Published : 11 Sep 2016 11:42 AM
Last Updated : 11 Sep 2016 11:42 AM

பணவளக் கலை: காப்பீடு எடுத்துவிட்டீர்களா?

தலைப்பு என்ன விஷயம் பேசப் போகிறோம் என்பதைச் சொல்லி விட்டது. அதனால் நேரடியாகச் சேமிப்பு பற்றிய விஷயங்களைப் பேசத் தொடங்கிவிடுவோம்.

மாதத்தின் முதல் வாரம். எல்லோருமே மளிகை பட்ஜெட்டைப் போட்டுக்கொண்டி ருப்போம். எங்கள் வீட்டில் அஞ்சறைப் பெட்டியை எடுத்து வைத்துக்கொண்டுதான் மளிகை லிஸ்ட் எழுதவே ஆரம்பிப்போம்.

சீரகம் கால் டப்பா மிச்சமிருக்கிறது. இந்த மாதம் 50 கிராம் வாங்கினால் போதும். எண்ணெய் ஒரு பாக்கெட் பிரிக்கவே இல்லை. 10 தேதிக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். அரிசி மீதி இருக்கிறது. 5 கிலோ குறைவாக வாங்குவோம். தேவைப்பட்டால் பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று அந்த மாதத்து மளிகை லிஸ்டைப் போன மாதத்தின் மிச்சம்தான் தீர்மானிக்கும்.

இதைத்தான் நான் சேமிப்பு என்கிறேன். ஆக, உங்களுக்குத் தெரிந்த விஷயத்தைத் தான் பேசப் போகிறோம். சில சொற்கள் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், உங்களுக்கு நடைமுறையில் பழகிய விஷயத்தைதான் கொஞ்சம் முறை யாகத் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

இந்தத் திட்டமிடல் இல்லையென்றால் வாழவே முடியாதா? முடியும். எந்தத் திட்டமும் இல்லாமல் பயணித்தால் ரோலர் கோஸ்டர் பயணம்போல அடித்துப் பிடித்து இலக்கை அடைந்துவிடுவோம். அதுவே முறையான திட்டமிடல் இருந்தால் மெட்ரோ ரயில் பயணம் போல இரைச்சல் இல்லாமல் போகும் வாழ்க்கை!

மளிகைக் கணக்கு மிச்சத்தை வைத்துப் பார்த்தோமானால் உங்களுக்குச் சில நூறு ரூபாய் மிஞ்சியிருக்கலாம். அதையே பணக் கணக்காகப் போட்டால் இன்னும் சில நூறு கூடுதலாக அல்லது சில நேரங்களில் ஆயிரக்கணக்கில்கூட நமக்கு மிச்சமாகலாம். அதை ஏன் தெரிந்துகொள்ளாமல் விட வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா?

வாங்க தெரிஞ்சுக்கலாம்!

பெண்களில் ஏழு வகை இருக்கிறார்கள். உடனே பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்று இலக்கியத்துக்குப் போய்விடாதீர்கள். நாம் இருப்பது பணம் தொடர்பான பகுதிக்குள். பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் கல்யாணம் ஆகாத பெண்கள், வேலைக்குச் செல்லும் கல்யாணம் ஆன பெண்கள், குடும்பத் தலைவிகள், ஓய்வூதியம் வாங்கும் வயதான பெண்கள், ஓய்வூதியம் பெறாத வயதான பெண்கள் இவர்கள்தான் நாம் சொல்லும் ஏழு வகைப் பெண்கள்.

மொத்தத்தில் பெண் என்ற இரண்டு எழுத்துக்குள் இந்த ஏழு வகைப் பெண்களையும் அடக்கிவிடலாம் என்றாலும் ஒவ்வொருவருக்கும் சொல்வதற்குத் தனித்தனியே விஷயங்கள் இருக்கின்றன. சமையல் என்பது பொதுவான வார்த்தை என்றாலும் அதற்குள் பாயசம் தொடங்கி பான் பீடா வரைக்கும் பல விஷயங்கள் இருப்பது போலத்தான் இதுவும். ஒவ்வொரு வகைப் பெண்களுக்கும் தனித்தனியே சொல்லத்தான் போகிறேன். ஆனால், அதற்கு முன்னால் சமையலைத் தொடங்கும் முன் அடுப்பு பற்ற வைப்பது போல முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அதுதான் இன்சூரன்ஸ்.

