Last Updated : 24 Feb, 2017 10:28 AM

 

Published : 24 Feb 2017 10:28 AM
Last Updated : 24 Feb 2017 10:28 AM

திரைவெளிச்சம்: துணிவே துணை

சினிமாவில் நடிகைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் என்பது காலங்காலமாகப் பேசப்படுவரும் சங்கதிதான். முற்றாகக் களைந்தெறியப்படவேண்டிய இந்த இழிவு, இலைமறை காயாக இன்னும் தொடர்ந்துவருவது பாவனாவுக்கு நேர்ந்திருக்கும் கொடுமை வழியே வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. நல்ல சினிமாவும் கலைஞர்களும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் கேரளத்தில் இப்படி ஒரு போக்கு பெரும்பாலும் இல்லை என்று பெருமையுடன் நம்பப்பட்டுவந்த நிலையில், நடிகை பாவனா கொச்சியில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட செய்தி, அந்தப் பெருமையைக் காற்றில் பறக்க விட்டிருக்கிறது.

சினிமா ஊடக வெளிச்சத்தில் மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு நடிகைக்கே பாலியல் துன்புறுத்தல் சாதாரணமாக நடக்கிறது என்றால், சினிமாவில் உள்ள துணை நடிகைகளுக்கும் எளிய, விளிம்பு நிலையிலிருந்து சினிமாக் கனவுடன் திரையுலகுக்குள் நுழையும் பல பெண்களுக்கும் என்ன பாதுகாப்பு என இந்தச் சம்பவம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

பிரபலமாக இருப்பதால் பயனில்லை

பாவனா சம்பவத்தில் தென்னிந்தியத் திரையுலகம் தாண்டி மொத்த இந்தியத் திரையுலகும் அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதற்குக் காரணம், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார் என்பதோடு, மிகப் பிரபலமான ஒரு கதாநாயகியாக இருந்தும் அவர், கடத்தப்பட்டு அந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பதுதான். திரையில் எவ்வளவு பிரபலமாக இருக்கிறார் என்பதல்ல விஷயம்; நடிகை என்றாலே பாலியல் இச்சையோடு பார்க்கும் மனப்பாங்கு பொதுமனத்தில் ஊறியிருப்பதுதான் இதற்குக் காரணம்.

பாவனா சம்பவத்தின் பல்வேறு பார்வைகளைச் சமூக ஊடகங்கள் வழியே மக்கள் விவாதித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் இது போன்ற பாலியல் துன்புறுத்தலைப் பொறுத்துக்கொண்டு, மனதுக்குள் புதைத்துவைத்துக் குமைந்துபோவதைவிட, அதை தைரியமாக வெளிக்கொண்டு வந்ததற்காக பாவனாவைப் பாராட்டவும் செய்கிறார்கள். அவர் பட்ட காயத்துக்கு மருந்தாக எல்லாத் தரப்பிலிருந்தும் பொங்கி எழும் ஆதரவுக் குரல்களைக் காட்டிலும் பாவனாவின் துணிவே தற்போது அவருக்குத் துணையாகியிருக்கிறது.

வரலட்சுமியின் துணிச்சல் பார்வை

பாவனாவின் துணிவில் இருக்கும் போராட்டக் குணத்தை, சினிமாவில் இருக்கும், சினிமாவில் நுழைய விரும்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவைப்படும் அடிப்படையான தகுதியாகவே பார்க்க வேண்டும். நடிப்புத்திறன், தோற்றப் பொலிவு, ஆகியவற்றுடன் சினிமா பெண்களின் துணிவே முக்கியமான அழகாகப் பார்க்கப்பட வேண்டும். பாவனா காட்டிய துணிவின் விளைவாகத் தமிழ் சினிமா உலகின் முக்கியமான கதாநாயகிகளுள் ஒருவரும், மலையாளப் பட உலகில் கால்பதித் திருப்பவருமான வரலட்சுமி சரத்குமாரின் துணிவான முகநூல் பகிர்வு, ஒட்டுமொத்த சினிமாவுலகப் பெண்களின் வாக்குமூலம்போல் தமிழ்த் திரைப்பட உலகம் மீதான அதிர்ச்சியை நமக்குக் கடத்தியிருக்கிறது.

நடிகைகள் என்றாலே எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்ற பொதுப்புத்தியை மாற்றி யமைக்கும் விதத்தில் இருக்கிறது வரலட்சுமியின் துணிச்சலான குரல். நடிப்பு, நடனம், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு சார்ந்து தொழில்ரீதியாகப் பணியாற்றியவரிடமிருந்து வெளிப்பட்ட பாலியல் அழைப்பை ஒரே வெட்டாகக் கத்தரித்து, அழைப்பு கொடுத்தவரின் மூக்கை உடைத்திருக்கிறார் அவர்.

அவர் தனது பகிர்வில், “நான் ஒரு சதைப் பிண்டமாக நடத்தப்பட இந்தத் துறைக்கு வரவில்லை. எனக்கு நடிப்பு பிடிக்கும். இது நான் விரும்பித் தேர்வு செய்த தொழில். நான் கடினமாக உழைப்பேன். நன்றாகவும் வேலை செய்கிறேன். ‘பொறுத்துக்கொள் அல்லது வெளியேறு' என்பதை நான் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. பெண்களை அவமதிப்பதை நிறுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்” என்று கூறியிருக்கும் அவர், “எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பெண்களுக்குக் கற்றுத்தருவதை விட, ஆண் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தெடுங்கள்” என காட்டமாக சமூகத்தை நோக்கிக் குரல் எழுப்பியிருக்கிறார்.

