Published : 19 Sep 2014 17:18 pm

Updated : 24 Nov 2014 14:19 pm

 

Published : 19 Sep 2014 05:18 PM
Last Updated : 24 Nov 2014 02:19 PM

வெட்டி வேரு வாசம் 1 - ஒரு நோட் புக்கும், சில கள்ள நோட்டுகளும்

1

திரைக்கதை எழுதுவது மிகவும் சவாலான ஒரு விஷயம். எதைச் சொல்ல வேண்டும் என்றாலும் ஒரு நிகழ்வின் மூலமாகவே சொல்ல வேண்டிய கட்டாயம். எங்கள் திரைக்கதைகளில் இடம்பெறும் சில நிகழ்வுகள் எங்களுக்கு நேர்ந்த உண்மையான அனுபவங்களின் மீது எழுப்பப்பட்டவை. எங்கள் அனுபவம் என்ன, அது திரையில் எப்படி காட்சியானது என்பதைக் காண்பதே…ஒரு நோட் புக்கும், சில கள்ள நோட்டுகளும்


பள்ளி இறுதி வகுப்பில் நிறைய நண்பர்கள். அவர்களில் விச்சுவும் ஸ்ரீதரும் நெருக்கமானவர்கள். சைட் அடிக்க கோயிலுக்கும் கிரிக்கெட் விளையாட பீச்சுக்கும் ஒன்றாகத்தான் போவோம். ஸ்ரீதரும், நானும் அப்பாவிகள். (அந்த சமயத்தில்). விச்சு பிஞ்சில் பழுத்தவன். முரடன். சிகரெட் பிடிக்கக் கற்றுக்கொடுத்தான். சரோஜாதேவி புத்தகங்களை அறிமுகப்படுத்தினான்.

ஒருமுறை பெரிய தெரு பிள்ளையார் கோயில் அருகே கொஞ்சம் விந்தி நடந்த இளம் பெண் ஒருத்தியைப் பார்த்து 'நடையா, இது நடையா?' என்று பாடினான். அந்தப் பெண் 'அப்பா...' என்று அலற, சாலையோரக் கடையில் சிகரெட் பற்றவைத்துக் கொண்டிருந்த போலீஸ்காரர் திரும்பி எங்களை நெருங்க, விச்சு, 'இதோ இவன்தான்..' என்று என்னைக் கை காட்டிவிட, அவர் வீசிய கை இன்னும் கன்னத்தில் வலிக்கிறது.

கடைசிப் பரீட்சை நெருங்கிக்கொண்டிருந்த நேரம். நானும் ஸ்ரீதரும் சிரமப்பட்டு முக்கியமான கேள்வி - பதில்களை பல கைடு புத்தகங்களில் இருந்து திரட்டி ஒரு நோட்புக்கில் எழுதி வைத்திருந்தோம். 'அதை என் நோட்டிலும் காப்பி பண்ணிக்கொள்கிறேன்..' என்று ஒரு நாள் விச்சு அந்த நோட்டை இரவல் வாங்கிப்போனான். அவ்வளவுதான். கேட்டபோதெல்லாம், 'இதோ, அதோ' என்றானே தவிர, திருப்பித் தரவே இல்லை.

அவனைப் பற்றி யாரிடமும் புகார் கொடுக்க முடியாது. தேர்வுகளில் காப்பி அடிப்பதற்காக வாத்தியாருக்குச் செருப்பு வாங்கிக் கொடுத்துச் சரிக்கட்டி வைத்திருந்தான்.

அந்த நோட்டை எப்படி மீட்பது? நானும் ஸ்ரீதருமாக ஒரு ஐடியா செய்தோ.

விச்சு வீட்டில் தனது உடமைகளை ஒரு மர பீரோவில் வைத்துப் பூட்டி வைத்திருப்பான். அந்த பீரோவை அவனைத் தவிர யாரும் திறக்க மாட்டார்கள். ஒரு நாள் காலை விச்சு வீட்டில் இல்லாதவேளையில் அவன் வீட்டுக்குப் போனோம். விச்சுவின் அம்மாவிடம், விஷயத்தைச் சொல்லிக் கெஞ்சினோம். அலமாரிக்கான சாவியைக் கொண்டுவந்து கொடுத்தார்.

அலமாரியில் கீழ்த்தட்டில் துணிகளின் மடிப்பில் நோட் புக் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது.

ஆனந்தக் கூத்துடன் பல்கலைக்கழக வளாகத்துக்குப் போய் நோட் புக்கைத் திறந்து பாடங்களைப் படித்துக்கொண்டிருந்தோம். அரை மணி நேரம் கழிந்திருக்கும்.

'டேய் அங்கே பார்ரா..' என்றான் ஸ்ரீதர் குரலில் திகிலுடன். பார்த்தேன்.

விச்சு ஒரு வாடகை சைக்கிளில் ஒலிம்பிக் வேகத்தில் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தான்.