எல்லாச் சூழலிலும் நம் வருமானம் என்பது நிலையானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏதோ ஒரு கட்டத்தில் வருமான வாய்ப்பு நின்று போகும்போது குடும்பத்தைச் சிரமம் இல்லாமல் இழுத்துச் செல்வதற்கு இன்ஷ்யூரன்ஸ் மிக மிக முக்கியம்.

இன்ஷ்யூரன்ஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் கொஞ்சம் ஆண் மையச் சிந்தனையோடு அமைக்கப்பட்டிருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒரு குடும்பத்தின் தலைவனாக இருப்பவன் தன்னுடைய இழப்பின்போது தன்னைச் சார்ந்திருக்கும் குடும்பம் தவித்துப் போய், தள்ளாடாமல் தடுக்கும் வகையில் செய்து கொண்டிருக்கும் ஏற்பாடுதான் ஆயுள் காப்பீடு.

பெண்களைப் பாதுகாக்கும் உன்னதமான திட்டம் இது என்று தொடக்கத்தில் சொல்லப்பட்டாலும் ஆண்களைச் சார்ந்து இருக்க வேண்டியவர்கள் பெண்கள் என்பதைச் சொல்லக்கூடியதாகத்தான் இன்சூரன்ஸ் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பெண்கள் காப்பீடு எடுப்பது சிரமமான காரியமாக இருந்தது. ஏனென்றால் இன்ஷ்யூரன்ஸ் படிவத்தில் என்ன வேலையில் இருக்கிறீர்கள், அல்லது எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்ற ஒரு கேள்வி இருக்கும். இல்லத்தரசிகளாக மட்டும் இருப்பவர்களால் நிரப்ப முடியாத கேள்வி அது. அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால் இன்ஷ்யூரன்ஸ் எடுப்பதில் சிரமம்.

இன்றைக்குக் காலம் மாறிவிட்டது. இன்ஷ்யூரன்ஸ் எல்லோருக்கும் பொதுவானதாக மாறிவிட்டது. குடும்பத் தலைவனின் இழப்பு மட்டுமல்ல; இல்லத்தரசியின் இழப்பும் ஒரு குடும்பத்துக்கு ஈடு செய்ய முடியாததுதான் என்பதை உணர்ந்துவிட்டனர்.

பொதுவாக ஒருவருடைய மாத வருமானத்தைப் போல பத்து மடங்கு, குறைந்தபட்சம் ஐந்து மடங்கு அளவுக்காவது இன்ஷ்யூரன்ஸ் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். உழைப்புக்கு ஈடாகப் பணத்தைப் பெறுபவர்கள் இதைத் தெளிவாக முடிவு செய்துவிடலாம். தன்னுடைய உழைப்புக்குக் குடும்பத்தினரின் அன்பை மட்டுமே சம்பளமாகப் பெறும் இல்லத்தரசிகள் குடும்ப நிலவரத்தைக் கணக்கில் எடுத்து, அதற்கேற்ற தொகைக்கு இன்ஷ்யூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காப்பீடு என்பது நினைவுபடுத்த வேண்டிய விஷயம்தானே தவிர இங்கிருந்தபடியே நிர்ணயிக்க முடியாது. ஒவ்வொரு வருக்கும் இது மாறுபடக்கூடிய விஷயம். உங்கள் முதலீட்டு ஆலோசகரையோ, இன்ஷ் யூரன்ஸ் ஏஜெண்ட்டையோ தொடர்புகொள்ளுங்கள். உடனடியாக இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.

என்ன… இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட் எங்கே இருப்பாரா? பேப்பரை மடித்து வைத்துவிட்டு வாசலுக்குப் போய், நான் இன்ஷ்யூரன்ஸ் எடுக்கப் போகிறேன் என்று மட்டும் சொல்லுங்கள். வாசல் நிறைய ஆட்கள் நிற்பார்கள். அவர்களைப் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த வாரமும் அவர்கள் தயவு தேவைப்படும். ஏனென்றால் அடுத்த வாரம் நாம் மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் பற்றிப் பேசப் போகிறோம்.

(தொடர்ந்து சேமிக்கலாம்)

கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர். தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x