

சமீப காலமாக ஐ.டி. துறையில் பணி நீக்க நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன. இதன் விளைவாக இளைஞர்கள் மத்தியில் எதிர்காலம் குறித்த பயம் படர்ந்துள்ளது. பள்ளிப் படிப்பு முடித்தவர்களுக்கு இளங்கலையில் எதைப் படிக்க, எதைத் தவிர்க்க என்ற அச்சம் எழுந்துள்ளது. இளங்கலை முடித்தவர்களுக்கோ அடுத்து மேற்படிப்புக்கு எதைத் தேர்ந்தெடுத்தால் வேலை கிடைக்கும் என்கிற ஐயம் ஏற்பட்டுள்ளது.
இந்த வரிசையில் மேலும் சில கேள்விகள் அடுக்கடுக்காக எழத் தொடங்கியுள்ளன. வரும் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் படிப்புகள் எவை? குறிப்பிட்ட துறையில் படிப்பை முடித்ததும் மேற்படிப்பாக எதை மேற்கொள்வது? மாணவர்களின் படைப்பாற்றல், ஆர்வத்துக்குக் களம் அமைத்துத் தரும் துறைகள் எவை? இந்த அடிப்படையில் ஆராயும்போது, மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் துறைகளில் சில இதோ.
பொதுச் சுகாதாரம் பேணுவோம்
பள்ளியில் உயிரியல் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோரின் கனவு மருத்துவப் படிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், மருத்துவப் படிப்பையும் தாண்டிப் பொது மக்களுக்குச் சேவை செய்யும் உயிரியல் சார்ந்த துறைகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று பொதுச் சுகாதாரத் துறை. நோய்த் தடுப்பு, வாழ்நாள் நீட்டிப்பு, ஆரோக்கியத்தைப் பேணுதல் இப்படிக் கூட்டு முயற்சியாகச் சமூகத்தை வளர்த்தெடுக்கும் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் துறை இது.
இந்தப் படிப்பை நேரடியாக இளங்கலைப் பொதுச் சுகாதாரம் எனத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். அல்லது, அடிப்படைப் பட்டப் படிப்புடன் பொதுச் சுகாதாரத்துக்கான முதுநிலைப் பட்டமான எம்.பி.ஹெச். (MPH) படிக்கலாம். இதைப் படிப்பவர்களுக்கு பயோ செக்யூரிட்டி, பொதுச் சுகாதார ஆய்வு, கார்ப்பரேட் மருத்துவமனை, மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள், ஆய்வு மையங்கள் ஆகியவற்றில் சிறப்பான வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி, சென்னை நோய்த்தொற்றியலுக்கான தேசிய நிறுவனம் (>http://www.nie.gov.in/) ஆகியவை இப்படிப்பை மேற்கொள்ள முதன்மையானவை. மருத்துவம், மருத்துவம் சார் அறிவியல் பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் இதனை மேற்கொள்ளலாம்.
வாங்க, விற்கப் படிக்கலாம்
வணிக உலகில் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தைப் பிடித்திருப்பது ரியல் எஸ்டேட் துறை. சொத்துகளை எப்படி, வாங்குவது, விற்பது, நிர்வகிப்பது ஆகியவற்றை முறையாகச் சொல்லித்தரும் படிப்புதான் ரியல் எஸ்டேட் மேனேஜ்மெண்ட்.
பி.பி.ஏ., படிப்பின் தொடர்ச்சியாக எம்.பி.ஏ., பாடப் பிரிவாக ரியல் எஸ்டேட் படிப்பவர்களுக்குப் பிரகாசமான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத், கோவா, இந்தூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் செயல்படும் National Institute of Construction Management and Research (>http://www.nicmar.ac.in/), உத்தரப் பிரதேசம் நொய்டாவில் உள்ள அமித்தி பல்கலைக்கழகத்தின் ரிக்ஸ் ஸ்கூல் ஆஃப் பில்ட் என்விரான்மெண்ட் துறை உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இப்படிப்பை வழங்குகின்றன. இளநிலையில் கலை, அறிவியல், பொறியியல், மேலாண்மை என எதைப் படித்திருந்தாலும், முதுநிலையில் இப்படிப்பை மேற்கொள்ளலாம்.