பயப்படுவது கண்ணியம் ஆகாது

தென்னிந்திய சினிமாவுக்கு வெளியே இந்திய சினிமாவின் மையமாகப் பார்க்கப்படும் பாலிவுட்டில் பெண்களுக்கு எதிரான இந்தப் போக்கு எப்படியிருக்கிறது என்று ஆராய்ந்தால், அதன் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது “சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள்” என்று ஓரிரு மாதங்களுக்கு முன்பு நடிகை கங்கா ரணவத் வெளிப்படையாகவே புகார் செய்திருந்தார். தனக்கும் அப்படியான அழைப்பு பாலிவுட்டிலிருந்து வந்ததாக ‘கபாலி’பட நாயகி ராதிகா ஆப்தேவும் உறுதிசெய்தார். இந்தித் தொலைக்காட்சி நடிகை டீனா தத்தா கடந்த ஆண்டு மும்பையிலிருந்து விமானத்தில் பயணம் செய்தபோது சக பயணி ஒருவர் அவருக்குத் தந்த பாலியல் தொல்லையைப் பற்றி தைரியமாகப் புகார் அளித்தார்.

பாலிவுட் பெண்கள் சற்று முன்னதாகவே துணிவு காட்டத் தொடங்கிவிட்டார்கள். பாலியல் தொல்லைகளிலிருந்து விடுபடவும், வெளியேறவும் இதுபோன்ற அம்பலங்கள் சிறந்த வழி. பாலியல் தொல்லைக்குள்ளாக்கப்படும் நடிகைகள், அதனை வெளியே சொன்னால் அது தங்களின் கண்ணியத்தைக் குலைத்துவிடுமோ என்ற பயத்திலேயே வெளியே சொல்வதில்லை. இந்த மவுனமே பாலியல் தொல்லைகள் அதிகரிக்கவும் காரணமாக இருக்கிறது. எனவே பயந்துபோய் தொல்லைகளை மறைப்பது கண்ணியம் ஆகாது என்பதைப் பெண்கள் உணர வேண்டிய தருணம் இது.

சித்தரிப்பும் மாற வேண்டும்

பாதிக்கப்பட்ட பெண்னின் மன வேதனைக்கும் வலிக்கும் யாரும் மருந்து போட்டு ஆற்றிவிட முடியாது. இதில் சாதாரணப் பெண், பிரபலம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. திரையுலகில் நீடித்துவரும் மிகப் பழமையான கதாபாத்திரச் சித்தரிப்புகள் போலவே பாலியல் தொல்லைகளும் தொடர்கின்றன. “நிஜ வாழ்க்கையில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப் போன்று, திரைப்படக் காட்சிகளிலும் பலாத்காரம் தொடர்பான காட்சிகளில் நடிக்கும்போதும் மனதளவிலும் உடலளவிலும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறோம்” என சோனம் கபூர், ஆலியா பட் ஆகியோர் வெளிப்படையாகவே நொந்துகொண்டார்கள்.

காதல் என்ற பெயரிலும் நடனம் என்ற பெயரிலும், கதைக்கான காட்சி என்ற பெயரிலும் பெண்களைப் பண்டமாகச் சித்தரித்துவருவதை இந்தியத் திரையுலகம் மெல்ல மெல்லத் தவிர்க்க முன்வரும்போது பொதுப்புத்தியில் மட்டுமல்ல; திரையுலகிலும் இந்தத் தில்லுமுல்லுகளும் பாலியல்ரீதியான அத்துமீறல்களும் குறையத் தொடங்கும். இதுபோன்ற துன்புறுத்தல்களைத் திரையுலகிலிருந்து மட்டுமல்ல; சமூகத்திலிருந்தும் களைந்தெறிவதில் திரைப்படத் துறையினருக்கே அதிகப் பங்கிருக்கிறது.

பிற துறைகளைப் போலத் திரைத் துறையும் ஒரு தொழில்தான். எந்தத் தொழிலிலும் இருப்பதுபோல, அந்தத் தொழிலில் பணிபுரிபவர்களுக்கான உரிமைகள், சுதந்திரம், கண்ணியம் ஆகியவற்றைக் காக்க வேண்டிய பொறுப்பு அந்தத் துறைக்கு இருக்கிறது. திரைத் துறையில் அதிகாரம் மிக்க இடங்களில் இருக்கும் ஆண்களுக்கு இந்தப் பொறுப்பு கூடுதலாக உள்ளது. தங்கள் துறையின் மீதான களங்கத்தைத் தங்கள் மீதான களங்கமாகக் கருதி அவர்கள் செயலாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக அதை அம்பலப்படுத்தவும் எதிர்த்துப் போராடவும் முன்வர வேண்டும். அப்படி முன்வரும் பெண்களைத் துறையில் உள்ள ஆண்கள் ஆதரிக்க வேண்டும்.

பாவனா விஷயத்தில் நடிகர் சங்கமும் ஒருசில திரை ஆளுமைகளும் வலுவாகக் குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. பாதுகாப்பான சூழலை உருவாக்குவது, அத்துமீறல்களை அம்பலப்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவது ஆகியவை அதிகரித்தால் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்களும் பல்வேறு விதமான சுரண்டல்களும் குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x