வரட்டுமே. என்ன இப்போ? என்ன கெஞ்சினாலும் நோட் புக்கை அவனிடம் தருவதில்லை என்ற வைராக்கியத்துடன், அவனை அலட்சியப்படுத்திவிட்டுப் படிப்பது போல் பாவனை செய்தேன். விச்சு எங்களை நெருங்கியதும் சைக்கிளை அப்படியே தடால் என்று சரித்துவிட்டு மெக்ஸிகோ காளை போல் மூச்சிரைக்க, முகத்தில் கோபமும் ஆத்திரமுமாக என்னை நெருங்கினான்.

“எப்படிடா, என் பர்மிஷன் இல்லாம என் பீரோவைத் திறந்து நோட் புக்கை எடுத்துட்டு வந்தே?”

“அது எங்க நோட்டு. கேட்டுக் கேட்டுப் பார்த்தோம். நீ தரலை. அதான்..”

“அலமாரியில பத்து பவுன் தங்கச் சங்கிலி வெச்சிருந்தேன். அதைக் காணும். போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் குடுத்தேன்னா ஒன்னை இழுத்துட்டுப் போய், லாக்கப்ல போட்டு முட்டிக்கு, முட்டி தட்டி...”

விச்சு மேலும், மேலும் பயமுறுத்தல் அம்புகளை எய்துகொண்டே இருந்தான்.

அவன் இப்படி ஒரு கூக்ளியைப் போடுவான் என்று எதிர்பார்க்கவே இல்லை. மனத் திரையில் போலீஸ் அடி, ரத்தம், சிறைக் கம்பி என்றெல்லாம் வரிசையாக, பயங்கரமான காட்சித் துணுக்குகள் ஓட, உடல் தன்னிச்சையாக நடுங்கியது. வயிற்றில் திகில் பந்து உருண்டு மேலேறி நெஞ்சை அடைத்தது.

என்னுடைய நோட் புக்கை அவனிடமே திருப்பிக்கொடுத்தேன். குரூரமாக ஒரு சிரிப்பைச் சிந்தினான். திரும்பிப் போய்விட்டான்.

அப்படியே உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன். என்னால் அந்தச் சம்பவத்தை மறக்கவே இயலவில்லை.

’கனாக் கண்டேன்’ திரைப்படத்தில் கதாநாயகி அர்ச்சனா (கோபிகா), தனது தோழன் மதனிடம் (பிருத்விராஜ்), கணவனுக்காக (ஸ்ரீகாந்த்) வாங்கிய கடனைத் திருப்பித் தர ஊருக்குப் போய் அம்மாவிடம் கண்ணைக் கசக்கி, பணத்தைப் பெற்றுவருவாள்.

மதனின் அலுவலகத்தில் அவன் மேஜை மீது அத்தனை பணத்தையும் கொட்டிவிட்டு எழுதிக்கொடுத்த புரோ நோட்டைத் திருப்பி வாங்கிவருவாள்.

அடுத்த நாள் மதன் கையில் ஒரு பெட்டியுடன் வீடு தேடி வருவான்.

'அர்ச்சனா. நீ கொடுத்த பணத்தை பேங்க்ல கட்டலாம்னு போனேன். எல்லாம் கள்ள நோட்டுன்னு சொல்லிட்டாங்க.. ' என்று கூறி பெட்டியைத் திறந்து கள்ள நோட்டுகளை எல்லாம் கொட்டுவான்.

“பேங்க்ல போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் கொடுக்கச் சொல்றாங்க. குடுத்தா என்ன ஆகும்? நீ அம்மாகிட்டேர்ந்து வாங்கிட்டு வந்ததுன்னு சொல்லுவே. போலீஸ் உங்கம்மா கையில வெலங்கு மாட்டித் தெருத் தெருவா இழுத்துட்டுப் போவும். என்ன பண்ணலாம்? போலீஸுக்குப் போகவா? இல்ல.. அந்த புரோ நோட்டை எங்கிட்டயே திருப்பித் தர்றியா?” என்று முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு கேட்பான்.

திகிலில் உறைந்துபோகும் அப்பாவி அர்ச்சனா, முதல் நாள் அவனிடம் இருந்து வாங்கி வந்திருந்த புரோ நோட்டைக் கொண்டுவந்து அவன் முகத்தில் எறிவாள்.

’கனாக் கண்டேன்’ திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி இடம் பெற்றதற்கு பள்ளி நாட்களில் விச்சுவின் மூலமாக அடைந்த அந்த மறக்க முடியாத அனுபவமே அடிப்படை!

- வாசம் வீசும்…


வெட்டி வேரு வாசம்சினிமா தொடர்தொடர்ஒரு நோட் புக்கள்ள நோட்டுகனா கண்டேன்கோபிகாபிருத்விராஜ்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-updates

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x