடுவோம் சார்”ன்னு சொன்னார். “டான்ஸா?” அப்படின்னு எனக்கு ஒரு பயம் இருந்துச்சு.

“இந்த கைப்புள்ளயை இன்னுமா இந்த உலகம் நம்புது!”ங்கிற வடிவேலு சார் காமெடி வசனம்தான் நினைவுக்கு வந்துச்சு. சமீபத்துல ஏர்போர்ட் போய்க்கிட்டிருந்தேன். டிராஃபிக் சிக்னல்ல பொருட்கள் வித்துக்கிட்டிருக்கிற ஒரு சின்ன பையன் என்னை பார்த்ததும் செஃல்பி எடுத்துக்கிறேன்னு கிட்ட நெருங்கினான். “சார், டிரெயிலர்ல உட்கார்ந்து ஒரு ஸ்டெப் ஆடுறீங்களே!”ன்னு சொல்லிட்டு அப்படியே ரோட்டுல உட்கார்ந்து ஆடப்போய்ட்டான். அப்போதான், ‘ஆஹா. பரவாயில்லையே டைரக்டரோட நம்பிக்கை வீண் போகலையே!’ன்னு தோணுச்சு.

“வெற்றி, தோல்வியை அடுத்தடுத்து சந்திக்கும்போது ஒரே மாதிரிதான் எடுத்துக்குறேன்”ன்னு அடிக்கடி சொல்றீங்க. இந்தப் பக்குவம் எப்போ இருந்து வந்தது?

இருபத்தெட்டு வருஷம் ஆச்சு, இந்த சினிமாக்குள்ள வந்து. யாரா இருந்தாலும் இத்தனை வருஷம் வேலை பார்க்கும்போது ஒரு பக்குவம் வரத்தான் செய்யும். வெற்றின்னு வரும்போது அதை ஜாலியா கொண்டாடிட்டு திரும்ப நார்மல் வாழ்க்கைக்குள்ள போய்டுவோம். தோல்வியை எதிர்கொள்ளும்போது அது நிறைய பேரை பாதிக்குமேங்கிற ஃபீலிங்ஸும் இருக்கும். அதையும் மீறி அடுத்துப் போராடணும். இது ஒரு புராசஸ். இதெல்லாம் 2002 ஜனவரி 11-ம் தேதி 9 மணிக்கு வந்ததுன்னு கணக்கிட்டுச் சொல்ல முடியாது. அதுவா வரும். எப்போ வரும்னு தெரியாது.

தயாரிப்பாளர் பொறுப்பு என்பது எந்த வகையில் சவாலாக இருக்கிறது?

என்னோட பேர்ல கம்பெனி இருந்தாலும், படங்களுக்குப் பணத்தைப் போட்டு அதிக அளவு மெனக்கெடுவது தயாரிப்பாளர் கணேஷ் சார்தான். என்னோட உழைப்பு கிரியேட்டிவிட்டி பக்கம் அதிகம் இருக்கும். பணம், உழைப்பு, ஹிட் என்று நிறைய இதுக்குள்ள பொறுப்பு இருக்கு. எல்லாமே எங்களுக்கு சவால்தான். கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு வேலையைப் பார்த்துட்டுவர்றோம்.

இந்திய அளவில் பிரபல இயக்குநர்களில் ஒருவரான நீங்கள், ‘பாகுபலி’, ‘2.0’ மாதிரி கோடிகளைக் கொட்டிப் படம் எடுக்கும் பயணத்தில் எப்போ இறங்கப்போறீங்க?

அந்த லெவலுக்கு நான் இன்னும் போகலைன்னு நினைக்கிறேன். போகணும். பார்க்கலாம்.

நடனத்தை மையமாக வைத்து ஒரு லைஃப் டைம் படம் கொடுக்கணும்னு ஒரு நிகழ்ச்சியில் சொன்னீங்களே?

அது இப்போதைக்கு ரொம்ப கஷ்டம். என்னைப் பார்க்க வர்றங்கள்ல நீங்க ஆக்‌ஷன் படம் பண்ணுங்கன்னு சொல்றவங்கதான் அதிகம். டான்ஸ் உலகம், அது வேற மாதிரி. அதுக்கான நேரம் அமையும்போது பார்த்துக்கலாம்.

கமல், ரஜினி, அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களோடு இணைந்து படம் இயக்குவதற்கான சூழல் சரியாக அமையாததால்தான் தமிழில் படம் இயக்கும் வேலைகள் தள்ளிப்போகிறதா?

எல்லார்கூடயும் பண்ணணும். அதுதான் ஒரு இயக்குநரோட வேலை. எல்லாம் தானா அமையும்.

“பிரபுதேவா நல்ல நடிகர். சமீபகாலமா அவரோட நடிப்பை மிஸ் பண்றேன்!’’ன்னு இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்னார். இப்போ நீங்க மீண்டும் நடிக்க வந்தாச்சு. அவரும் சமீபத்தில் ‘தெறி’ படத்தில் நடித்திருந்தார். அதைப் பார்த்தீங்களா?

படம் பார்த்தேன். மகேந்திரன் சார் மிகப் பெரிய ஆளு. அவர் எப்படி பண்ணியிருக்கார்னு சொல்ற அளவுக்கு பொசிஷன்ல நான் இல்லை. அவரோட பாராட்டை ஏத்துக்கணும். சின்ன இடைவெளிக்குப் பிறகு வர்றோம்கிறதை மனசுல வச்சிக்கிட்டுத்தான் வேலை பார்த்திருக்கோம். ‘தேவி’ல எமோஷன், ஜாலின்னு நிறைய விஷயங்கள் கொடுத்திருக்கோம். ரெண்டு நாளைக்கு முன்னாடி படத்தோட பர்ஸ்ட் ஆஃப் பார்த்தேன். ஜாலியா வந்திருக்கு. மக்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்னு நம்புறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x