ஊடகத்துக்கான படைப்பாற்றல்
படைப்பாற்றலும் ஆர்வமும் உள்ளவர்களுக்கான துறைகள் விஸ்காம், மாஸ்காம். சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமன்றி ஊடகம், ஒளிப்படத் துறை, விளம்பரத் துறை, அனிமேஷன், கேமிங் என நாளுக்கு நாள் விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் துறைகள் விரிவடைந்துவருகின்றன. படிப்போடு தனித் திறமையும் சேர்ந்து கொண்டால், இதில் கை நிறையச் சம்பாதிக்கலாம்.
இந்தியாவில் விஸ்காம் படிப்புக்கான மிகச்சிறந்த கல்லூரிகள் தமிழகத்தில், குறிப்பாகச் சென்னையில் இருப்பது கூடுதல் அனுகூலம். சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, லயோலா கல்லூரி, பெங்களூரு ஜோசப் கல்லூரி போன்றவை விஸ்காம் படிக்க உகந்தவை. டெல்லி இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி போன்றவை மாஸ்காம் படிக்க உகந்தவை. இவை தவிரப் பிரபல ஊடக நிறுவனங்கள் பலவும் பிரத்யேக ஊடகத்துறைப் படிப்புகளை வழங்குகின்றன.
நிதிச் சந்தை
பொருளாதாரம், வணிகம், வணிக மேலாண்மையில் பட்டப்படிப்பு முடித்த சூட்டில், ‘செக்யூரிட்டிஸ் மார்க்கெட்ஸ்’ தொடர்பான ஒரு வருட முதுநிலைப் படிப்பை (PG programme in securities Markets - PGPSM) முடிப்பவர்களுக்கு வங்கி, காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, நிதி ஆலோசகர் துறைகளில் சிறப்பான ஊதியத்துடன் பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இளநிலைப் படிப்புடன் வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் பி.காம்., ஃபினான்ஷியல் மார்க்கெட் படிக்கலாம். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்யூரிட்டிஸ் மார்கெட்ஸ் (http://www.nism.ac.in/), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபினான்ஷியல் மேனேஜ்மெண்ட் (>http://www.nifm.ac.in/Site/Index.aspx), மும்பை பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இப்படிப்புகளை மேற்கொள்ள முதன்மையானவை.
டிஜிட்டல் பாதுகாப்புப் படை
சைபர் செக்யூரிட்டி துறையின் அவசியத்தைத் தற்போதைய ரேன்சம் மால்வேர் பீதி ஒன்றே உரத்துச் சொல்லிவிடும். இந்தியாவில் 2020-ல் அதிகம் எதிர்பார்ப்புள்ள வேலைவாய்ப்புத் துறையாக ‘சைபர் செக்யூரிட்டி அண்டு டிஜிட்டல் ஃபோரன்சிக்ஸ்’ மாறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அறிவியல், பொறியியல் பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் கூடுதலாக ‘சைபர் செக்யூரிட்டி’, ‘சைபர் லா’ தொடர்பான பட்டயப் படிப்புகள் மற்றும் முதுநிலைப் படிப்புகளை மேற்கொள்ளலாம்.
ஆபீஸ் அலுவல்
மொபைல் ஆப் டெவலப்மெண்ட் துறைக்கான நேரடி பணிவாய்ப்பு நடப்பாண்டில் சூடு பிடித்திருக்கிறது. அதிக வாய்ப்புள்ள இத்துறைக்கு ஆர்வமும் திறனும் உள்ளவர்கள் தேவைப்படுவார்கள். அறிவியல், பொறியியல் பட்டப்படிப்புடன் இணையான பட்டம் அல்லது பட்டயப்படிப்பை மொபைல் அப்ளிகேஷன் துறையில் படிக்கலாம். நேரடியாக மட்டுமன்றிப் பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் ஆன்லைன் வாயிலாகவும் இவற்றை வழங்குவது சிறப்பு. இத்துடன், கிளவுட் டெக்னாலஜி அண்டு மொபைல் அப்ளிகேஷனில் பி.டெக்., போன்றவற்றையும் பயிலலாம்.